Lenin Raj / 2026 மார்ச் 30 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

சரவணன்
மட்டக்களப்பு நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற பாழடைந்த கிணறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணப் பெருங்குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் இதகை உறுதிப்படுத்தினார்.
பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கடத்தி, அவர்களின் தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டு, கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்துவந்த கும்பலின் பிரதான சூத்திரதாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20-ஆம் தேதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து, வவுணதீவு கொத்தியாவலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடனும், ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் சடலமாகவும் மீட்கப்பட்டனர். அத்துடன், அந்த இளம் தாயின் 3 வயது 4 மாதங்கள் நிரம்பிய சிறுமி, வயல் பகுதியில் அழுதுகொண்டிருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக, கிழக்கு மாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜெயசுந்தரவின் வழிகாட்டலில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் நேரடிக் கண்காணிப்பில் அதிரடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, வவுணதீவு காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர், 22 வயதுடைய தம்பி மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய திருகோணமலை வீதியைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் உட்பட 5 பேர் 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரு ஆட்டோக்கள், கார் ஒன்று, கோடரி மற்றும் கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த மயக்க மருந்துகள் மீட்கப்பட்டதுடன் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய மேலதிக விசாரணையில், கொள்ளையர்களை இயக்கி வந்த பிரதான சூத்திரதாரியான வத்தளையைச் சேர்ந்த 49 வயதுடைய மருந்து விநியோகஸ்தர் 'சிவா' எனப்படும் திவாகரன் அடையாளம் காணப்பட்டார்.
அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வத்தளை பகுதியில் வைத்துச் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
24 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
1 hours ago