2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

கார்ட்போட் கட்டில்; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

Freelancer   / 2021 ஜூலை 19 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக் கிராமத்தில், வீரர்கள், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டில்கள் தரமற்றதாக இருப்பதாகவும், வீரர்கள் உடலுறவு கொள்ளமுடியாத வகையில் உள்நோக்கத்துடன் இவை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீரர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் எதிர்வரும் 23ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கின்றன. இதில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள  வீர,வீராங்கனைகள் 11,500 பேர் தங்குவதற்கு ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள தங்கும் விடுதிகளில் உள்ள கட்டில்கள் தரமற்றவையாக இருப்பதாகவும், சமூக விலகல் என்ற பெயரில் வீரர்களோ, வீராங்கனைகளோ உடல் ரீதியாக உறவு கொள்ளக்கூடாது என்பதற்காக கட்டிலை கார்ட்போட் கொண்டு தரமற்றதாக உருவாக்கியிருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து பல்வேறு சமூக ஊடகங்களிலும் பரவலாக வாதங்கள் எழுந்தன.

இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ள அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜிம்னாஸ்ட் ரைஸ் மெக்கிளனகன் தனக்கு ஒதுக்கப்பட்ட கட்டிலில் ஏறிக் குதித்து அதன் உறுதித் தன்மையைப் பற்றி விளக்கியும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியும் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கு வழங்கப்பட்ட கட்டில் ஆண், பெண் உறவுக்கு எதிரானது என்று கூறப்படுகிறது. எல்லோரும் சொல்வது போல் கட்டில் கார்ட்போட்டால் தான் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவை எளிதில் உடையக் கூடியதாக இல்லை. அது போலிச் செய்தி. அதை நம்பாதீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதனை உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சர்வதேச ஒலிம்பிக்க சங்கம் (ஐ.ஓ.சி), "வதந்தியை உடைத்தமைக்கு நன்றி ரைஸ். அயர்லாந்து டீம் ஜிம்னாஸ்ட் ரைஸ் மெக்கிளனகன் கூறியதுபோல் கார்ட்போட் கட்டில்கள் தரமானவை உறுதியானவை" என்று பதிவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஏர்வீவ் என்ற நிறுவனம் ஒலிம்பிக் கிராமத்துக்கான கட்டில்களைத் தயாரித்தது. ஒவ்வொரு கட்டிலும் 200 கிலோகிராம் எடையைத் தாங்கக் கூடியது என்றும் பல கட்ட சோதனைகளுக்குப் பிறகே இந்த கட்டில்கள் ஒலிம்பிக் கிராமத்துக்காக வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .