Thipaan / 2016 ஜனவரி 14 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
ஜல்லிக்கட்டை அனுமதித்து, இந்தியாவின் மத்திய அரசு வெளியிட்ட உத்தரவை, அந்நாட்டு உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியிருக்கிறது. இதன்மூலம், இவ்வாண்டுப் பொங்கலில், ஜல்லிக்கட்டு நடத்தப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது, விலங்குரிமைகள் அமைப்புகளுக்கு ஆனந்தத்தையும், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்குக் கடும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தத் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், 'ஜல்லிக்கட்டுக்கு என்ன தேவையிருக்கிறது?' என்ற வினாவையும் எழுப்பியிருக்கிறது. இவ்விடயத்தில் எந்தப் பக்கத்தில் எவரிருந்தாலும், இந்தக் கேள்வி குறித்தான எதிர்ப்பை அல்லது விமர்சனத்தை முதலில் பதிவுசெய்வது அவசியமானது. பாரம்பரியங்கள் அல்லது கலாசாரம் என்றுவரும் போது, 'என்ன தேவையிருக்கிறது?' என்பது, நீதிமன்றத்தால் கேட்கப்படக்கூடிய கேள்வியா என்பது சந்தேகமானதே. அனேகமான கலாசாரப் பழக்கவழக்கங்களின்றி, மக்களால் உயிர்வாழ முடியும். ஆகவே, நீதிமன்றத்தில் தீர்ப்பும் அதன் விசாரணைப் போக்கும், 'அவசியமா?' என்ற நோக்கில் செல்லாமல், விலங்குரிமைகள் தொடர்பிலும் பாரம்பரியம் தொடர்பிலும் கவனஞ்செலுத்துவதே, சிறப்பானதாக அமையும்.
ஜல்லிக்கட்டு என்ற சொல், சல்லிக்கட்டு என்ற சொல்லின் திரிந்த வடிவமாகக் கருதப்படுகிறது. மாட்டின் கழுத்தின் கட்டப்படுகின்ற வளையமே சல்லி என அழைக்கப்பட, இவ்விளையாட்டு, சல்லிக்கட்டு என அழைக்கப்பட்டு, பின்னர் ஜல்லிக்கட்டு எனத் திரிந்தது என்பர். இதற்கு, ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என, பல பெயர்கள் இருக்கின்றன. ஆனால், ஒவ்வோர் இடத்திலும், வௌ;வேறான மாற்றங்களைக் கொண்டதாக, இவ்விளையாட்டுக் காணப்படுகிறது. எனினும், அனைத்தினதும் அடிப்படையாக, காளை மாடுகளை, மனிதர்கள் கட்டுப்படுத்தி, வெற்றியாளராகுதல் என்பதைக் குறிப்பிட முடியும்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகக் கருதப்படும் இவ்விளையாட்டுத் தொடர்பில், பழந்தமிழ் நூல்கள் பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. கலித்தொகை, மலைபடுகடாம், பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் என, பல நூல்கள், இவ்விளையாட்டைக் குறிப்பிடுகின்றன.
முன்னைய காலத்தில் பொதுவாக, வீரமான இளைஞனைக் கண்டுபிடிப்பதற்கான போட்டியாக இப்போட்டி அமைந்ததோடு, வெற்றிபெறும் இளைஞனுக்கு, அக்குலப் பெண், மாலைசூட்டும் வகையில் இடம்பெற்றன. இப்போது பெரும்பாலும், ஏனைய பரிசுகளை இலக்காகக் கொண்டவையாகவே, இப்போட்டிகள் காணப்படுகின்றன. இவ்வாறு, பாரம்பரிய ரீதியில், நீண்டதொரு வரலாற்றைக் கொண்டதாக, இந்த ஜல்லிக்கட்டுக் காணப்படுகிறது.
எனினும், காலாகாலமாக, இப்போட்டிகளுக்கெதிரான எதிர்ப்புகள், வந்துகொண்டேயிருந்திருக்கின்றன. விலங்குரிமை அமைப்புகள், இப்போட்டிகளில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, சட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், அதேபோல் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன. அதன் விளைவாகத் தான், இதற்கு முன் பல தடைகள் இடைக்காலத்தடை விதிக்கப்பட்ட இவ்விளையாட்டு, 2014ஆம் ஆண்டு மே மாதத்தில், உச்சநீதிமன்றத்தால் இறுதியாகத் தடை விதிக்கப்பட்டது. எனினும், இவ்வாண்டில் இத்தடையை நீக்கி, இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவைப் பிறப்பித்தது. இதனால் இம்முறை, ஜல்லிக்கட்டு இடம்பெறுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அம்முடிவுக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில், அதற்கு இடைக்காலத்தடை விதித்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாதங்களில், அதன் பாரம்பரியம் குறிப்பிடப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரியமாக இது இருக்கும்போது, அதைத் தடுத்து நிறுத்துவதென்பது, பண்பாட்டில் நேரடியான தலையீட்டைச் செய்வது போன்றதாகும் என்ற வாதமுமுண்டு. பண்பாடுகளைப் பின்பற்றும் வழக்கம், உலகில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள போதிலும், அவை கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டுமா என்பதில் கேள்வியுண்டு. உதாரணமாக, இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திலும் கூட, உண்மையைச் சொல்வதாக கடவுளின் பெயரால் சத்தியம் செய்ய வேண்டும், இல்லாவிடின், உண்மையைச் சொல்வதாக உறுதியளிக்க வேண்டும். இதுவும், பாரம்பரியத்தின் அடிப்படையில் உருவான பழக்கம் தான். ஆகவே, பாரம்பரியங்களென்பவை முக்கியமானவை தான்.
மறுபுறத்தில், பாரம்பரியங்கள் என்பதற்காக அனைத்தையும் பின்பற்ற வேண்டுமா என்பது கேள்வியே. காலத்துக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்தி, நாகரிகமடைந்த உலகுக்குப் பொருத்தமற்றவையை விலக்கி, புதியவற்றை உள்வாங்குதலே பொருத்தமானது. காதல் சடுகுடு என்ற திரைப்படத்தில், ஜல்லிக்கட்டு சம்பந்தமான காட்சியொன்று காணப்படும். ஜல்லிக்கட்டுக்காக காளைகளைக் கொண்டுசெல்லும் போது, நகைச்சுவை நடிகரான விவேக், அதைப் பற்றிக் கேட்பார். அதன்போது, காளைகளைத் துன்புறுத்துதல் தவறல்லவா எனக் கேட்கும்போது ஒருவர், 'நிலத்த உழுவுறது மாடு, அத அடக்கிறது வீரம்' என்பார். அதற்கு விவேக், 'அந்தக் காலத்தில நிலத்த மாடு உழுதிச்சு, அத அடக்கினீங்க. இப்ப ட்ராக்டர் தானடா உழுகுது. ஒரு ட்ராக்டர, ‡புல் ஸ்பீட்டில வரவிட்டு, அத எதிர்த்து நிண்டு அடக்கினா, அது வீரம்' என்பார். இவ்வாறு, சில பாரம்பரியங்கள் காலங்கடந்தனவாக இருக்கும்போது அவை, பொருத்தமற்றனவாக இருக்கும். உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம் என, தற்போது நிராகரிக்கப்படும் பல்வேறு விடயங்கள், ஒரு காலத்தில், எமது பாரம்பரியங்களாக இருந்தன என்பது, இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்று.
அதேபோன்று, 'ஸ்பெய்ன் போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட, காளையடக்குதல் போட்டிகள் இடம்பெறுகின்றன. அங்கே எதுவும் கதைக்காத விலங்குரிமை அமைப்புகள், எமது பண்பாட்டில் மாத்திரம் குறுக்கிடுகின்றன' என்ற குற்றச்சாட்டும், சிலரால் முன்வைக்கப்படுகின்றது. ஆனால், ஸ்பெய்னின் காளையடக்குதல் போட்டிகள், தொடர்ச்சியாக எதிர்ப்பைச் சந்தித்தே வருகின்றன என்பதோடு, ஸ்பெய்னின் பல மாகாணங்களில், அதற்கான தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தவிர, 'பக்ரிட் பண்டிகையின்போது, உலகம் முழுவதும் மில்லியன்கணக்கான விலங்குகள் கொல்லப்படுகின்றனவே?' என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
விலங்குகளைப் பலியிடும் நிகழ்வுகள் - அது பக்ரிட்டாக இருந்தாலென்ன, நேபாளத்தின் காந்திமை பலி நிகழ்வாக இருந்தாலென்ன, இலங்கையில் முன்னேஸ்வரம் மிருக பலியாக இருந்தாலென்ன - பற்றிய விவாதம், மிகவும் நீண்டது, இரு பக்க வாதங்களைக் கொண்டது. சுருக்கமாகச் சொன்னால், உலகில் மாமிசம் உண்பவர்கள் மிகப்பெரிய சதவீதத்தில் உள்ளனர். பலியிடும் நிகழ்வுகளில் பலியாகும் விலங்குகள், மக்களால் உண்ணப்படுகின்றனவே தவிர, அவை வீணாகிப் போவதில்லை. எனவே, மிருக பலியையும் விலங்குகள் துன்புறுத்தப்படுதலையும் ஒப்பிட முடியாது.
மறுபுறத்தில், ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கெதிராக முன்வைக்கப்படும் வாதங்கள், அதிக பலத்துடன் இருப்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக, பீட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள காணொளி, மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஜல்லிக்கட்டு விளையாட்டு ஆரம்பிக்க முன்னர், காளைகள், கடுமையாகச் சித்திரவதை செய்யப்படுகின்றன. அவற்றின் வாலைத் திருகுதல், வாலை முறித்தல், வாலில் கடித்தல், அவற்றின் உடலில் அடித்தல், கூரிய ஆயுதங்களால் குத்துதல், எரிச்சலடையச் செய்யும் பொருட்களை மூக்குக்குள்ளும் கண்ணுக்குள்ளும் வழங்குதல், மதுபானம் அருந்த வைத்தல் என, காளைகள் துன்புறுத்தப்படும் காட்சிகளை, அவ்வமைப்பு வெளியிட்டுள்ளது. அக்காட்சிகள், மிகவும் கோரமானவையாகவும் மனதை உருக்குபவையாகவும் உள்ளன.
காளைகளைப் பற்றி அறிந்தவர்கள், அவை மூர்க்கமான விலங்குகள் அன்று என்பதை அறிவார்கள். பசு அளவுக்குச் சாந்தமாக இல்லாமலிருந்தாலும், காளைகளுக்கும் ஆக்ரோஷத்துக்குமிடையில் நெடுதூரம்;.
ஆகவே, அவற்றைக் கோபமுள்ள விலங்குகளாக மாற்றுவதற்கு, இவ்வாறான சித்திரவதைகளைப் புரிதல், அவசியமாகின்றது என்பது தான் உண்மை. சிறியளவு சித்திரவதை கூட இல்லாது, எந்தக் காளையாலும், இவ்வாறு ஆக்ரோஷமாக நடந்து கொள்ள முடியாது. மேற்கூறப்பட்ட உடல்ரீதியான சித்திரவதைகள் ஒருபுறமிருக்க, அவற்றுக்கு உளரீதியான சித்திரவதைகளும் இடம்பெறுகின்றன.
தவிர, ஜல்லிக்கட்டின் கொடுமையிலிருந்து தப்பியோடும் காளைகளை, கிராமத்தவர்கள் சூழ்ந்து தாக்குவதும், அவற்றிலிருந்தும் தப்பும் காளைகள், வீதிகளுக்குச் சென்று, வாகனங்களில் அடிபட்டோ அல்லது பள்ளங்களில் வீழ்ந்தோ மரணிப்பதும் கூட, இடம்பெறுபவை தான். பல்வேறு தரவுகளின் அடிப்படையில், உலகம் முழுவதும் இடம்பெறும் ஜல்லிக்கட்டு, காளையடக்குதல், அவற்றுக்கான பயிற்சி போன்றவற்றால், ஆண்டுதோறும் 250,000க்கும் மேற்பட்ட காளைகள் கொல்லப்படுகின்றன.
இவையெல்லாம், காளைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள். மறுபுறத்தில், ஜல்லிக்கட்டில் மனிதர்களுக்கு ஏற்படும் காயங்களும் மரணங்களும், அவற்றை, மேலும் ஆபத்தான விளையாட்டாக மாற்றுகின்றன.
எனவே, இவற்றையெல்லாம் தாண்டி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்குவதைப் பற்றி, தமிழ்நாடு அரசாங்கமோ அல்லது மத்திய அரசாங்கமோ சிந்திக்குமாயின், காளைகள் துன்புறுத்தப்படவில்லை என்பதை முற்றுமுழுதாக உறுதிசெய்வதற்கான விதிமுறைகளை இயற்றுவதோடு, அவை முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதுவரையிலும், ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்த்து, அவற்றின் மூலமாக வருமானத்தைப் பெறும் ஏழைகளுக்கு உதவ விரும்பினால், தற்காலிகமான கொடுப்பனவை, இவ்வரசாங்கங்கள் வழங்கலாம். அதன்மூலம், அனைத்துத் தரப்பினரும் பாதிப்புகளின்றி அல்லது பாதிப்புகள் குறைந்த நிலையில், இவ்விடயத்தில் வெற்றிகாண முடியும்.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago