2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'முஸ்லிம்கள் மீதான இலக்கு இன்னும் முடிந்த பாடில்லை'

Niroshini   / 2016 நவம்பர் 21 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

“ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னரும், ஆங்காங்கே சிறு சிறு சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. முஸ்லிம்கள் மீதான இலக்கு இன்னும் முடிந்த பாடில்லை என்பதையே இவை பறைசாட்டி வருகின்றன. அதிலும் குறிப்பாக, இரண்டு வாரங்களாக நாட்டில் இடம்பெற்று வரும் சம்பவங்களும், திட்டமிட்ட நடவடிக்கைகளும் ஒரு சிங்கள – முஸ்லிம் கலவரத்துக்கு தூபமிடப்படுவதைப் போன்றுள்ளது” என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்றுத் திங்கட்கிழமை  காலை அவர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இன்று நாட்டிலுள்ள சூழ்நிலையைப் புரிந்து கொண்டு முஸ்லிம்கள் மிக விழிப்பாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தப் பின்னர், அடுத்த இலக்காக முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டிருப்பதை கடந்த ஆட்சிக் காலத்தில் நாம்
நேரடியாக அவதானித்தும் அனுபவித்தும் வந்துள்ளோம்.

அதனால், என்ன விடயங்கள் நடந்தாலும் அதனை நிதானத்துடன் கையாள வேண்டியதுடன், வதந்திகள் மற்றும் வீணாகப் பரப்பப்படும் தகவல்கள் என்பவற்றைக் கண்டு உணர்ச்சிவசப்படாமல் இருந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, சமூக வலைத் தளங்களில் வீணான செய்திகளையோ அல்லது மிகப்படுத்தல்களையோ பதிவேற்றாமல், தீர ஆராய்ந்து பதிவேற்றங்களை இடுமாறும் ஆத்திரமூட்டும் வார்த்தைகள் மற்றும் பிற இனங்களை இம்சிக்கும் வகையிலான வசனங்களையும் தவிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்.

அதேபோன்று, வீணாக முஸ்லிம் தலைமைகளை விமர்சிக்காமல், அவர்களை முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தூண்டும் வகையிலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறுங்கள். எல்லா முஸ்லிம் தலைமைகளும் முஸ்லிம்களைப்
பாதுகாக்கின்ற விடயத்தில் ஒன்றுபட்டுச் செயற்பட அழைப்பு விடுங்கள்.

முஸ்லிம்கள் இந்த நெருக்கடியான சூழ்நிலையை மிகக் கவனமாகக் கடக்க வேண்டிய தேவை அனைத்து முஸ்லிம்களிடமும் உள்ளது” என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .