2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

கப்பல்களுக்கு மாற்றுப் பாதைகளை அறிவித்தது ஈரான்

Freelancer   / 2026 ஏப்ரல் 10 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹார்முஸ் ஜலசந்தியின் பிரதானப் கப்பல் வழித்தடத்தில் கடல் கண்ணிவெடிகள் இருக்கும் ஆபத்தைக் காரணம் காட்டி, ஹார்முஸ் வழியாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு மாற்றுப் பாதைகளை ஈரான் இராணுவம் அறிவித்தது.

கடல் கண்ணிவெடிகளின் அபாயம் காரணமாக கப்பல்கள் பிரதான வழித்தடத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும், கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.

உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கினை வகிக்கும் மிக முக்கிய நீர்வழிப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி, ஈரான் மீதான போர் காரணமாக மார்ச் தொடக்கத்திலிருந்து மூடப்பட்டது.

நேற்று முன்தினம் முடிவான இரண்டு வார கால போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, தற்காலிகமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், கண்ணிவெடிகள் பொருத்தப்பட்டதால், பிரதான வழித்தடம் இயல்பான போக்குவரத்துக்கு அபாயகரமானதாக உள்ளது.

இது குறித்து ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ''கடல்சார் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு இணங்கவும், கடல் கண்ணிவெடிகள் மீது மோதாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க விரும்பும் அனைத்துக் கப்பல்களும், போக்குவரத்துக்கான மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டும்.''என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்வதற்கான புதிய வரைபடமும் ஈரான் கடற்படையால் வெளியிடப்பட்டது. இதன்படி, உள்வரும் கப்பல்கள் ஓமன் வளைகுடாவிலிருந்து வடக்கு திசையில் லராக் தீவை நோக்கிச் சென்று, பின்னர் பாரசீக வளைகுடாவை நோக்கித் தொடர்ந்து செல்லவேண்டும். வெளியேறும் கப்பல்கள் பாரசீக வளைகுடாவிலிருந்து, லராக் தீவின் தெற்கே கடந்து, பின்னர் ஓமன் வளைகுடாவை நோக்கித் தொடர்ந்து செல்லவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .