2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மீண்டு(ம்) வருமா மஹிந்த யுகம்?

Thipaan   / 2016 ஜனவரி 17 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறது மைத்திரி - சந்திரிகா அணி.

மஹிந்த ராஜபக்ஷவின் இப்போதைய நகர்வுகள் தான் இத்தகையதொரு முடிவுக்குச் செல்ல வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து தூக்கியெறியப்பட்டு விட்டதாகவே பலராலும் கருதப்பட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை கட்சியின் யாப்புக்கு அமைய, மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்த பின்னர், அவரால் கட்சியின் மீது செல்வாக்குச் செலுத்த முடியாது என்றே சந்திரிகாவும், மைத்திரியும் கருதியிருந்தனர்.

ஆனால், நிலைமைகள் அதற்கு நேர்மாறாக மாறின. மஹிந்தவின் பின்னாலும் சுதந்திரக் கட்சியின் ஒருபகுதியினர் தீவிரமாக நிற்கத் தலைப்பட்டனர். இதனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உடையும் ஆபத்து ஏற்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி போட்டியிடும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போது, மைத்திரிபால சிறிசேன விட்டுக் கொடுக்க மறுத்தார்.

மஹிந்தவுக்கு போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டால், அவர் தனித்துப் போட்டியிடக் கூடும் என்ற நிலையும் ஏற்பட்டதுடன், சுதந்திரக் கட்சி உடைந்து விடும் சூழலும் உருவாகியது.

ஆனால் கடைசி நேரத்தில், மஹிந்தவுக்கு போட்டியிட இடமளித்தார் மைத்திரி. அதனால் அவர், தனது கட்சிக்குள்ளேயும், அரசாங்கத்துக்குள்ளேயும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட போதும், தேர்தலுக்கு முன்னர், மஹிந்தவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து, தனது நிலையை சமநிலைப்படுத்திக் கொண்டார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமராகும் வாய்ப்புக் கிடைக்காது போனதால், அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கலாம் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக, அவர் அரசியலில் தன்னை நிலைப்படுத்தி வருகிறார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யா விடினும், விகாரைகளை நோக்கிய அரசியலை முன்னெடுத்து வருகிறார். மஹிந்த ராஜபக்ஷ, விகாரைகளை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.

மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இறை ஆசியைப் பெறுவது முதல் காரணம். ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் உள்ள வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான ஆசியைப் பெறுவது இரண்டாவது காரணம்.

தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான விசாரணைகள் மஹிந்த ராஜபக்ஷவை பெரிதும் குழப்பியிருக்கிறது. இது, மனக்குழப்பத்தையும் அசச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பது ஒருவகையில் தற்போதைய அரசாங்கத்துக்குப் பெரும் பலம். என்றாலும், தொடர்ந்து இத்தகைய துரத்தலின் மூலம் மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது குடும்பத்தினரையும் பலமிழக்கச் செய்யலாம் என்று எதிர்பார்த்தால் அது தப்புக் கணக்காகவே அமையும். மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தளவுக்கு வலுவான சான்றுகளை அரசாங்கம் முன்வைத்திருக்கிறது என்பது கேள்வி தான். வலுவான ஆதாரங்களில்லாத குற்றச்சாட்டுகள் ஒரு காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராகவே திரும்பும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இத்தகையதொரு வாய்ப்பைத் தான் மஹிந்தவும் எதிர்பார்த்திருக்கிறார் போலத் தெரிகிறது. விகாரைகளில் மஹிந்த நடத்தி வருகின்ற அரசியல், அடிமட்ட சிங்கள மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கை அதிகரித்திருப்பதாகவே தெரிகிறது. இத்தகைய நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, அடுத்து தன்னை நிலைப்படுத்த என்ன செய்யலாம் என்று பலரும் பலவிதமான யோசனைகளை முன்வைத்து வருகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவை நம்பியுள்ள, சுதந்திரக் கட்சிக்கு வெளியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், அவர் புதிய கட்சி ஒன்றை அமைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இனிமேலும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியில் இருக்க முடியாது என்று விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன போன்றவர்கள் முடிவெடுத்திருக்கின்றனர்.

இவர்கள் தனியானதொரு கூட்டணியை அமைத்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டு வருகின்றனர். அந்தக் கூட்டணிக்குள் எப்படியாவது மஹிந்தவை இழுத்து வந்து தலைமையேற்கச் செய்து விட வேண்டும் என்று அவர்கள் கங்கணம் கட்டிச் செயற்படுகின்றனர். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவோ, இவர்களின் பிடிக்குள் சிக்கிக் கொள்ளாமல் நழுவி வருகிறார்.

மஹிந்த ராஜபக்ஷ, தனியானதொரு அரசியல் கட்சியை அமைக்க விரும்பவில்லையா அல்லது அவ்வாறு புதிய அரசியல் கட்சி அமைத்துப் போட்டியிடுவதால் தமதும் தமது குடும்பத்தினதும் அரசியல் எதிர்காலம் பாழாகி விடும் என்று அஞ்சுகிறாரா என்று தெரியவில்லை. தாம் ஒருபோதும் சுதந்திரக் கட்சியை விட்டுச் செல்லமாட்டேன் என்று அவர் கடந்த ஒரு வருடமாகக் கூறி வருகிறார். அதன்மூலம் தாம் கட்சியின் மீது தீவிர பற்றுக்கொண்டவராகக் காட்டிக் கொள்கிறார். தனியான அரசியல் கட்சியை அமைத்து இப்போதைக்கு பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்பது மஹிந்தவுக்குத் தெரியும். ஏனென்றால், இப்போதைக்கு தேசிய அளவிலான எந்த தேர்தலும் நடக்கப் போவதில்லை.

உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தலுக்காக ஒரு கட்சியை அமைத்து விட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் வரப்போகின்ற தேசிய அளவிலான தேர்தல்களில் கிடைக்கக் கூடிய வாய்ப்பைக் கோட்டை விட மஹிந்த ராஜபக்ஷ தயாராக இல்லை. அதனால் தான் அவர் சுதந்திரக் கட்சிக்குள் பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்பாகவேனும் இருந்து விட்டுப் போகலாம் என்று நினைக்கிறார்.

மைத்திரிபால சிறிசேனவுக்குப் பின்னர், வெற்றிடம் ஏற்படுகின்ற போது, பிரதமர் பதவியையும், சுதந்திரக் கட்சித் தலைமைப் பதவியையும், எட்டிப்பிடிக்கலாம் என்று மட்டும் மஹிந்த கணக்குப் போட்டிருக்கவில்லை.

தாம் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதும், பிரதமர் பதவிக்குப் போட்டியிடலாம் என்று மைத்திரிபால சிறிசேன பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இது அவர், ஏற்கெனவே கூறிவந்த நிலைப்பாட்டுக்கு முரணானது. அவரது இந்தக் கருத்தையடுத்து மஹிந்த சற்று சுதாகரித்துக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அதனால் தான், அவர் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் மூலம் கட்சித் தலைமையைக் கைப்பற்றும் திட்டம் என்று பற்றிய ஆலோசனைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது.

சுதந்திரக் கட்சியின் யாப்பின் படி, ஜனாதிபதி, பிரதமர் போன்ற பெரிய பதவியில் இருப்பவரே அதன் தலைவராக இருக்க முடியும். அதனால் தான், மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததும் கட்சித் தலைமையை விட்டுக் கொடுத்தார். இல்லாவிட்டால், அவர் அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்திருப்பார்.

சுதந்திரக் கட்சித் தலைமையை கைப்பற்ற வேண்டுமாயின், அதன் யாப்பில் திருத்தம் செய்ய வேண்டும். சுதந்திரக் கட்சியின் அமைப்பார்கள், செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில், முன்னர் மஹிந்தவுக்கு கணிசமான ஆதரவு இருந்தாலும், இப்போது அவரது பக்கம் நிற்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

எனவே, மீண்டும் அவர்களின் ஆதரவை உறுதிப்படுத்திக் கட்சியின் யாப்பில் திருத்தம் செய்து தலைமைப் பதவியைப் பிடிக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல். அதிகளவு செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் யாப்பில் திருத்தம் செய்யும் மஹிந்தவின் முயற்சி வெற்றியளிக்கலாம். அது, மைத்திரிபால சிறிசேனவின் தலைமைப் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

மஹிந்த ராஜபக்ஷ, இதை எந்தளவுக்கு வெளிப்படையாக முன்னெடுப்பார் என்று தெரியவில்லை. ராஜபக்ஷ குடும்பத்தை அரசியலில் இருந்து ஐ.தே.கவினாலோ, சுதந்திரக் கட்சியாலோ அகற்ற முடியாது, மக்களால் தான் முடியும் என்று பசில் ராஜபக்ஷ அண்மையில் கூறியதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும். ராஜபக்ஷ குடும்பம், அரசியலை விட்டு ஓடப் போவதில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.

மஹிந்த, பசில், சமல் போன்ற ராஜபக்ஷ குடும்பத்தின் வாரிசுகள், அடுத்த தலைமுறையும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றால், சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவின் இருப்பு அவசியம். அங்கிருந்து அவர் வெளியேறினால், அது, ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கி விடுமோ என்ற பயம் அவர்களிடம் உள்ளது. அதனால் தான் மஹிந்த அங்கிருந்து வெளியேறாமல், கட்சியின் தலைமைப் பதவியை மீண்டும் பிடிக்க எத்தனிக்கிறார்.

மஹிந்தவின் இந்த நிலைப்பாடு, மைத்திரி- சந்திரிகா கூட்டுக்கு கடுமையான சவாலாகவே இருக்கப் போகிறது. சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவின் பின்னால் செல்லத்தக்கவர்கள் இன்னமும் நிறையப் பேர் இருக்கின்றனர். அவர்கள் எந்த நேரத்தில் எப்பபடிச் செயற்படுவர் என்பதை திட்டவட்டமாக கூறமுடியாது. இதனால், மைத்திரி- சந்திரிகா தலைமையைப் பொறுத்தவரை- மஹிந்தவை எப்போதும் கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

மஹிந்தவை ஒரு வட்டத்துக்குள் சிக்கவைக்க முயன்றவர்கள், இப்போது, அவர்களுக்குத் தெரியாமல் இன்னொரு வட்டத்துக்குள் சிக்கிக் கொளத் தொடங்கியுள்ளனர் என்றே கூறலாம்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X