2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மீதொட்டமுல்ல குப்பையை அகற்றுவதற்கு ரூ.10 பில்லியனை மஹிந்த ஒதுக்கியிருந்தார்

Gavitha   / 2017 ஏப்ரல் 17 , பி.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரத்தில், அன்றாடம் சேரும் திண்மக் கழிவுகளை மாற்றுவதற்கும், கொலன்னாவை மீதொட்டமுல்ல குப்பையை அகற்றுவதற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது ஆட்சிக் காலத்தின் போது 10 பில்லியன் ரூபாயை ஒதுக்கியிருந்தார் என, செய்தி வெளியாகியுள்ளது.

புத்தளம் அருவாக்காலு பிரதேசத்துக்கே, குப்பைகளை மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.  

இதற்கான அமைச்சரவை பத்திரம், பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  

அந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு, 2014 ஓகஸ்ட் 14ஆம் திகதியன்றே அனுமதி கிடைத்துள்ளது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அமைச்சரவை அலுவலக இணையத்தளத்திலேயே இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. அந்தச் அமைச்சரவைப் பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

கொழும்பு தலைநகரத்துக்கு அண்மைய பிரதேசங்களில் சேரும், நகரக் கழிவுப் பொருட்களை அகற்றுவதற்காக சுற்றாடல் ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் பொருளாதார ரீதியில் செயற்படுத்தக் கூடியதுமான தீர்வொன்று பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 

கொழும்பு நகரத்தில் சேர்க்கப்படும் நாளாந்த நகர திண்மக் கழிவுகள் சுமார் 700 மெற்றிக்தொன் என, அளவிடப்பட்டுள்ளது.  

இதேவேளை, தலைநகரப் பிரதேசத்தின் நகர மயமாக்கப்பட்ட ஏனைய உள்ளூராட்சி அதிகாரப் பிரதேசங்களில் அவ்வாறு சேரும் நகரத் திண்மக் கழிவுகளுடன் எடுக்கும் போது, நாளொன்றுக்கு சுமார் 1,200 மெற்றிக் தொன் கழிவுகள் சேரும்.  

புத்தளம் மாவட்டத்தின் அருவாக்காடு பிரதேசத்தில் துப்பரவேற்பாட்டு கழிவுப் பொருட்களை இடும் இடமொன்றை நிர்மாணித்து, இக்குப்பைகள் அகற்றப்படும். 

இதேவேளை, கொலன்னாவை, மீதொட்டமுல்ல இடமாற்ற நிலையத்திலிருந்து திண்மக் கழிவுகளை ரயிலின் மூலம் கொண்டு செல்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.  

பிரேரிக்கப்பட்டுள்ள துப்பரவேற்பாட்டுக் கழிவுத் தடுப்பு சர்வதேச தரத்துக்கு அமைவாக மேற்கொள்ளப்படும்.  

ரயில்வேத் திணைக்களத்தினால், அவ்விடத்துக்கு செல்வதற்கான நிர்மாணிப்பு திட்டங்கள் ஏற்கெனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, திறந்த ரயில் பெட்டிகள், ரயில் எஞ்சின்கள் தொடர்பிலும் கூட கட்டளை விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

இந்தக் கருத்திட்டத்தின் மொத்த செலவு 107 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். (இலங்கை ரூபாய் 10 பில்லியன்). இது தொடர்பிலான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் அவ்வமைச்சுக்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X