Editorial / 2026 மார்ச் 31 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் மின்தகனம் செய்யப்பட்ட மனித அஸ்தியை மலிவான அடுக்குமாடி குடியிருப்புகளில் சேமித்து வைக்கும் நடைமுறைக்கு அந்நாட்டு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். வீடுகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், மயானங்களில் இடம் வாங்குவதற்குப் பதில் மக்கள் வீடுகளை வாங்கி அஸ்தியை வைக்கும் இடங்களாகப் பயன்படுத்தி வந்ததாலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகங்களில் உள்ள வீடுகளை வாங்கி, அவற்றைத் தங்கள் மறைந்த உறவினர்களின் அஸ்தியை வைக்கும் இடங்களாக சில குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றன. பொது மயானங்களில் இடம் வாங்குவதை விட இது மலிவானது என்பதோடு, அந்த இடத்தை தங்களின் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பதும் மக்களின் கருத்தாக உள்ளது.
ஜெர்மனியின் எர்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்ஸ்டன் ஹெர்மன்-பிலாத் இது குறித்துக் கூறுகையில், "ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போன்றது இது. இது ஒரு முதலீடாகவும் அமைகிறது, அதே சமயம் சடங்குகளைச் செய்யும் முறையை எளிதாக்குகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய அஸ்தி வைக்கும் வீடுகள் பெரும்பாலும் சீலிடப்பட்ட ஜன்னல்கள் அல்லது எப்போதும் மூடப்பட்டிருக்கும் திரைகளால் அடையாளம் காணப்படுவதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. "ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, ஒரு கருப்புப் பெட்டியைச் சுற்றி மெழுகுவர்த்திகளும், ஒரு கறுப்பு-வெள்ளை புகைப்படமும் இருந்தன" என உள்ளூர்வாசி ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியால் நடத்தப்படும் 'லீகல் டெய்லி' பத்திரிகையிடம் விவரித்துள்ளார்.
திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிமுறைகளின்படி, "குடியிருப்பு வீடுகளை அஸ்தியைப் புதைப்பதற்கோ அல்லது சேமித்து வைப்பதற்கோ பயன்படுத்துவது" முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மனித எச்சங்களை பொது மயானங்கள் போன்ற ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என சீன அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் காப்பீட்டு நிறுவனமான 'சன் லைஃப்' செய்த ஆய்வின்படி, 2020 ஆம் ஆண்டில் சீனாவில் ஒரு இறுதிச் சடங்கிற்கான செலவு, அந்நாட்டின் சராசரி ஆண்டுச் சம்பளத்தில் பாதியை எட்டியுள்ளது.
நுகர்வோர் நம்பிக்கை குறைவு மற்றும் சொத்துத் துறையில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடிகாரணமாக வீடுகளின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
சீனாவில் முன்னோர்களின் கல்லறைகளைச் சுத்தம் செய்து சடங்குகளைச் செய்யும் 'குயிங்மிங் திருவிழா' (Qingming Festival) எதிர்வரும் நிலையில், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இறுதிச் சடங்குச் சேவைகளில் நிலவும் வெளிப்படைத்தன்மையற்ற நிலையைச் சீரமைக்க புதிய விதிகளைச் சீன சந்தைக் கண்காணிப்பு ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
3 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago