2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

’வவுணதீவை பிடித்திருந்தால் 4/21 ஐ தடுத்திருக்கலாம்’

Freelancer   / 2026 ஏப்ரல் 10 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுணதீவு பொலிஸார் படுகொலை தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட்டிருந்தால், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றிருக்காது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

"உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோருகின்றார். ஆனால், அவர் கடந்த வாரம் அந்தச் சூத்திரதாரியைத் தேடும் நோக்கில் ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தார். தாக்குதல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அனைத்து விடயங்களையும் இப்போது பகிரங்கப்படுத்த முடியாது.
2019 ஏப்ரல் 21 அன்று நாட்டில் எட்டு இடங்களில் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. காத்தான்குடியைச் சேர்ந்த சஹ்ரான் உள்ளிட்ட தரப்பினரே இதனைச் செய்தனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதலே இதற்கான சூழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

வவுணதீவில் 2018 நவம்பரில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை, மாவனெல்லையில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டமை, வனாத்தவில்லு வெடிபொருட்கள் மீட்பு உள்ளிட்ட அனைத்துச் சம்பவங்களும் ஒரே தரப்பினராலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன. வவுணதீவு பொலிஸ் படுகொலை விசாரணைகளைத் திட்டமிட்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது திசைதிருப்பி, சஹ்ரானைப் பாதுகாத்துள்ளனர். 

விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த சரத் சமந்த என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், குண்டுத்தாக்குதலுக்குத் துணை நின்ற குற்றச்சாட்டில் சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இவ்வழக்கின் முதலாவது சாட்சியாளராகக் காணப்பட்டார். இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதோடு, குற்றவாளிகளைப் பாதுகாக்கவும் மறைமுகமாக உதவியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த 48 மணித்தியாலங்களுக்குள், தாக்குதல் குறித்து விசாரணை செய்த குற்றப்புலனாய்வு அதிகாரிகளை இடமாற்றம் செய்தார். அத்துடன் 704 அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட சட்டவிரோத வெளிநாட்டுப் பயணத்தடை குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகிறோம். இதில் ஒரு பிரதி பொலிஸ்மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் படுகொலை தொடர்பில் விளக்கமறியலில் உள்ள பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்), இந்த குண்டுத்தாக்குதல்கள் குறித்துப் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். சஹ்ரான் குழுவினரை ஒரு தரப்பினர் தொடர்ச்சியாக வழிநடத்தியுள்ளனர் என்பது சாட்சியங்கள் ஊடாகத் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது," என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .