2021 ஜூன் 24, வியாழக்கிழமை

'5 நாள்களில் வழி பிறக்கும்’

Editorial   / 2020 ஜனவரி 10 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்  

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்‌ஷவால் பெருந்தோட்டத்துறை மக்களுக்காக வழங்கப்பட்ட சகல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுமென, தோட்ட உட்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கண்டி, கட்டுகஸ்தோட்டையில் அமைந்துள்ள மஹாவலி ரீச் ஹோட்டலில், நேற்று (09) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், மத்திய மாகாணசபை முன்னாள் தலைவர் மதியுகராஜா, மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் ரமேஷ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

“தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு தாங்கள் ஆதரவளித்தோம். அதன்போது பெருந்தோட்டத்துறை மேம்பாட்டுக்கென அவரால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. கோட்டாபய தற்போது ஜனாதிபதியாகியுள்ளார். அவரால் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும், விரைவில் நிறைவேற்றப்படும். அதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு விட்டன” என்றார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதைப் போன்றே, தைப்பொங்கல் தினமான 15ஆம் திகதி, அனைத்து பெருந்தோட்டத்துறை மக்களுக்கும், நல்ல செய்தி காத்திருப்பதாக அவர் கூறினார்.

இது, 1,000 ரூபாய் நாள் சம்பள அதிகரிப்பா என்று, ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அதுவாகவும் இருக்கலாம்” என்று பதிலளித்தார்.

இதேவேளை, மலையகத்திலுள்ள அனைத்து பெருந்தோட்டங்களிலும் தனித்தனி வீட்டுத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும், அனைத்து மக்களுக்கும் வீடுகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் நேற்று முன்தினம் (08),  நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது, அனைத்துத்  தோட்டங்களுக்கும் பாடசாலை வசதிகள், மலையகத்துக்கென்று தனிப் பல்கலைக்கழகம் ஆகியவை குறித்து கோரிக்கைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றதாகக் கூறிய அவர், இதற்கு, பிரதமரால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேபோன்று, ​தொழில் வழங்களில், மலையக இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும் எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடனே, தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .