Johnsan Bastiampillai / 2022 மே 24 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
இதுவரை காலமும் ஆட்சி செய்த எல்லோரும் சேர்ந்துதான், இந்தத் தவறான ஒற்றையடிப் பாதையில், நாட்டை மெல்ல மெல்ல நகர்த்தி வந்து, இருள் சூழ்ந்த இடத்தில் நிறுத்தியுள்ளார்கள்.
இந்த நிலைமைக்கு, இன்றைய ஜனாதிபதியோ மஹிந்த உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பமோ, மட்டுமே காரணமல்ல. மாறாக, முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி, அமைச்சர்கள், எம்.பிக்களும்தான் காரணம் என்பதை மறந்து விடக்கூடாது.
அப்படியென்றால், இவர்களுக்கு வாக்களித்த ஒவ்வொரு பொதுமகனுக்கும் இந்த நெருக்கடியான நிலைமைக்கு வர மறைமுக பங்கிருக்கின்றது. ஆகவேதான், ராஜபக்ஷவினர் அதிக தவறிழைத்து இருக்கின்றார்கள் என்பதற்காக, அவர்கள் மீது எல்லாப் பழியையும் போட்டு விட்டு, பொறுப்புக்கூறலில் இருந்து யாரும் தப்பியோடிவிட முடியாது.
இந்நிலையில், தோல்வியடைந்த ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் இலங்கையின் செயற்பாட்டு அரசியலை விட்டு வெளியேறி, ‘வீடு செல்ல வேண்டும்’ என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. அதன் ஆரம்பப் புள்ளியாக, கோட்டாவை வீட்டுக்குச் செல்லக் கோரும் கோசங்களைக் கருதலாம்.
இலங்கையை ஆட்சி செய்த எல்லோருக்கும் இதில் பொறுப்பிருக்கின்றது என்றால், ரணில் விக்கிரமசிங்கவும் அதில் ஒருவர். இன்று நாட்டை தூக்கி நிமிர்த்துவதற்காக அவர் பிரதமர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். அதாவது, நெருக்கடிகளுக்கு எல்லாம் பிரதான காரணமான ராஜபக்ஷவினர், இதற்கு இன்னுமொரு காரணமான ரணிலை பலிக்கடாவாக்கி உள்ளனர்.
பிரதமராக ரணில் பதவியேற்ற பிறகு, நாட்டு மக்களிடையே சிறிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. ஆனாலும் அது, ‘அவர் எல்லாவற்றையும் தீர்த்து வைப்பார்’ என்கின்ற அளவுக்கான அபார நம்பிக்கையல்ல! ஏனெனில் அவரது ‘நல்லது’, ‘கெட்டது’களை, நாடு நன்றாக அறியும்.
ரணிலின் வருகையின் பின்னர், சில சிறிய மாறுதல்கள் ஏற்படுவதான தோற்றப்பாடு உருவாகியுள்ளது. பொருளாதார விடயங்களில் இதைவிடப் பெரிய முன்னேற்றங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இலங்கையில் ‘அரசியல் முறைமை மாற்றம்’ ஏற்படாது. அவ்வாறே, மக்கள் எதிர்பார்க்கின்ற காரியங்களையும் அவரால் செய்ய முடியாது போகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், மத்திய வங்கி பிணைமுறி மோசடி, ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகள், வாபஸ் பெறப்பட்ட வழக்குகள் எனப் பல விவகாரங்களில் பிரதமர் ரணில் நழுவல் போக்கையே கடைப்பிடிப்பார்.
புதிய பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது குறித்த வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
முதலாவது, கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் ஜனாதிபதியாக இருக்கின்றமையும் ராஜபக்ஷர்களால் ஆட்டுவிக்கப்படும் பொம்மையாக, புதிய பிரதமர் நோக்கப்படுகின்றமையும் ஆகும்.
இரண்டாவது, மக்களின் எதிர்பார்ப்பான கட்டமைப்பு மாற்றமொன்றை நிகழ்த்துவதற்கு இவர் பொருத்தமற்றவர் என்பதும், இவரது நியமனத்துக்குப் பின்னாலுள்ள அரசியல் மர்மங்களும் எனலாம்.
இந்தப் பின்னணியில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒருவித மௌன விரதத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். இன்றைய அரசியல் சூழலில், தம்முடைய நிலைப்பாடு என்ன? தாம் யாருக்கு ஆதரவளிக்கப் போகின்றோம் என்பதை அவர்கள் இன்னும் வெளிப்படையாக மக்களுக்கு அறிவிக்கவில்லை.
இது அவர்களது வழக்கமான பாணிதான்! அதாவது, தமக்கு சிக்கலான, மக்களது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத தருணங்களில், பொதுவெளியில் இருந்து ஓடி ஒளிந்து கொள்வதை, நீண்டகாலமாகவே முஸ்லிம் சமூகம் அவதானித்து வருகின்றது.
மக்கள் சார்ந்த அரசியலில் தோல்வி கண்ட மக்கள் பிரதிநிதிகள் எல்லோரும், வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றால், இந்த வரிசையில் முதலில் நிற்பவர்கள் முஸ்லிம் எம்.பிக்கள்தான். ஏனெனில், ராஜபக்ஷர்களின் தோல்வி அல்லது ரணில், மைத்திரி போன்றோரின் தோல்வி என்பது, ஐந்து, 10 வருடங்களுக்குள் நிகழ்ந்ததுதான்.
ஆனால், முஸ்லிம் தலைவர்களும் முன்னாள், இந்நாள் எம்.பிக்களும் மக்களுக்கான அரசியலைச் செய்வதில் தொடர்ச்சியாக 25 வருடங்கள் தோல்வி கண்டிருக்கின்றனர். எனவே, ‘வீட்டுக்கு அனுப்ப வேண்டும்’ என்றால் முதல் தெரிவு, முஸ்லிம் அரசியல்வாதிகளாகத்தான் இருப்பார்கள்.
மஹிந்த, மைத்திரி, ரணில், கோட்டாபய உள்ளடங்கலாக அதற்கு முன்னர் ஆட்சிப்பீடத்தில் இருந்த ஆட்சியாளர்களுக்கோ அல்லது சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பெருந்தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கோ முட்டுக் கொடுக்கின்ற வேலையை மட்டும்தான், முஸ்லிம் கட்சிகளும் எம்.பிக்களும் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டு வருகின்றார்கள்.
இணக்க அரசியலே முஸ்லிம்களுக்குப் பொருத்தமானது என்பதை மறுக்கவில்லை. ஆனால், இந்த இணக்க அரசியலின் ஊடாக, முஸ்லிம் சமூகத்துக்கு எதைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்கள்?
அவர்கள் தலைவர்களாகி இருக்கின்றார்கள். நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றிருக்கின்றார்கள். அமைச்சர்களாக பதவி வகித்துள்ளார்கள். அதனூடாக தீர்வை விலைக்கு வாகனங்கள் உள்ளடங்கலாக, பல வெகுமதிகளை அனுபவித்துள்ளார்கள். சொத்துச் சேர்த்துள்ளார்கள். தரகுப் பணம் எனப் பலவற்றின் மூலம் வங்கிக் கணக்குகளை நிரப்பியுள்ளார்கள். ஆனால், இதுவெல்லாம் முஸ்லிம் சமூகத்தின் ‘கணக்கில்’ வராது!
முஸ்லிம் எம்.பிக்கள் இதுவரை காலமும் தமது சமூகத்துக்காக எதைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள் என்று பார்த்தால், எல்லாம் வெற்றிடமாகவே தெரிகின்றது. எனவேதான், ஆட்சியாளர்கள் தோல்வியடைவதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே, முஸ்லிம் அரசியல் தோல்விகண்டு விட்டது.
முஸ்லிம்களுக்கு எதிராகப் பல நகர்வுகள் இடம்பெற்ற காலத்தில், ஏதாவது ஒரு முஸ்லிம் அணி, ஆளும்தரப்புக்கு ஆதரவளித்துக் கொண்டே இருந்தது. அரசமைப்பின் 17, 18, 20 ஆகிய திருத்தங்களுக்கு சார்பாக வாக்களித்தனர். சிலர் 19இற்கு எதிராக நின்றனர். இதுதவிர, சமூகத்துக்குப் பாதகமான மேலும் பல நகர்வுகளுக்கு, நக்குண்டு நாவிழந்து துணை போயினர்.
அதன் உச்சமாக, மாற்றம் வேண்டும் என்று நாடே போராடிக் கொண்டும், மொட்டு கட்சிக்காரர்களே பதவி வேண்டாம் என்று கூறிக் கொண்டும் இருந்த காலத்தில் கூட, இரு முஸ்லிம் எம்.பிக்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டனர். இதனால் அவர்களுக்கு என்ன கிடைத்ததோ, ஆயினும் சமூகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
இப்போது ஏனைய சமூகங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளைப் போலவே முஸ்லிம் எம்.பிக்களுக்கும் மூன்று தெரிவுகள் இருக்கின்றன.
முதலாவது, கோட்டாபய ராஜபக்ஷவையும் வீட்டுக்கு அனுப்பி, முற்றுமுழுதாக ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்படுத்த முடியுமென்றால் அதற்காக வேலை செய்தல். ஆனால், இப்போதைக்கு இது இலகுவான காரியமல்ல.
இரண்டாவது, பிரதமர் ரணிலை எதிர்ப்பதன் மூலம், இந்த இடைக்கால ஆட்சியை தோல்வி காணச் செய்வது.
மூன்றாவது, நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக குறுகிய காலத்துக்காவது ரணில் விக்கிரமசிங்கவின் நல்ல நகர்வுகளுக்கு ஆதரவளித்தல்.
இவைதவிர, முஸ்லிம் எம்.பிக்களுக்கு விசேடமாக இன்னுமொரு தெரிவு இருக்கின்றது. முஸ்லிம் சமூகம்சார் அரசியலில் தோல்வி கண்டு விட்டோம் என்று அவர்களாகவே உணர்ந்து கொண்டு, அரசியலை விட்டு விலகி வீட்டுக்குச் செல்வதாகும். இது மிக இலகுவாக தெரிவாகும்.
நாட்டு மக்கள் இன்று எதிர்கொண்டுள்ள நெருக்கடியைச் சீர்படுத்துவதற்கு எல்லோரும் முன்னிற்க வேண்டும். அதாவது, ஓர் அடிப்படையில் மக்களை இந்தப் படுகுழியில் இருந்து மீட்க, எல்லா அரசியல்வாதிகளும் முன்னிற்க வேண்டும். இந்தப் பொறுப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் உள்ளது.
இப்போது இவ்வளவும் நடந்து விட்ட பிறகும் கூட, பிரதான இரு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் ஏனைய அநேக முஸ்லிம் எம்.பிக்களும் ‘மதில்மேல் பூனை’களாகவே இருக்கின்றனர். இன்னும் மக்களின் பக்கத்துக்கு அவர்கள் வரவில்லை என்பதையே இது காட்டுகின்றது.
இது இக்கட்டான காலம். மக்களுக்கு எல்லா வகையிலும் வழிகாட்டல்கள் அவசியமான தருணம் என்ற வகையில், ‘இரண்டும் கெட்டான் நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்து, ஏதாவது ஓர் உருப்படியான முடிவை முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்கள் எடுக்க வேண்டும்.
அவ்வாறில்லாவிடின், இப்படியான ஒரு சூழலில் கூட, சமூகத்துக்காக எதையும் செய்யத் தகுதியில்லாத அந்த அரசியல்வாதிகள், அரசியலை விட்டு வெளியேறி, வீட்டுக்குப் போவது மேலானது.
32 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago