2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

எதிர்க்கட்சி ஆசனத்தில் இருப்பதற்கும் தயாராக உள்ளேன்: மாகாண அமைச்சர்

Super User   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை பிரதேச கோணவத்தை வடிச்சல் திட்டத்தினை இடைநிறுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் விதித்துள்ள நிபந்தனை வேடிக்கையானது என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இவ்வாறான நிபந்தனைகளை ஏற்று எனது அமைச்சுக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதனை விட தோல்வியடைந்து எதிர்க்கட்சி ஆசனத்தில் இருப்பதற்கும் தயாராக உள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மீதான வாக்கெடுப்பில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எல்.எம். நஸீர் ஆகியோர் கோணாவத்தை ஆற்றின் அபிவிருத்தி வேலைகளை உடன் நிறுத்துமாறும் இந்த கோரிக்கைக்கு இணங்காவிடின் வாக்களிக்க முடியாது என தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண அமைச்சர் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான நஸீர், தவம் ஆகியோர் அட்டாளைச்சேனை கோணாவத்தை வடிச்சல் திட்டத்தை உடனடியாக நிறுத்துவதாக வாக்குறுதியளிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளமை குறித்து மிகவும் கவலைப்படுகின்றேன்.

அட்டாளைச்சேனை கோணவத்தை வடிச்சல் திட்டம் சுமார் 8,500 ஏக்கர் நெற் காணிகளின் வடிச்சல் திட்டமாகும். இயற்கையான கோணவத்தை ஆறு இருந்தமையினால்தான் சுனாமியின் போது அட்டாளைச்சேனை மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டன.
கோணாவத்தை ஆறு இல்லை என்றால் பெரும் உயிர்;ச் சேதம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும்.

இயற்கையான நீர்ப்பாசன திட்டங்களான ஆறு, குளங்கள் பாதுகாகக்கப்பட வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது. இந்த விடயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.கோணாவத்தை இரு கரைகளிலும் வாழும் மக்கள் ஆதரவுடன் மத்திய நீர்ப்பாசன அதிகாரிகள், மாகாண நீர்ப்பாசன அதிகாரிகள், கரையோர பாதுபாப்பு பணியக  பணிப்பாளர், சுற்றாடல் அதிகார சபை, பிரதேச செயலாளர், கோணாவத்தை அபிவிருத்தி குழு, விவசாயக் குழு என்பன இவ்வடிச்சல் திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றன.

இப்பிரதேச வடிச்சல் திட்டம், வாழ்வாதாரம், மீன்பிடித்துறை வளர்ச்சி, உல்லாசத்துறை, படகுச்சேவை போன்ற துறைகள் பாரிய வளர்ச்சி ஏற்படக்கூடிய திட்டம் நீர்ப்பாசன வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனை இடைநிறுத்துமாறு எனது அமைச்சின் வாக்கெடுப்பு நடக்க இருக்கும் இறுதி நேரத்தில் நிபந்தனை விதிப்பதனை என்னால் ஏற்கொள்ள முடியாது. கோணவத்தை வடிச்சல் திட்டத்தினை இடைநிறுத்தி எனது அமைச்சின் வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதினை விட எமது அமைச்சின் வாக்கெடுப்பில் தோல்வியடைந்து எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வதற்கு நான் தயாராக உள்ளேன்.

கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸின் 07 உறுப்பினர்கள் உள்ள போதிலும் ஹஸன் மௌலவி சுகவீனம் காரணமாக விடுமுறையில் உள்ளார். தற்போது 06 உறுப்பினர்களே சமூகம் தருகின்றனர்.கிழக்கு மாகாண சபையில் தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் 03 பேரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 03 பேரும் இணைந்து மொத்தமாக 06 உறுப்பினர்கள் உள்ளோம் என்பதினை சிலர் மறந்து செயற்படுகின்றனர்.

அமைச்சின் வாக்கெடுப்பு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நமது எதிர்கால சந்ததியினரின் பொருளாதார, வாழ்வாதார வளர்ச்சிக்கு உதவும் கோணாவத்தை வடிச்சல் திட்டத்தினை நிறுத்த முடியாது.கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு தினத்தை ஒதுக்கி இந்த வடிச்சல் திட்டத்தினை பார்வையிடுவதற்கு வருகை தர வேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன்.

இதேவேளை சபையில் உரையாற்றிய சபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரன் அம்பாறை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளில் தமிழ் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். இதனைக் கேட்டு மிகவும் மனம் வருந்துகின்றேன். எனக்கு கிடைத்துள்ள இந்த அமைச்சு பதவி ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகள் மாத்திரம் மேற்கொள்ளாது கிழக்கின் வாழும் மூவீன மக்கள் மத்தியில் நிரந்தரமான இன உறவுகளை வளர்க்க வேண்டும் என தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமட உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் கனவாகும்.

இந்த வழிகாட்டலில் கிழக்கு மாகாணத்தில் நாம் சிறந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். எமது அமைச்சின் எல்லா நிதிகளும் முடிந்தளவு மூன்று மாவட்டத்தில் வாழும் மூவின மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் நாம் செயற்பட்டு வருகின்றோம்.

அம்பாறை மாவட்டத்தில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, காரைதீவு, கல்முனை தமிழ் பிரிவு, நாவிதன்வெளி, பொத்துவில் பிரதேசங்களை சேர்ந்த தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக எமது அமைச்சின் நிதி 600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

திராய்க்கேணி, தங்கவேலாயுதபுரம், இன்ஸ்பெக்டர் ஏத்தம், ஆலையடிவேம்பு ஆகிய கிராமங்களின் அபிவிருத்திக்கும்  நாம் உதவி செய்து வருகின்றோம். நாவிதன்வெளி பிரதேசத்தை ஜெய்கா திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வீதி, நீர்ப்பாசனம், நீர் வழங்கல் திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளது. மட்டக்களப்பு மற்றும் திருமலை மாவட்டங்களின் தமிழ் பிரதேசங்களுக்கு முடியுமான வரை எமது அமைச்சின்  நிதி ஒதுக்கீட்டின் மூலம் வரலாற்று அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

குறிப்பாக நீலப் பணிச்சங்குளப் பிரதேசத்தில் தமிழ் மக்களின் விவசாயக் காணிகளை மீட்டுக் கொடுத்து பாரிய நிதியினை ஒதுக்கி நீலப்பணிச்சங் குளத்தை அபிவிருத்தி செய்துள்ளதுடன் மூதூர் லங்காபட்டண வீதிக்கு 500 மில்லியன் ஒதுக்கப்பட்டதுடன் திருமலை தென்னமரவாடிக் கிராம வீதிக்காகவும் 225 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

  Comments - 0

  • nallawan Thursday, 05 December 2013 12:32 PM

    அவர்கள் அப்படித்தான், நீங்கள் உங்கள் வேலையை தொடருங்கள். ஆடு நனையுதென்று ஓநாய் அழுததாம். (நஸீர் சொன்னாரென்று தவம் கத்துதாம்) தவம் எந்த ஆற்றை சொன்னதோ தெரியாது. அது அட்டாளைச்சேனை ஆற்றை சொல்லி இருக்கமாட்டார். எல்லோரும் சிரிங்க. நஸீர் ஆற்றை பற்றி சிந்தித்து அரசியல் செய்றாரோ!

    Reply : 0       0

    VALLARASU.COM Friday, 06 December 2013 08:48 AM

    இவர்கள்தன் நான் சொன்ன வைக்கோல் கந்தில் கட்டப்பட்ட நாய், இந்த மு.கா அழிந்தால்தான் உண்மையான அபிவிருத்தி, முஸ்லிம்களின் உரிமை என்பன சரியாக கிடைக்கும். இவர்கள் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இதுவரை இம்மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள், இவர்களுக்கு ஏற்ற ஒரு தலைவன்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X