Lenin Raj / 2026 ஏப்ரல் 10 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிலக்கரி மோசடியுடன் தொடர்புடைய நேரடி குற்றவாளியான அமைச்சர் குமார ஜயகொடியைப் பதவியிலிருந்து நீக்காவிட்டால், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அனைவரும் இந்த மோசடிக்குத் தொடர்புடையவர்களாகக் கருதப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பித்துச் சபையில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
"நாட்டிற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலக்கரி கப்பல் தொடர்பில் போதுமான விளக்கங்களை நாங்கள் வழங்கியிருந்தோம். நிலக்கரி தரமற்றது, உரிய காலத்தில் கிடைக்கவில்லை, இதனால் பாரிய நட்டம் ஏற்படப் போகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினோம். நிலக்கரி தரமற்றது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் அதனால் ஏற்படும் நட்டத்தை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்றும் அமைச்சர் பதிலளித்திருந்தார்.
நாடாளுமன்ற உள்கட்டமைப்பு தொடர்பான கண்காணிப்புக் குழுவின் கோரிக்கைக்கு அமைய, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருந்தது. வருகை தந்துள்ள 9 நிலக்கரி கப்பல்களிலுள்ள நிலக்கரியும் தரமற்றதாகும்; இதனால் பாரிய நட்டம் ஏற்படும். விதிக்கப்படும் அபராதத்திற்கும் ஏற்படும் நட்டத்திற்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது. இந்த 9 நிலக்கரி கப்பல்களாலும் 849 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்தது.
நிலக்கரி இறக்குமதி தொடர்பில் பிரச்சினைகளும் நட்டமும் ஏற்படப் போவதை நாங்கள் அறிவோம். ஆனால், 'நாங்கள் ஊழல் செய்யவில்லை, நாங்களே சரியாக விலைமனுக்கோரலை முன்னெடுத்துள்ளோம்' என அமைச்சர் கூறினார். எனினும், நிலக்கரி இறக்குமதிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிறுவனம் தகுதியற்றது மாத்திரமன்றி, அதில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக ஏப்ரல் 02, வியாழக்கிழமை கணக்காய்வாளர் நாயகம் அறிவித்திருந்தார். அமைச்சர் அதனையும் பொருட்படுத்தவில்லை.
தற்போது அமைச்சராகப் பதவி வகிப்பவருக்குச் சில அடிப்படைப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. குமார ஜயக்கொடி உரக்கூட்டுத்தாபனத்தின் பிரிவொன்றில் முகாமையாளராகச் செயற்பட்ட காலத்திலேயே இந்தப் பிரச்சினைகள் ஆரம்பமாகின. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விவசாய அமைச்சராகச் செயற்பட்ட போதே, தன்னுடைய நண்பனான குமார ஜயகொடியை உரக்கூட்டுத்தாபனத்தின் முகாமையாளராக நியமித்தார். அவரின் அந்த நியமனம் ஓர் அரசியல் நியமனமாகும்.
அவர் அங்கு கடமையாற்றிய போது, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மேல் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது, அரச பணியாளராகக் கடமையாற்றிய போது அவரால் மேற்கொள்ளப்பட்ட ஊழலுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பல ஊழல்களுக்கு எதிராகப் போராடிய தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் குமார ஜயகொடியைக் காப்பாற்ற முயல்வது கவலையளிக்கிறது," என்றார்.
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
9 hours ago