2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நல்லிணக்கத்தில் முன்னேற்றம் இல்லாமை தமிழருக்கு அவநம்பிக்கை

Gavitha   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நல்லிணக்கத்துக்கான முன்னேற்றம் இல்லாமையால், இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் அவநம்பிக்கையில் வாழ்ந்து வருவதாக, உலக தமிழர் பேரவை, அறிக்கை வெளியிட்டுள்ளது.  

இது தொடர்பில் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

“மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், இலங்கையிலுள்ள சிறுபான்மையினரது பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தும், அது நிறைவேற்றப்படாத நிலையிலேயே உள்ளது. வடக்கையும் கிழக்கையும் இயல்புநிலைக்கு கொண்டுவருதல், அவற்றை இராணுவமயத்திலிருந்து அகற்றுதல், அவற்றை விட நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், மறு எழுச்சி வழங்குவதாக பல்வேறு அரசியல்வாதிகளிடமிருந்து வெளிவரும் செய்திகள், நிறைவேற்றப்படாமையால், தமிழ் மக்கள் மத்தியில் நல்லாட்சி அரசாங்கம் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலண்டனை அடிப்படையாகக் கொண்ட இந்தக் குழு, சிறுபான்மையினருக்கான ஐ.நா விசேட தூதுவர் ரீட்டா ஐசக்-நாடியாவால், சமாதானமான சகவாழ்வை அடைவதற்காக “முழுமையான, சரியாகத் திட்டமிடப்பட்ட, மிகவும் கூட்டிணைக்கப்பட்ட உண்மை, நல்லிணக்கம், ஆற்றுப்படுத்துதல், பொறுப்புக்கூறல் நடைமுறையொன்று இடம்பெற வேண்டும்” என்று வழங்கிய கருத்தை வரவேற்றுள்ளது.  

“சிறுபான்மைச் சமூகங்களுக்கு மிகவும் முக்கியமானதும் உணர்வுபூர்வதுமான பிரச்சினைகளான காணாமற்போனோர், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல், பாதுகாப்புச் சம்பந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டோரின் விடுதலை, இராணுவ வெளியேற்றம் போன்றவை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று, ஐசக் நாடியாவின் பரிந்துரை, அத்தோடு அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயற்பாட்டில், சிறுபான்மைச் சமூகங்களின் பார்வைகளும் எதிர்பார்ப்புகளும் உள்ளடக்கப்பட வேண்டுமென்ற அவரது கோரிக்கை ஆகியன, தமிழ்ச் சமூகத்துடன் முழுமையாக இயைந்து காணப்படுகிறது” என, உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.  

தங்கிப் போயிருக்கும் முன்னேற்றம் தொடர்பாக விசேட தூதுவரின் எச்சரிக்கையும் மாற்றத்துக்கான உந்தத்தைத் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளுக்கான உடனடித் தேவையின் அவசியம் குறித்த அவரது கருத்தும், இலங்கை தொடர்பான முக்கியமான அவதானிப்பாளர்களின் பார்வையை வெளிப்படுத்துகிறது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

பொறுப்புக்கூறுதல், அரசியல் தீர்வு, நல்லிணக்கம் ஆகியவற்றில் கவனஞ்செலுத்தி, இலக்குவைத்த முன்னெடுப்புகளை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ள பேரவை, இலங்கையை நவீன, ஜனநாயக, பன்மைத்துவமிக்க, செழிப்பான நாடாக மாற்றுவதற்குக் காணப்படும் விசேடமான சந்தர்ப்பம், கைநழுவிடப்படக்கூடாது எனவும் தெரிவித்தது.  

தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றகரமான அரசியல் மாற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் துரிதப்படுத்தவும், தன்னால் முடிந்த அனைத்துப் பங்களிப்புகளையும் மேற்கொள்வதற்கு, உலக தமிழர் பேரவை தயாராக இருப்பதாகவும், அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X