Freelancer / 2026 ஏப்ரல் 13 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்கா - ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. 21 மணி நேர ஆலோசனையில் இருதரப்பு இடையே எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
கடந்த 8 ஆம் திகதி இரு தரப்பும் இணைந்து 2 வாரங்களுக்கு தற்காலிக போர்நிறுத்தத்தை அமல் செய்தன. இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான உயர் நிலைக் குழுக்கள் பல்வேறு கட்டங்களாக 21 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஈரான் குழுவினர் நேற்று நாடு திரும்பினர்.
முன்னதாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவிக்கையில், ஈரான் உடனான 21 மணி நேர பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இது ஈரானுக்கு மோசமான செய்தி ஆகும். அணு ஆயுத திட்டத்தை கைவிட ஈரானிடம் வலியுறுத்தினோம். இதற்கு ஈரான் தரப்பு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. அணு ஆயுத திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்பதே எங்களது பிரதான நோக்கம். எங்கள் நிலைப்பாடு மற்றும் முடிவை தெளிவாக கூறிவிட்டோம். இனிமேல் ஈரான் தரப்பே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.
அமெரிக்கா - ஈரான் இடையே 21 மணி நேர பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் முதல் 7 மணி நேரம் இரு தரப்பு நிபந்தனைகள் குறித்து பாகிஸ்தான் சமரச முயற்சிகளில் ஈடுபட்டது. அடுத்த 14 மணி நேரம் அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், 3 விவகாரங்களில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
யுரேனியத்தை செறிவூட்டும் திட்டத்தை (அணு ஆயுதம்) கைவிட ஈரான் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு தொடர்ந்து ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு, எண்ணெய் கப்பல்களுக்கு சுங்கவரி விதிப்போம் என்று ஈரான் அறுதியிட்டு கூறியது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் தரப்பு கோரியது. இந்த 3 விவகாரங்களால்தான் அமைதிப் பேச்சு தோல்வியில் முடிந்தது. இதன் அடுத்த கட்டமாக ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். (a)
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago