2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

முத்தையன்கட்டில் ஏற்று நீர்ப்பாசனப் புனர்நிர்மாணப் பணிகள்

Super User   / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலம் வித்தியாபுரம் விவசாயக் குடியிருப்புக்கு நீர் விநியோகிப்பதற்கான 20 மில்லியன் ரூபா செலவிலான புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பமாகியுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்கான அடிக்கல்லினை வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் புதன்கிழமை (23) நாட்டினார்.

புதிய நீர்ப்பம்பி பொருத்துதல், நீர்த்தொட்டி அமைத்தல், நீர்க்குழாய்கள் பொருத்துதல், நீர் திசை திருப்பிகள் அமைத்தல், பழுதடைந்த நீர்க்கால்வாய்களை செப்பம் செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த புனர்நிர்மாண வேலைகளுக்கான நிதி வடமாகாண விசேட மீண்டெழும் நிதியூட்டத்தில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற குளமான முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து விவசாயத்துக்கு நீரை வழங்குகின்ற ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் 1965 இல் ஆரம்பிக்கப்பட்டது.

இந் நீர்ப்பாசன வசதி பெற்ற பிரதேசங்களில் படித்த வாலிபர் திட்டம், படித்த மகளிர் திட்டம் போன்றவற்றின் மூலம் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உப உணவுப்பயிர்கள் மிகப்பெருமளவுக்கு விளைவிக்கப்பட்டது.

ஆனால், போரின் காரணமாக இப்பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர நேரிட்டதால் பயிர்ச்செய்கை கைவிடப்பட்டது. ஏற்று நீர்ப்பம்பிகளும், நீர்வரத்துக் கால்வாய்களும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகின. விவசாயம் கைவிடப்பட்டதால் விவசாய நிலங்கள் பல இப்போது பற்றைக்காடுகளாகவும் மாறியுள்ளன.

இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீளவும் தத்தமது காணிகளில் மீளக்குடியேறிப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்குத் தற்போது முனைப்புக்காட்டி வருகின்றனர். இவர்களில் வித்தியாபுரம் பகுதி விவசாயிகள் 1985 ஆம் ஆண்டே இடம்பெயர நேரிட்டதால், இப்பகுதியில் நீர் விநியோகக் கட்டுமானங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. இவற்றை வித்தியாபுரம் விவசாயிகள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்துப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புனரமைப்புத் திட்டத்தின் மூலம் 35 குடும்பங்களுக்குரிய 105 ஏக்கர் விவசாய நிலமும், முல்லைத்தீவு விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான நாலரை ஏக்கர் அளவிலான விவசாயப் பண்ணையும் பாசன வசதி பெறவுள்ளன.

மேலும், முத்தையன்கட்டில் உள்ள தட்டையன் மலைக் குளத்தைப் புனரமைப்பது தொடர்பாகவும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. பன்னெடுங்காலமாகப் பராமரிப்பின்றிக் காணப்படும் இக் குளத்தின் அணைக்கட்டுகளும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் காடு மண்டிக் காணப்படுகிறது.

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் வருடாந்தக் கண்காட்சி இம்முறை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அளவில் முத்தையன்கட்டிலேயே இடம்பெறவுள்ளது. இதனால், இதற்கு முன்னதாக வித்தியாபுரம் ஏற்று நீர்ப்பாசனத்திட்டப் புனர்நிர்மாணப் பணிகளையும், தட்டையன்மலைக் குளப் புனரமைப்புப் பணிகளையும் முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்று நீர்ப்பாசன புனர்நிர்மாண அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மற்றும் தட்டையன் மலை குளப் புனரமைப்பு ஆய்வுப் பணிகளில் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.ஹால்தீன், வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சிவபாதம், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர்கள் சோ.சண்முகானந்தன், வே.பிரேம்குமார், ந.ஸ்ரீஸ்கந்தராஜா, நீர்ப்பாசனப் பொறியியலாளர் கு.செந்தூரன், பிரதி விவசாயப் பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன் ஆகியோருடன் அப்பகுதி கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--