2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

தேர்தலை பிற்போடும் புதிய முயற்சி

Freelancer   / 2023 ஜனவரி 24 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தலை சீர்குலைக்கும் புதிய நடவடிக்கையாக நாளை அரசியலமைப்பு பேரவையின் ஊடாக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்றியமைத்து தேர்தல் ஆணைக்குழுவை சீர்குலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று (24) தெரிவித்தார்.

மக்களின் இறையாண்மையில் கை வைத்தால் அதற்கு வழங்கும் தண்டனை நாட்டின் சட்டப்புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஹபுஹின்ன சூட்சமம் மற்றும் திறைசேரி செயலாளர் ஊடாக மக்கள் இறையாண்மையை நாசம் செய்யும் முயற்சிகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் செல்லும் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆந் திகதி நடைபெறவுள்ள தேர்தலை சீர்குலைக்க அரசியலமைப்பு பேரவை கூட்டத்தை பயன்படுத்தினால், நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் வகையில் அந்த சூட்சம நடவடிக்கையை நிச்சயமாக தோற்கடிப்பதுடன் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும்  மேற்கொள்வோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தலை ஒத்திவைக்கும் சதிகள் வேண்டாம் 

அதேபோல், நாளை கூடும் அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் தேர்தலை ஒத்திவைக்கும் சதித்திட்டங்களைச் சேர்க்க வேண்டாம் என்றும், சுயாதீனமான தேர்தல் ஆணைக்குழு பிரதிநிதிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எதையும் செய்யக் கூடாது என்றும் அரசியலமைப்பு பேரவையின் பொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும்,எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் இந்நாட்டில் மக்களின் இறையாண்மையை கெடுக்கும் சகல சதிகளையும் முறியடிக்க தலைமைத்துவம் வழங்குவதாகவும், மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க எந்நேரத்திலும் முன்வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அன்று வேண்டாம், இன்று வேண்டும் 

தேர்தல் அவசியம் என அன்று தான் கூறிய போது ​​சேறுபூசும் விதமாக குரல் எழுப்பியவர்கள் தற்போது தேர்தலை நடத்துமாறு கோருவதாகவும், அரசாங்கத்தின் தேர்தலை ஒத்திவைக்கும் அனைத்து முயற்சிகளையும் தோற்கடிக்க தலைமைத்துவம் வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.
 
புதிய சூட்சுமத்துக்குத் தயாராகிறது அரசாங்கம் 

பல மாதங்களாக இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்புகளால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தடுக்கவும், சீர்குலைக்கவும் பெரும் சதியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் ஹபுஹின்ன ஊடாக அமைச்சரவை மேற்கொண்டதாக பொய்யான தீர்மானங்கள்,மோசடித் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை ஏற்காதிருக்கும் துரோக நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் திறைசேரியின் செயலாளர் மூலம் தேர்தலுக்கான பணத்தை வழங்க முடியாது என்றும்,அரசாங்கத்திடம் பணமில்லை என்றும், சமூக நலப்பணிகள் உட்பட சம்பளம் வழங்குவதற்குக் கூட முடியாது என தெரிவிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .