2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

ஈரான் வன்முறையில் : 116 பேர் பலி

Janu   / 2026 ஜனவரி 11 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் மதவாத ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இரண்டாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை (11)  அன்றும் தீவிரமடைந்துள்ளன. 

இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை குறைந்தது 116 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஈரானிய நாணயமான 'ரியால்' (Rial) அமெரிக்க டொலருக்கு நிகராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி இந்தப் போராட்டங்கள் தொடங்கின. 

தற்போது ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.4 மில்லியனாக வீழ்ந்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது ஈரானின் ஒட்டுமொத்த ஆட்சிமுறைக்கே சவாலாக மாறியுள்ளது.

இதுவரை 2,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. 

ஈரான் முழுவதும் இணையச் சேவைகள் முடக்கப்பட்டு, தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தின் உண்மையான வீரியத்தை அறிவதில் சிக்கல் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், போராட்டக்காரர்களை "பயங்கரவாதிகள்" என ஈரானிய அரச ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன.

இதனிடையே, ஈரானின் பிரதம நீதியரசர் மொஹமட் முவஹெதி ஆசாத் விடுத்துள்ள எச்சரிக்கை நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது.

போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் அனைவரும் "இறைவனின் எதிரிகள்" (Enemy of God) எனக் கருதப்படுவார்கள் என்று அவர் அறிவித்துள்ளார். 

ஈரானிய சட்டப்படி இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

இதேவேளை, ஈரான் மக்களின் போராட்டங்களுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், "ஈரான் முன்னெப்போதும் இல்லாத வகையில் விடுதலையை எதிர்நோக்கியுள்ளது.

அவர்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார். 

போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசாங்கம் நடத்தும் ஒடுக்குமுறைக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்துவது குறித்து ட்ரம்ப் தனது அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  

தெஹ்ரானில் உள்ள இராணுவம் அல்லாத முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பல விருப்பத் தெரிவுகள் ட்ரம்ப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஈரானில் நிலவும் இந்த அசாதாரணச் சூழல் காரணமாக மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .