2024 ஒக்டோபர் 13, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணாக இருந்து ஆணாக மாறிய அதிகாரி

Editorial   / 2024 ஜூலை 10 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணாக இருந்து ஆணாக மாறிய மூத்த ஐஆர்எஸ் அதிகாரியின் பாலின மாற்றத்தை மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய குடிமைப் பணி சேவை வரலாற்றில் முதல் முறையாக இது நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வந்த அனுசுயா என்ற பெண் அதிகாரி, அனுகதிர் சூர்யா என்ற ஆணாக மாறியுள்ளார். அவரது பாலின மாற்றத்தை மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

பாலின மாற்றம் தொடர்பாக நிதி அமைச்சகத்திடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதனை அமைச்சகம் பரிசீலனை செய்து, ஏற்றுக் கொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. “அனுசுயாவின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. இனி அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் ‘திரு.எம்.அனுகதிர் சூர்யா’ என அவர் அறியப்படுவார்” என்று மத்திய வருவாய்த் துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

அனுசுயா கடந்த 2013-ல் சென்னையில் உதவி ஆணையராக தனது பணியை தொடங்கியுள்ளார். 2018-ல் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷனில் இளநிலை பட்டம் பயின்றவர்.

அதன் பின்னர் தேசிய சட்ட நிறுவன பல்கலைக்கழகத்தில் சைபர் சட்டம் மற்றும் சைபர் தடயவியல் முதுகலை பட்டய படிப்பு (டிப்ளோமா) பயின்றுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் NALSA வழக்கில் மூன்றாம் பாலினத்தை அங்கீகரித்தது. அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அவர்களுக்கும் பொருந்தும் என தெரிவித்தது. பாலின அடையாளம் என்பது தனி நபரின் விருப்பம் என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த சூழலில் பாலின மாற்றத்தை நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .