2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மதிக்காத முஸ்லிம் எம்.பி.க்கள்

Thipaan   / 2016 ஜனவரி 09 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலருக்குப் பதவியும் பட்டமும் கிடைத்துவிட்டால், தமக்கு 'கொம்பு' முளைத்து விட்டது என்று நினைக்கின்றார்கள். இப்படியானவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகி விட்டார்கள்  என்றால், தலைக்கனம் ஒரு போதைபோல தலைக்கேறி விடும். தாமாகத் தேடிச்சென்றுச் மக்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டி இவர்கள், தம்மை சந்திக்க வரும் மக்களுக்கு பாரிய கெடுபிடிகளை விதிப்பதை அவதானிக்க முடிகின்றது. ஓரிரு அரசியல்வாதிகள் இது விடயத்தில் நல்ல முறையில் நடந்து கொள்கின்றார்கள் என்றாலும், பெரும்பாலான எம்.பி.க்களை சாதாரண மக்களால் சந்திக்கவே முடிவதில்லை. அப்படிச் சந்தித்தாலும் முகத்தில் அறைந்தாற்போல் எகத்தாளமாக பேசி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

ஓரிரு அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள். அவர்களை சந்திக்கச் சென்றால், 'நீங்கள் எமது கட்சிக் காரரா?' என்று கேட்பார்கள். அதாவது, தம்முடைய கட்சிக்கு ஆதரவானோர் யார் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. அத்துடன் கட்சிக்காரர் என்றாலேயே பிரச்சினை தீர்க்க முடியும் என்ற தோரணையிலான கருத்தே இது. இவ்வாறு சந்திக்க செல்லும் சில நபர்களின் சகோதரர்; அல்லது மைத்துனர் வேறு கட்சி ஆதரவாளன் என்பதற்காக, எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களால் புறக்கணிக்கப் பட்டவர்கள் ஏராளம் பேர் நம்முள் இருக்கின்றனர்.

தப்பிப் பிழைத்து எம்.பி.யான ஒருவரிடம் அக்கட்சிக்கு வாக்களித்த ஒருவர் சென்றுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு மணித்தியால காத்திருப்பின் பின்னர் தரிசனம் கிடைத்துள்ளது. அதற்கிடையில் அங்கிருந்த பல 'வால்'களுக்கு காரணத்தை சொல்லிக் கொண்டிருந்தார் சந்திக்கச் சென்ற நபர். அரசியல்வாதி, வந்தவரை பார்த்து 'என்ன விடயம்?' என்று கேட்டார். அவர் பிரச்சினையை சொன்னார். அப்போது அந்த எம்.பி. 'நீங்கள் நேரடியாக வந்து என்னிடம் பிரச்சினையை சொல்ல முடியாது. உங்கள் ஊரில் எமது பிரதிநிதி ஒருவர் இருக்கின்றார். அவர் ஊடாக வர வேண்டும்' என்று பொறுப்பில்லாமல் பேசி, வெளியேறும்படி செய்து விட்டார்.

ஒவ்வொரு அரசியல்வாதியும் ஊருக்கொரு பிரதிநிதி நியமித்துள்ளதும் அவர்கள் ஊடாக மக்களது பிரச்சினைகள் கையாளப்படுவதும் நல்லதே. ஆனால், நிஜத்தில் அவ்வாறானவர்களில் அதிகமானோர் எப்பேற்பட்டவர்கள் என்று நமக்கு தெரியும். குறித்த எம்.பி.யை விட அவர்கள்தான் படு பிஸியாக (?) இருப்பார்கள். அல்லது அவ்வாறு காட்டிக் கொள்வார்கள். 'நாளை வா, நாளை வா' என்று மாதக்கணக்காக இழுத்தடிப்பார்கள். சிலர் நேரடியாகவே 'அதற்கு கொஞ்சம் செலவாகும்' என்பார்கள்.

இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்காகவே, மக்கள் பிரதிநிதிகளிடம் மக்கள் நேரடியாக வருகின்றனர். அவ்வாறு சந்திக்க வந்த ஒருவரை 2 மணித்தியாலங்களுக்கு முன்னரே விஷயத்தைச் சொல்லி திருப்பி அனுப்பியிருக்கலாம். அதை விட்டுவிட்டு, இவ்வளவு நேரம் காக்க வைத்து, ஏமாற்றத்தோடு திருப்பி அனுப்புவது ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதியின் பண்பல்ல. இது ஒரு சம்பவம் மட்டும்தான் இதுபோல எண்ணற்ற சம்பவங்கள் இன்னும்; இருக்கின்றன.

இதேவேளை, வேறு ஒரு சில அரசியல்வாதிகளைச் சந்திக்கப் போன பொது மக்களுக்கு விசித்திரமான அனுபவம் கிடைத்துள்ளது. 'நீங்கள் எமது கட்சிக்குதான் வாக்களித்தீர்கள் என்று நாம் எப்படி நம்புவது?' என்று நமது மக்கள் பிரதிநிதிகள் கேட்டிருக்கின்றார்கள். இதனை எப்படி நிரூபிக்க முடியும்? தமிழ் திரைப்படம் ஒன்றில், வடிவேலு வாக்குச்சீட்டை வெளியில் எடுத்துவந்து காண்பித்தது போல், ஒவ்வொரு வேட்பாளனும் எந்தக் கட்சிக்கு வாக்களி;த்தான் என்பதற்கு ஆதாரமாக, வாக்குச்சீட்டை ஒரு போட்டோகொப்பி எடுத்து வைத்திருக்க முடியுமா? என்ன முட்டாள்தனமான கேள்வியிது.

இன்னுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தார். அவரைச் சந்திக்கப் போவது என்றால் பெரும்பாடு. பொது  மக்கள் மட்டுமல்ல, முக்கியஸ்தர்கள் கூட அவரைச் சந்திக்க வேண்டுமென்றால் பலநாள் முயற்சி செய்ய வேண்டும். அவரைச் சுற்றி இருக்கின்ற வலது கைகள், இடதுகைகளை எல்லாம் முதலில் சந்தித்து உதவி கேட்ட பின்னரே அரசியல்வாதியை சந்திக்கப் போக வேண்டியிருக்கும். அப்படிப் போன பலருக்கு பல மணித்தியாலங்கள் கழித்து, 'இப்போது அவரை சந்திக்க முடியாது' என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அப்படியே, மக்களிடமிருந்து தூரமாகிப் போனார் அந்த அரசியல்வாதி. அவரது அரசியல் சறுக்கலுக்கு மக்களுடன் தொடர்பை பேணாமையே முக்கிய காரணம் என்பதை காலம் அவருக்கு உணர்த்தியிருக்கும்.

இன்னுமொரு பெரிய அரசியல்வாதி இருக்கின்றார். அவரை சந்திப்பதற்கு கிழக்கு பிராந்திய மக்கள், கொழும்புக்கு வந்தால், அவரது அமைச்சில், கட்சி அலுவலகத்தில் இருக்கின்ற அந்த அரசியல்வாதியின் ஊரைச் சேர்ந்தவர்களுக்கு வந்தவர்களைத் தெரியாது. அப்பொதுமகன், தனது மொத்த சுயசரிதையையும் சொன்னால் ஒருவேளை வாய்ப்புக் கிடைக்கலாம். அந்த அரசியல்வாதி, வந்தவரின் பிரச்சினையை தீர்ப்பது போன்று பாசாங்கு காட்டுவார். ஆனால், அந்த மனுக்கள் பெரும்பாலும் குப்பைத் தொட்டிகளையே நிரப்பும்.

மறுபக்கத்தில், ஒரு சிங்கள அரசியல்வாதி இருக்கின்றார். அவரை சந்திப்பதற்காக நண்பர் ஒருவர் கொழும்புக்கு வந்தார். அது ஒரு மக்கள் சந்திப்பு நாள். நான் நண்பரிடம் சொன்னேன், அமைச்சர் அதிகாலையிலேயே வந்து விடுவார்  என்று. நண்பர், நமது முஸ்லிம் அரசியல்வாதிகளை வைத்து அந்த சிங்கள அமைச்சரையும் எடை போட்டார். காலையில் 5.20க்கு அமைச்சரை சந்திக்க இவர் போயிருக்கின்றார். இவருக்கு 14ஆம் இலக்க டோக்கன் கிடைத்திருக்கின்றது. அமைச்சர் அதற்கு முன்னமே மக்கள் சந்திப்புக்காக வந்திருந்தார். இவ்வாறு சில சிங்கள அரசியல்வாதிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் ஒப்பீட்டளவில் மக்கள் சந்திப்புக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். ஆனால், முஸ்லிம் அமைச்சர்களும் எம்.பி.க்களும் அவ்வாறான ஒரு மதிப்பை மக்களுக்கு வழங்குவதில்லை.

எவ்வாறிருப்பினும், ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்களுக்கு மரியாதை கொடுக்கின்ற, கிரமமான அடிப்படையில் மக்களைச் சந்திக்கின்ற, அவர்களது மனுக்களை முறையாக ஆவணப்படுத்தி அதற்கு தீர்வுகாண முயற்சிக்கின்றவர்களாக இவர்கள் உள்ளனர். ஆனால், இவ்வாறானவர்கள் நான்கைந்து பேர் மாத்திரமே. மற்றைய எல்லோரும் மேற்சொன்ன வகையறாக்களே.

இன்றிருக்கின்ற முஸ்லிம் எம்.பி.க்கள், அமைச்சர்களில் 80சத வீதமானோர் மறைந்த மு.கா. ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ர‡பை முன்மாதியாக கொண்டு செயற்படுவதாக மேடைக்கு மேடை சுயபிரகடனம் செய்வதைக் காண முடிகின்றது. ஆனால், இவர்கள் எல்லோரும் மறைந்த தலைவரின் பாசறையில் வளர்ந்தவர்கள் என்பதை எந்த விடயத்திலாது நிரூபணம் செய்து காட்டுவார்கள் என்று பார்த்தால், அப்படியான அபூர்வங்கள் எதுவும் நடக்கவில்லை. தலைவரின் பாசறையில் 'சித்தியடையாத', வகுப்பேற்றப்படாத, 'நிபந்தனையுடன் வகுப்பேற்றப்பட்ட' சிஷ்யர்கள் என்றே இவர்களை கணிக்க முடிகின்றது.

முக்கியமாக, அஷ்ர‡ப், மக்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். ஒவ்வொரு ஊரிலும் மக்கள் சந்திப்புக்கள் - இந்த திகதியில் இத்தனை மணிக்கு இடம்பெறும் என்று அறிவிக்கபடும். தலைவர், உரிய நேரத்துக்கு மக்களைச் சந்திப்பார். அதுமாத்திரமன்றி, சில சந்தர்ப்பங்களில் 'நீங்கள் பேச வேண்டும் என்று நினைத்த எதையாவது, நாடாளுமன்றத்தில் நான் பேசாமல் விட்டிருக்கின்றேனா? அப்படியிருந்தால் எனக்கு சொல்லுங்கள்' என்று அடிமட்ட போராளிகளிடமும் சாமான்ய மக்களிடமும் அவர் கேட்டிருக்கின்றாராம். ஆனால், இன்றிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையோ, மக்கள் காங்கிரஸ் தலைமையோ, தேசிய காங்கிரஸ் தலைமையோ தாமாக மக்களை சந்திப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்யவில்லை. தேசிய தலைமைகள் மட்டுமல்லாமல் பிராந்திய தளபதிகளும் இதையே பின்பற்றுகின்றனர்.

சரி, அரசியல்வாதிகள் இப்படியென்றால், அவர்களது இணைப்பதிகாரிகளும் ஊருக்கு ஊhர் நியமிக்கப்படும் அமைப்பாளர்களும் அமைச்சர்கள், எம்.பி.க்களின் எடுபிடிகளும் காட்டுகின்ற பில்ட்அப்பும் பம்மாத்தும் இருக்கின்றதே, அது சொல்லி மாளாது. இங்கு சாமி வரம் கொடுத்தாலும் பூசாரிகள் இடம் கொடுப்பதில்லை. இந்த மொத்த நாட்டையும் தானே ஆள்;வது போல கதை விடுவார்கள். ஆழமாக விசாரித்துப் பார்த்தால், அமைச்சரின் தயவில் கொந்தராத்து செய்பவனாக, பினாமியாகவே இப் பேர்வழிகளுள் பெரும்பாலானவர்கள் இருப்பார்கள். ஆனால் இவர்களால் ஆகுமான பயன் ஒன்றும் இல்லை.

நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். 30 ரூபாய் கொடுத்து வாங்குகின்ற ஒரு பால் பக்கற்றில் கூட அதன் உற்பத்தி கம்பனிக்கு முறைப்பாடுகளை செய்வதற்கான 'வாடிக்கையாளர் சேவை தொலைபேசி இலக்கம்' இருக்கும். ஆனால், முப்பது வருடங்கள் பழமைவாந்த ஒரு கட்சியின் தலைமையை, மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்த மக்கள் சந்திப்பதற்கு ஏதாவது வழிமுறைகள் இருக்கின்றதா? இல்லை. தேர்தல்காலம் என்றால் பற்பசை விளம்பரத்தில் வருவோரை போன்று புன்னகையுடன் மக்களைச் சந்திக்க குடிசை வீடுகளுக்குக் கூட செல்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், அதன் பிறகு தம்மை சந்திக்க வரும் மக்களை மதிக்காமல் செயற்படுவது நன்றி மறந்த வேலையாகும்.

இதற்கு காரணம், 'பிஸி' என்று சொல்வார்கள். உண்மைதான் அரசியல் மிகவும் பிஸியான தொழில்தான். ஆனாலும் மறைந்த தலைவரை விட இவர்கள் அவ்வளவுக்கு வேலைப்பழு மிக்கவர்களா? அப்படியென்றால் பிஸியாக இருந்து இந்த மக்களுக்காக அவரைப் போல் எதையாவது பெற்றுக் கொடுத்திருக்கின்றார்களா என்ற வினா எழுகின்றது.

உண்மையான காரணம் என்னவென்று மக்களுக்கு தெரியும். மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தால் அதற்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அது நம்மால் முடியுமோ தெரியவில்லை. மக்களைச் சந்தித்தால் அவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு தம்மால் பதிலளிக்க முடியாது. ஒருவேளை, அவர்களது பிரச்சினைக்கு தீர்வு காண நேரத்தை செலவிட்டோமென்றால், நமது சொந்த அரசியல் தூர்ந்து போய்விடும் என்றெல்லாம் இவ்வாறான முஸ்லிம் அரசியல்வாதிகள் அச்சப்படுகின்றார்கள்.

மக்களின் பிரச்சினையில் தலையைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தால் சொந்த வியாபாரமும் அதன்வழிவந்த உழைப்பும் குறைவடைந்து விடும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். மக்கள் பிரச்சினையை கையாளும் போது, அரசாங்கத்துடனும் ஏனைய தரப்புக்களுடன் முரண்பாடு வரலாம். எனவே, இதற்கான தீர்வு, சந்திப்புக்களைத் தவிர்ப்பதே என்று அவர்கள் எண்ணுகின்றார்கள் போல.

என்னதான் இருந்தாலும், நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்புரிமை என்பது, மக்களினால் வழங்கப்பட்ட மக்களுக்கான பதவியாகும். மக்களின் பிரச்சினைக்கு செவிசாய்க்க வேண்டியது ஒவ்வொரு அரசியல்வாதியினதும் தலையாய கடமையாகும். எனவே சிறிய, பெரிய அரசியல்வாதிகள் எல்லோருமே ஒரு முறையான அடிப்படையில் மக்களை சந்திக்க வேண்டும். மக்கள் தம்மை வந்து சந்திப்பதற்கான கதவுகள் எப்போதும் திறந்திருக்க வேண்டும்.

தம்மைச் சந்திக்க வருகின்ற பொது மக்களை கண்ணியமாக நடாத்த வேண்டும். அவர்களுடைய பிரச்சினைகளையும் மனுக்களையும் பெற்று ஆவணப்படுத்தி, அவற்றை தீர்;த்துவைப்பதற்கு குறைந்தபட்சம் முயற்சிக்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால், தம்மைச் சந்திக்க வருகின்ற மக்களை மதிக்காத முஸ்லிம் அரசியல்வாதிகளை, பெயர்ப்பட்டிலுடன் பகிரங்கப்படுத்த எதிர்காலம் தயங்காது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X