Thipaan / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ப. தெய்வீகன்
சாத்தியங்களின் எல்லைகளுக்கு அப்பால் சாதனைகளை மட்டும் இலக்குவைத்து ஓடிக்கொண்டிருக்கும் மனிதன், தனது பயணத்தின் பக்க விளைவுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அநேக தருணங்களில் மறந்துவிடுவதுண்டு.
அவ்வாறான ஒரு துரதிர்ஷ்டம் மிக்க நிகழ்வுகளின் கூட்டு துயரமாகவே தற்போது தமிழகத்தை இயற்கையின் சீற்றம் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.
இந்தப் பேரிடரின் பின்னணியில் புதைந்திருக்கும் காரணங்களை வெளிப்பிதுக்கி எடுத்து ஆய்வு செய்துகொள்ளும் தருணம் இதுவல்ல என்றபோதும், இன்னமும் வெள்ளம் புகாத ஊடகங்களும் வேறு தரப்பினரும் தத்தமது வியாக்கியானங்களையும் விமர்சனங்களையும் சரமாரியாகப் பொதுவெளியில் வீசியடிக்கத் தொடங்கிவிட்டனர்.
தமிழகத்தின் நிலை இவ்வாறிருக்கும்போது அதேமாதிரியான ஒரு சமகால தாக்கத்தினை அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழர் தாயகத்தின் - குறிப்பாக வடக்கில் - இந்தக் காலநிலை ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும் அதன் விளைவுகளையும் பற்றி ஆராய்வது இந்தப் பத்தியின் நோக்கம்.
தமிழகத்திலும் சரி இலங்கையில் வட பகுதியிலும் சரி தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கையின் சீற்றம் தனது கோரத்தைக் காண்பிக்கும் தளத்தை ஆழமாக நோக்கினால் அது ஒன்றே ஒன்றுதான். அதாவது, வருடம் முழுவதும் பரவலாகப் பெய்யவேண்டிய மழை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியிலேயே செறிவாகப் பொழிந்து தள்ளுவதுதான் இந்த மொத்த அவலத்துக்குக் காரணம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை வருடம் முழுவதும் சராசரியாகப் பெய்கின்ற சுமார் 900 - 1,200 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி இம்முறை கடந்த நவம்பர் முதல்வாரத்தில் ஆரம்பித்து விடாது பெய்து தனது கோரத்தினைக் காண்பித்தமைதான் இந்தப் பெருவெள்ளத்துக்கும் பேரிடருக்கும் காரணம் என்று சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர். உதாரணமாக, தமிழகத்தில் குறிப்பிட்ட ஒருநாளில் மாத்திரம் 500 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி ஏற்பட்டிருப்பது அச்சத்தில் உறையவைக்கும் ஆபத்தான சமிக்ஞை என்றார் இலங்கைச் சூழலியலாளர் ஒருவர்.
தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பேரவலத்தைக் காணும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் உள்மனதில் ஏற்படக்கூடிய ஓர் இயற்கையான கேள்வி இவ்வாறான ஓர் இடரை எமது மண்ணும் சந்திக்குமா என்பதுதான்.
இந்த விடயத்தைச் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போமாக இருந்தால் -
பெருவெள்ளம் வந்து மக்களையும் சொத்துக்களையும் அடித்துச் சென்றுவிடும் என்ற அச்சம் வடபகுதியைப் பொறுத்தவரை என்றைக்கும் இருந்ததில்லை. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அங்கு பல தசாப்தங்களுக்கு முன்னர் அமுல்படுத்தப்பட்ட நீர்முகாமைத்துவம்தான்.
இலங்கையில் உள்ள மாகாணங்களிலேயே நீர்ப்பற்றாக்குறை கொண்டதாக வட மாகாணம் அமைந்ததினால், சுமார் 350 வருடங்களுக்கு முன்னதாகவே அங்கு தமது ராசதானிகளை அமைத்திருந்த ஒல்லாந்து ஆட்சியாளர்கள் வடமாகாணத்தில் நீர்வளத்தைப் பாதுகாப்பதற்கு ஏதுவான - நேர்த்திமிக்க - திட்டங்களை அமுல்படுத்தியிருந்தார்கள்.
அதேவேளை, வடபகுதியின் நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்குவதற்காகக் கடல்நீருக்குத் தடுப்பணைகளை மேற்கொண்டு நீர்நிலைகளை உருவாக்குவதிலும் பின்னாளில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தனர். ஆனால், இவ்வாறு அமைக்கப்பட்ட நீர்நிலைகளுக்குள் வந்த கடல்நீர் பராமரிப்பின்றி அருகிலிருந்த விளைநிலங்களையும் உவர்நிலங்களாக மாற்றியது.
மறுபுறத்தில், இரசாயன வளங்களைப் பயன்படுத்தியமை, மனித கழிவுகள் தொடர்ந்தும் மண்ணில் கலக்கப்பட்டமை என்று வடபகுதியின் முக்கால்வாசி பிரதேசத்தின் நன்னீர்வளமெனப்படுவது தொடர்ச்சியாக மாசுபட்டுப்போனது.
இதன்போதுதான், பருவப்பெயர்ச்சி மழைமூலம் கிடைக்கப்பெறும் நீரை இயன்றளவு நீரேந்து பிரதேசங்களிலுள்ள நீர்நிலைகளில் சேகரித்து நிலத்துக்கு மேலுள்ள நீரைச் சேமித்து வைத்து அதன் மூலம் நிலத்தடி நீரை தூய்மைப்படுத்தி பாதுகாப்பது என்ற திட்டங்களைக் கல்வியாளர்களும் சூழலியலாளர்களும் முன்வைத்தனர்.
இந்தத் திட்டத்தின் முக்கியமான முன்மொழிவு 1950இன் ஆறுமுகம் திட்டம் எனப்படுகிறது. இதனைப் பிற்காலத்தில், விடுதலைப் புலிகள் தமது பொருண்மிய மேம்பாட்டுக் கழத்தின் ஊடான தேச அபிவிருத்தித் திட்டத்தின் ஓர் அங்கமாக நடைமுறைப்படுத்துவற்கு பேராசிரியர் துரைராஜா அவர்களின் தலைமையிலான செயல்நெறிக்குழுவிலும் கரிசனையுடன் பரிசீலித்தமை குறிப்பிடத்தக்கது.
ஆறுமுகம் திட்டம் முழுமையாக அமுல்படுத்தவில்லை ஆயினும் அவரது முன்மொழிவுக்குப் பின்னர் பல
நூற்றுக்கணக்கான குளங்கள், குட்டைகள், ஏரிகள் போன்ற நீர் படுகைகள் வட பகுதியெங்கும் ஏற்படுத்தப்பட்டு அவை மழைநீர் சேகரிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டன. அவையெல்லாம், வட பகுதி விவசாயத்தின் ஓர் அங்கமாக முழுமுனைப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய நாளில் வடபகுதியில் சுமார் 65இற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் மத்திய அளவிலான குளங்களும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய குளங்களும் இவ்வாறான நீரேந்துமிடங்களாக உள்ளன.
இவற்றைவிட மழைகாலத்தில் வட பகுதியில் பாய்ந்தோடும் ஆறுகளின் நீரை இயன்றளவு குளங்களில் சேகரிப்பதன் மூலம் கடலுக்குள் விரயமாவதைத் தடுப்பதும் பாரிய திட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக இரணைமடுக் குளத்தின் அணை உயரத்தை அதிகமாக்குவது முதல் பல முயற்சிகள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இவை எல்லாமே பரந்துபட்ட சூழல் கல்வியின் அடிப்படையில் - பிரதேசத்தின் கடந்தகால பிரதிபலிப்புக்களின் அடிப்படையில் - காலநிலைத் தரவுகளின் அடிப்படையில் கல்வியியலாளர்களினது முயற்சிகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவந்தது. வௌ;வேறு காலப்பகுதியில், சர்வதேச சமூகத்தின் அபரிமிதமான உதவிகளும் இதற்காக உள்வாங்கப்பட்டிருந்தன.
இன்னொரு வகையாகச் சொல்லப்போனால், ஒழுக்கமாகத் தனது மாற்றங்களை வெளிப்படுத்திய காலநிலையின் அடிப்படையில் பல தசாப்தங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இன்றுவரை வடபகுதியைப் பொறுத்தவரை ஒரு சீரான பெறுபேறுகளைக் காண்பித்து வந்திருந்தன. ஆனால், தற்போது ஆபத்தான அறிகுறிகளுடன் சடுதியான மாற்றங்களையும் சீற்றங்களையும் காண்பிக்கும் காலநிலைக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பதுதான் பெரும் சவாலாக மாறியிருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்கள் சூழலியளார்கள்.
உலகளாவிய ரீதியில் மிகுந்த அச்சத்துடன் பார்க்கப்படுகின்ற காலநிலை மாற்றம் எனப்படுகின்ற பேசுபொருள் தனது கோரத்தாண்டவத்தை காண்பிக்கத் தொடங்கிவிட்டதா என்ற அச்சம் ஒரு புறத்தில் இருக்க - இன்னொரு புறத்தில், குறிப்பாக வடபகுதியில் திட்டமிடப்படாமல் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் சிறுகச் சிறுக இயற்கையை சவால்விட ஆரம்பித்துள்ளதாகவும் இது மிகுந்த ஆபத்துக்களை ஏற்படுத்தப்போவதாகவும் இந்த சூழலியலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக, பல தசாப்தங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட நீரேந்துநிலைகள் தூர்ந்துபோயுள்ள வடபகுதியில் இவற்றைத் தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் எதுவும் முழு முயற்சியில் மேற்கொள்ளப்படுவதாகவோ -
அதன் அத்தியாவசியம் குறித்த மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் தன்முனைப்புடன் செயற்படுவது போலவோ இல்லை என்பதை அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
போருக்குப் பின்னர் வட பகுதிக்குப் படையெடுக்கும் வர்த்தகர்களை மையமாகக் கொண்டு சரமாரியாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் எவையும் சூழல் பிரச்சினைகளைக் கவனத்தில் கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை என்றும் -
உயர்த்திப் போடப்பட்டுள்ள எ-9 வீதி தொடக்கம் நீர் வழிந்தோடுவதற்கு நகர்ப்புறங்களில் கட்டப்பட்ட கால்வாய்களைக் கழிவுத் தொட்டிகளாக பயன்படுத்தும் பரிதாபநிலை வரை எதுவுமே சூழல்துறை சார்ந்த கரிசனையை இம்மியும் கணக்கெடுக்கவில்லை என்றும் - இந்தச் சூழலியலாளர்கள் பெரிதும் கவலைவெளியிட்டனர்.
பல தசாப்தங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட நீர்முகாமைத்துவத்தின் அனுகூலங்கள் இன்னமும் அனுபவித்துவரும் வடபகுதி மக்கள் தற்போது காண்பிக்கும் சூழலியல் குறித்த அறியாமைப் போக்கு மிகுந்த ஆபத்துக்களைப் பிற்காலத்துக்கு விட்டுச்செல்லப்போகிறார்கள் என்பதைத்தான் இது தொடர்பாக பேசிய அநேக கல்வியியலாளர்கள் வலியுறுத்திக் கூறினார்கள்.
நீர்ப்பாசனம், குளங்கள் புனரமைப்பு, கமநலம் என்று எத்தனையோ விடயங்கள் 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13ஆவது அரசமைப்புச் சீர்திருத்தத்தின் கீழான மாகாணசபையின் அதிகாரத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுவிட்டன. ஆகவே, இந்த விடயங்கள் தொடர்பான மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி எதிர்கால பாதுகாப்புக்கும் நிகழ்காலத்துச் செயற்றிட்டங்களுக்கும் மத்திய அரசைக் குறைகூற முடியாது.
மாகாணசபையினரும் சிவில் சமூகத்தினரும் இந்த விடயத்தில் காண்பிக்கும் ஆழமான கரிசனையும் அரசியலுக்கு அப்பாற்பட்ட சிந்தனையும் கல்விமான்களுடன் சேர்ந்து ஏற்படுத்தக்கூடிய ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களும்தான் தூரநோக்கத்துடன் இதுவிடயத்தில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இலகுவாக இருக்கும்.
சில தினங்களுக்கு முன்னர், இந்த விடயங்கள் தொடர்பாக வன்னியில் பணிநிமிர்த்தம் நிலைகொண்டிருந்த ஒருவருடன் பேசும்போது - 'இடர்முகாமைத்துவம், சூழல் பிரச்சினைகள் குறித்த விடயங்களில் காண்பிக்கும் ஆழமான கரிசனை மற்றும் அதற்கான எதிர்வினை ஆகியவற்றில் முன்பு விடுதலைப் புலிகள் அமைப்புக் காண்பித்த செயற்பாடுகளில் பத்து சதவீதம்கூட தற்போது நடப்பதாகத் தெரியவில்லை. வளங்களே இல்லாத நிலையிலும் அவர்களின் நிர்வாகமும் அதில் அவர்கள் காண்பித்த நேர்த்தியும் இன்றும் என்றும் நினைவுகூரவேண்டிய ஒன்று' என்றார்.
7 minute ago
48 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
48 minute ago
59 minute ago
1 hours ago