Thipaan / 2016 ஜனவரி 11 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு, மத்திய அரசு, இறுதியில் அனுமதி கொடுத்துள்ளது. 'காளைகளை' காட்சிப்பொருள் பட்டியலில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ள பா.ஜ.க. தலைமையிலான மத்தியில் உள்ள அரசு, தமிழகத்தில் புதிய விதமான அரசியல் விளையாட்டை ஆரம்பித்து வைத்துள்ளது. மத்தியில் இதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் அரசு, தமிழக நலனைப் புறக்கணித்தது, தமிழர்களின் நலனிலும் அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு, பலமாக எழுந்தது.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் மீது விழுந்த 'தமிழர் விரோத' பழியில், பாதியைச் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக, 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்ல, 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும், தி.மு.க தோல்வியைத் தழுவியது. தமிழர்கள் நலனைப் புறக்கணித்த கட்சி என்று விழுந்த குற்றச்சாட்டை, இதுவரை நீக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தி.மு.க.
இப்படியொரு சூழலில், இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, தடைபட்டு நின்றதும், 2016 சட்டமன்றத் தேர்தல் பிரசாரமாக மாறியது. இதை ஆரம்பித்து வைத்தது என்னமோ, தி.மு.க தான். 'நமக்கு நாமே' பயணத்தின் பொருட்டு, மதுரை மாவட்டத்துக்குச் சென்ற தி.மு.க பொருளாளர் ஸ்டாலின், அங்குள்ள அலங்காநல்லூரில், மக்களைச் சந்தித்தார். அலங்காநல்லூர் மஞ்சுவிரட்டுக்கு அதாவது, ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற தமிழக நகரம். அங்கு மக்களைச் சந்தித்த அவர், 'இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடக்க, அ.தி.மு.க அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நானே இங்கு வந்து தலைமை தாங்கிப் போராட்டம் நடத்துவேன்' என்றார். இந்த அறிவிப்பு, செப்டெம்பர் மாதம் அளவில் இருந்தாலும், சென்ற மாதத்தில் ஒரு நாள், 'ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி, என் தலைமையில் மதுரையில் உண்ணாவிரதம்' என்று அறிவித்தார் ஸ்டாலின். அந்த அறிவிப்பு, மற்றக் கட்சிகளை உசுப்பி விட்டது.
அ.தி.மு.க சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா, உடனடியாகச் சுறுசுறுப்பானார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இறுதி நாளில், ஒரு கடிதம் எழுதினார். அதில், 'ஜல்லிக்கட்டு நடத்த, உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அந்தக் கோரிக்கைக்கு, மத்திய அரசின் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, ஏதும் பதில் சொல்லவில்லை.
ஆனால், பா.ஜ.க.வின் மாநில தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான பொன். இராதாகிருஷ்ணன், 'இந்தமுறை நிச்சயம் ஜல்லிக்கட்டு நடக்கும்' என்றார். இதன் பின்னர்தான், தி.மு.க. தலைவர் கருணாநிதி, அந்த விடயத்தில் தலையிட்டார். மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனுக்குக் கடிதம் எழுதினார். 'நீங்கள் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று கூறியிருப்பது, சந்தோஷமாக இருக்கிறது. நிச்சயம் நீங்கள், ஜல்லிக்கட்டு நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் கருத்தை மதித்து, தி.மு.க.வின் உண்ணாவிரதத்தைத் தள்ளி வைக்கிறேன்' என்றார்.
இந்நிலையில், 'ஜல்லிக்கட்டு நடக்காது. சட்டரீதியாகச் சில சிக்கல்கள் இருக்கின்றன' என்று, மத்திய அரசு தரப்பிலிருந்து ஒவ்வொருவராகத் திடீரென்று பேசத் தொடங்கினர். இதன் பின்னர், மீண்டும் கருணாநிதி குரல் கொடுத்தார். 'நிச்சயம், ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும்.' என்று, மத்திய அரசை வலியுறுத்தினார்.
இது போன்ற சூழலில், ஜல்லிக்கட்டு நடத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 2014இல், ஜல்லிக்கட்டு விளையாட்டை தடைசெய்த உச்சநீதிமன்றம், 'மாடுகளுக்கு ஐந்து சுதந்திரம் இருக்கிறது' என்று சுட்டிக்காட்டியது மட்டுமின்றி, அரசியல் சட்டம் 21ஆவது பிரிவின் கீழ் மனிதர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாழும் உரிமை, விலங்குகளுக்கும் உண்டு' என்று, அழுத்தம் திருத்தமாகச் சொன்னது. இந்தத் தீர்ப்புக்கு மாறாக, ஜல்லிக்கட்டு விளையாட்டை யாராவது நடத்தினால், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இப்போது, விலங்குகள் நல வாரியம், மத்திய அரசின் முடிவை எதிர்த்துள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பில், 'மாடுகளுக்கு உள்ள ஐந்து சுதந்திரங்கள், மதிக்கப்பட வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தாலும், அது, அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்நிலையில், விலங்குகள் வாரியத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டால், ஜல்லிக்கட்டு நடத்தத் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால், இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் எதிரான, ஓர் அரசிதழ் அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்று, சட்ட அறிஞர்கள் கருதுகிறார்கள். ஆனால், கால அவகாசம் இல்லாத காரணத்தால், இந்த விளையாட்டு, இந்த முறை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் இருக்கின்றன.
எது எப்படியோ, 'அரசியல் விளையாட்டை' பா.ஜ.க. தொடக்கிவைத்து, விட்டது. முதலில், அதற்குப் போட்டியாக, தமிழகத்தில் உள்ள இன்னொரு தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்பதை எடுத்துரைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இன்னொரு விதம், அ.தி.மு.க தரப்பில் ஒரு கடிதத்துடன் நிறுத்தப்பட்ட விடயத்தில்,
இப்படியொரு தீவிர நடவடிக்கை எடுத்து, ஜல்லிக்கட்டு விளையாட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு, இந்த வருட தைப்பொங்கலுக்கு நடைபெற்று விடும் என்பதே, ஜல்லிக்கட்டு இரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் வரும் நேரத்தில், 'இந்த அனுமதி', தமிழகத்தில் உள்ள, குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள, இளைஞர்கள் மத்தியில், பா.ஜ.க.வுக்கு ஆதரவு வளையமொன்றை உருவாக்கிக் கொடுக்கும் என்பதில், சந்தேகமில்லை.
அதே நேரத்தில், மழை வெள்ளச் சேதங்களை பார்வையிட வந்த குழு, அ.தி.மு.க அரசைப் பாராட்டியது, இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க, இந்திய வெளிவிவகாரச் செயலாளர் மட்டத்தில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, இப்போது ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி வழங்கியிருப்பது எல்லாம் 'அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணிக்கு' அச்சாரமாக இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கூட்டணிக்கு, பா.ஜ.க. மிகவும் தீவிரமாக முயன்று வருகிறது. மற்ற கட்சிகளுடன், அக்கட்சி பேசிப் பார்த்து விட்டது. சின்னச் சின்ன கட்சிகள் கூட, எங்கள் பொதுக்குழுவை கூட்டி முடிவு சொல்கிறோம் என்று நழுவிச் செல்கின்றன. இதனால், பா.ஜ.க.வுக்கும், அக்கட்சியுடன் நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணிக் கட்சிகளுக்கும், நெருக்கமும் இல்லை உருக்கமும் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில்தான், அ.தி.மு.கவை வளைத்துப் போட அனைத்து முயற்சிகளிலும், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதாவது, மத்திய அரசுக்குத் தலைமையேற்கும் பா.ஜ.க, செய்து வருகிறது. ஆனால் இதனால் எல்லாம், முதல்வர் ஜெயலலிதா, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து விடுவாரா என்பது, இன்னும் விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது.
அதேநேரத்தில், பா.ஜ.க.வை இனி, தமிழகக் கட்சிகள், ஏதும் குறை சொல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி அளித்த விவகாரம், அந்த நிலையை, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஏற்படுத்திவிட்டது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரு முகமாக பா.ஜ.க.வை வரவேற்ற ஒரே விடயம், இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டுத்தான் என்பது, தமிழக அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது. அதனால்தான் அ.தி.மு.க கூட்டணி, மற்ற கட்சிகளுக்கு வாய்ப்பூட்டு என்று இரு கோணத்தில், பா.ஜ.க. தலைமையிலான அரசு அறிவித்த ஜல்லிக்கட்டு விளையாட்டு அனுமதி, அரசியல் விளையாட்டை ஆரம்பித்து வைத்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, இந்த விளையாட்டுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ஸ்டாலினும் வரவேற்றுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியும் வரவேற்றுள்ளார். ஆனால், இது, அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி என்ற திசையில் பயணித்தால், அது தி.மு.க.வின் கூட்டணி முயற்சிகளுக்கு மேலும் ஒரு தெளிவை ஏற்படுத்தும். அ.தி.மு.கவுடன் பா.ஜ.க இருந்தால், மற்றக் கட்சிகள் அந்த அணிக்குப் போகத் தயங்கும். அதைப் பயன்படுத்தி, தி.மு.க.வின் கூட்டணியை உறுதி செய்யலாம் என்ற சிந்தனையை, இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குக் கொடுக்கப்பட்ட அனுமதி ஏற்படுத்தியிருக்கிறது என்றால், அதில் சந்தேகமில்லை.
ஆனால், தமிழர்களின் வீர விளையாட்டு, அதுவும் பாரம்பரிய விளையாட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இனியாவது, மத்திய அரசு கூறியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தி, தமிழகத்தில் இந்த ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வழி காண வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. அதாவது, இப்போது பதவியில் இருக்கும் அ.தி.மு.க அரசின் முன்பு சவாலாக இருக்கிறது. தை பொங்கலையொட்டி நடக்க விருக்கும் ஜல்லிக்கட்டு விழாவில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளே ஜல்லிக்கட்டு விளையாட்டின் தலைவிதியை இனி நிர்ணயிக்கும்.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago