Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான, கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் (பரணகம ஆணைக்குழு) இறுதி அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைகளை நடத்தி அறிக்கையை முன்வைத்திருக்கின்றது.
கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பில் மட்டுமின்றி இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விடயங்களையும் தம்முடைய விசாரணைகளில் சேர்த்துக் கொள்ள அவ் ஆணைக்குழுவுக்;கு இறுதிக் காலத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்போக்கிலான விடயங்களும் விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நீதியமைப்பின் கீழ் பணிகளைத் தொடரும் டெஸ்டமன் டி சில்வாவைக் கொண்டு, இறுதி மோதல்களில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் வகையிலான அறிக்கையொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஏற்கெனவே பெற்றிருந்தது. அது, 'மூன்று இலட்சம் மக்களைக் காப்பாற்றுவதற்கான அரச படையினரின் தாக்குதல்களில் 40,000 பேர் கொல்லப்படுவது இயல்பானது' என்கிற தோற்றப்பாட்டினையொத்த ஆலோசனையாக இருந்தது. அவரையே பரணகம ஆணைக்குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருந்தார். இந்த நிலையில், டெஸ்மன் டி சில்வாவின் தலையீடுகள் பரணகம ஆணைக்குழு அறிக்கையில் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கின்றன.
போர்க்குற்றங்களின் பிரதான பங்காளியான இலங்கை அரசாங்கம் நியமித்த பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகளை, இறுதி மோதல்களில் பாதிக்கப்பட்ட பிரதான தரப்பான தமிழ் மக்கள் ஆரம்பத்திலேயே நிராகரித்திருந்தனர். ஆனாலும், ஆணைக்குழு விசாரணைகளில் ஏன் சாட்சியங்களை வழங்குவதற்கு தமிழ் மக்கள் முண்டியடித்தனர் என்கிற கேள்வி பலருக்கும் எழலாம். சாட்சியங்களின் வருகையை இலங்கை அரசும், படையினரும், புலனாய்வாளர்களும் எவ்வாறு தடுத்துக் கையாண்டனர் என்பதையும் உலகம் அறிந்து கொள்வதற்கான ஏதுகைகளை நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கைகளைத் தாண்டிய சாட்சியங்களின் பதிவும், அதற்கான அர்ப்பணிப்பான வருகையும் உறுதி செய்தது. அது, பரணகம ஆணைக்குழுவிடம் மக்கள் சாட்சியமளிக்க வந்ததன் மூலம் நிரூபிக்கப்பட்ட போர்க்குணம். அதனை, அதன் போக்கில் அணுகலாம்.
இன்னொன்று, ஆணைக்குழு விசாரணைகளையே நீதியாக நடத்த முடியாத இலங்கை அரசாங்கம், நடத்தும் உள்ளக விசாரணைகளில் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நியாயம் கிடைக்கும் என்கிற பதிவுகளையும் மீண்டும் உறுதி செய்வதற்குமான களமாக பரகணம ஆணைக்குழு விசாரணைகளை மக்கள் பயன்படுத்திக் கொண்டனர். ஆயிரக்கணக்கான சாட்சியங்களைப் பதிவும் திறனும், அதற்கான திட்டமிடலும் கூட பரணகம ஆணைக்குழுவிடம் இருக்கவில்லை. அது, கிட்டத்தட்ட
தூங்கி வழியும் ஆணைக்குழு மாதிரியான தோற்றப்பாடுகளோடே செயற்பட்டது என்பதையும் சாட்சியங்களின் அதீத வருகை உறுதி செய்தது.
ஐ. நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான விடயத்தை புதிய மைத்திரி- ரணில் அரசாங்கம் தன்னுடைய போக்கில் வெற்றிகரமாக கையாண்ட பின்னணியிலேயே பரணகம ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. ஆணைக்குழு அறிக்கைகளும் அதன் ஆலோசனைகளும் இலங்கையின் கடந்த கால அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்த வரலாறுகள் என்று ஏதும் இல்லை.
ஆனால், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பாவிக்கப்பட்ட சம்பவங்கள் உண்டு. பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையையும் தெளிவான அரசியல் நோக்கத்துக்காக கையாள்வதற்கான முனைப்புக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
ஐ. நாவினால், இலங்கையில் இறுதி மோதல்களில் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்று அறிக்கையிடப்பட்டுள்ளதை நிராகரித்திருக்கும் பரணகம ஆணைக்குழு, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை அண்ணளவாக 7,500 என்று சொல்கின்றது.
அத்தோடு, இலங்கை அரச படையினர் மீதான குற்றச்சாட்டுக்களை சில இடங்களில் கோடிடுவது போன்றதான தோற்றப்பாட்டினை அறிக்கைகளில் வெளிப்படுத்திக் கொண்டு, இறுதி மோதல்களின் பிரதான குற்றவாளியாக தமிழீழ விடுதலைப் புலிகளை நோக்கி விரலை நீட்டியிருக்கின்றது.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலை, இராணுவத்திடம் சரணடைந்த அல்லது போர்முனையில் உயிரோடு பிடிக்கப்பட்ட புலிகளின் ஊடகப்போராளி இசைப்பிரியா, தாக்குதல் தளபதி ரமேஸ் உள்ளிட்டவர்களின் குரூரமான படுகொலைகள், வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்த புலித்தேவன் உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்ட விடயம் மற்றும் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படங்கள் தொடர்பில் போதிய ஆதாரங்கள் இருப்பதாக கோடிட்டிருக்கும் பரணகம ஆணைக்குழு, அவை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியமென்றும் வலியுறுத்துகின்றது.
ஏற்கெனவே சர்வதேச ரீதியில் நிரூபிக்கப்பட்ட படுகொலைகள் உள்ளிட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பரணகம ஆணைக்குழு நியாயத்தன்மையோடு அறிக்கையிடுவது போல வெளிப்படுத்திக் கொண்டு, வெளிப்படுத்தப்பட வேண்டிய இன்னும் இன்னும் ஆயிரக்கணக்கான பாரிய குற்றங்களை மூடி மறைப்பதற்கான வேலைகளையும், சாட்சியங்களை நம்பிக்கையிழக்கச் செய்வதற்கான முனைப்புக்களையும் செய்திருக்கின்றது.
பாலச்சந்திரன், இசைப்பிரியா உள்ளிட்டவர்களின் படுகொலையை நிராகரித்து அறிக்கையிடுவதினூடு, பரணகம ஆணைக்குழு தொடர்பில் கொஞ்சமாகவேனும் சர்வதேச ரீதியிலான நம்பிக்கையைப் பெற முடியாது என்பது திண்ணம். அதன்போக்கில் தான், அவை தொடர்பில் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட உண்மைகளை அப்படியே பட்டியலிட்டு ஆணைக்குழு மீதான நம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள முடியும் என்று எத்தணித்திருக்கின்றது.
போதிய நியாயப்பாடுகள் மற்றும் செயற்பாட்டுத்திறனற்ற ஆணைக்குழுவாக பரணகம ஆணைக்குழு அமைக்கப்பட்டிருக்கின்றது என்றும், இறுதி மோதல்களின் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் போதியளவான சாட்சியங்களை பதிவு செய்யும் வல்லமை இல்லை என்றும் பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. ஆனாலும், ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 30ஆவது கூட்டத் தொடர் அமர்வுகளில் இலங்கை வெற்றிபெற்று உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்றுக்கான அனுமதியை பெற்றுத் திருப்பிய நிலையில், பரணகம ஆணைக்குழுவின் உள்ளடக்கங்கள் சில கையாளப்படுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த ஆணைக்குழுவே சர்வதேச நீதிபதிகளின் தலையீடுகளுடனான விசாரணைகளைக் கோருகின்றது மற்றும் அரச படையினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றது எனும் நிலைப்பாட்டினை தென்னிலங்கையில் அரசியல் காரணங்களுக்கான மிகத் தெளிவான முறையில் புதிய அரசாங்கம் கையாளுகின்றது. அதாவது, சர்வதேசத்திடமிருந்து நாட்டையும், இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினரையும் புதிய அரசாங்கம் காப்பாற்றியிருக்கின்றது மாதிரியான அறிவிப்பு அது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையைவிட பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் பாரதூரமானவை.
அது, ஐ.நா. அமர்வுக்கு முன் வெளியாகியிருந்தால் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும் என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். அத்தோடு, வெளிவிவகார அமைச்சரின் நாடாளுமன்ற உரையொன்று இறுதி மோதல் களத்திலிருந்த இராணுவத்தினருக்கு கட்டளை வழங்கியவர்களை மாத்திரம் நோக்கி விரல்களை நீட்டியிருக்கின்றது.
ஏற்கெனவே அரசியலரங்கிலிருந்து அகற்றப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் அச்சுறுத்தலான எழுந்து வருவார்கள் என்று கருதும் மஹிந்த ராஜபக்ஷ- கோட்டாபய ராஜபக்ஷ தரப்பினரை முழுமையாக அகற்றுவதற்கான முனைப்புக்களையே பரணகம ஆணைக்குழு
அறிக்கைகளினூடு புதிய அரசாங்கம் செய்ய நினைக்கின்றது. இந்த இடத்தில் பாதிக்கப்பட்ட பிரதான தரப்பான தமிழ் மக்களின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் சாட்சியங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தலுடன், சாட்சியங்களை தளராமல் வழங்குவதற்கான நம்பிக்கைகளை விதைப்பது என்பது அவசியமாகின்றது. சர்வதேச தலையீடுகளற்ற (கிட்டத்தட்ட அந்த நிலைக்கு இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகள் வந்துவிட்டன) உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்றை அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
அதன்போதும், ஆணைக்குழு விசாரணைகளில் சாட்சியமளிப்பதைத் தாண்டிய உத்வேகத்தோடு சாட்சியமளிக்க வேண்டும். அதற்கு, இப்போதிருந்தே சாட்சியங்கயையும், ஆதாரங்களையும் திரட்டிக் கொள்ள வேண்டும். அது, உள்ளக விசாரணைகளில் எமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான சர்வதேசத்தினை உடனடியாக நாடுவதற்கும், அநீதிகளுக்கு எதிரான போர்க்குணத்தினை வெளிப்படுத்துவதற்கும் உதவும்.
இறுதி மோதல்களின் போது தமிழ் மக்களுக்கு எதிரான நிகழ்த்தப்பட்ட கொடூரக் குற்றங்கள் தொடர்பிலான விடயங்கள் இலங்கை அரசாங்கத்தின் உள்ளக விசாரணைகளோடு பெருமளவுக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு குற்றவாளிகள் பொதுமன்னிப்பினூடு பாதுகாக்கப்படலாம். அதன்போக்கிலான முயற்சிகளை ஏற்கெனவே அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது.
அதன் ஒருகட்டமாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தையும் கையாள எத்தணிக்கின்றது. நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும், கொடூர குற்றங்களை போர்க்குற்றங்களாக நிகழ்த்திய பாதுகாப்புத் தரப்பினரையும் ஒரே நிலையில் வைத்து அணுகி பொதுமன்னிப்பு எனும் நிலைப்பாட்டில் நீதி விரோதத்தைச் செய்ய அரசாங்கம் முனைக்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகள் விடயம் இன்னொரு விடயமாக கையாளப்பட வேண்டியது. இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் வேறொரு விடயமாகவும் கையாளப்பட வேண்டியது. இரண்டையும் ஒரே புள்ளியில் இணைத்துக் கொண்டு நீதியைப் புறந்தள்ளுதல் என்பது அப்பட்டமான அயோக்கியத்தனம். அதனையே, அரசாங்கம் செய்ய எத்தனிக்கின்றது. ஆக, அந்த விடயம் தொடர்பிலும் தமிழ்த் தரப்புக்கள் போதிய கவனம் செலுத்த வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
4 hours ago