2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கோட்டாவின் ‘திருகுதாளம்’ போட்டு உடைத்தார் எஸ்.பி

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ், ப.பிறின்சியா டிக்சி

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் திருகுதாளம் தொடர்பில், முன்னாள் உயர் கல்வி அமைச்சரும் சமூக வலுவூட்டல் நலன்புரி அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்க, அம்பலப்படுத்திவிட்டார். 

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில், நேற்று (08) இடம்பெற்ற, வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  

“கோட்டாபய ராஜபக்ஷ, தனியான சட்டத்தின் ஊடாக, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் ஊடாக மருத்துவ பட்டத்தை வழங்குவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்தார். அப்போது மருத்துவ சபை மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆகியன அதனை எதிர்க்கவில்லை. மௌனமாகவே இருந்தனர்.  

இந்த செயற்பாட்டுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தன்னுடைய கடுமையான எதிர்ப்பை வெளிக்காட்டியது. கோட்டாபய கொண்டுவந்த தனியான சட்டமூலத்துக்காக வைத்திய சபையின் சட்டத்திலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.  

“இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூளையில் என்னமோ ஆகிவிட்டது. அதனால்தான் சைட்டத்துக்கு முன்பு ஆதரவு தெரிவித்த அவர், இன்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்” என்றும் அவர் கூறினார். 

 “நாட்டிலுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தனியார் கல்லூரிகளை அமைக்கத் தீர்மானித்தோம். சைட்டம் கல்லூரி அமைக்க, அன்று சம்மதம் சொன்னவர்கள் இன்று எதிர்க்கின்றனர். 

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியபோது, அதனை ஆராய்ந்து அனுமதி வழங்க பல்கலைக்கழக பீடாதிபதிகள் 8 பேர் உள்ளிட்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் நன்று ஆராய்ந்து அனுமதி வழங்கினர். 

ஆனால், இன்று அதற்கு எதிர்ப்பு வெளியிடுவது ஏனென்று தெரியவில்லை. அவர்கள் இன்றும் பல்கலைக்கழகங்களில் உள்ளனர். அவர்களில் சிலர் சைட்டத்தில் விரிவுரைகளையும் நடத்தியுள்ளனர். 

இலங்கையில் உள்ள சலக மாணவர்களுக்கும் உயர்கல்வியைப் பெற்றுக்கொடுக்க பல பல்கலைக்கழங்களை உருவாக்கத் தீர்மானித்தோம். அதனடிப்படையில் சைட்டம் உருவானது. 

சைட்டத்தில் கல்வி கற்றவர்கள் பட்டம் பெற்று, மருத்துவ சங்கத்தில் பதிவு செய்ய வந்தபோதுதான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 

அவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் காரணமாக மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். சைட்டம் கல்லுரியின் முதலாம் இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தொடர்பில் வர்த்தமானி வெளியிட்ட போதும், நான்காவது ஆண்டு மாணவர்கள் தொடர்பில் வெளியிட முடியவில்லை. 

மருத்துவ சங்கத்தின் பதிவாளரான டெரன்ஸ் சில்வாவின் பிள்ளையும் சைட்டத்தில் கல்வி கற்றார். 4ஆவது ஆண்டு மாணவர்கள் தொடர்பில் வர்த்தமானி வெளியிட முடியாமல் போனபோது, அவர் ஒடிவந்து எப்படியாவது வர்த்தமானி வெளியிடுமாறு கூறினார். அதைச் செய்யவில்லை. அதனால் பிள்ளையை மருத்துவ விடுமுறை எடுக்க வைத்து, அடுத்த வருடத்தில் பதிவு செய்யச் சொன்னார். எனினும், விருந்துபசாரத்தின் போது அவரது பிள்ளை நன்றாக நடனமாடிக் காட்டிக்கொடுத்து விட்டார்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X