2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

கிழக்கு மாகாணத்தில் உருவாகும் ஆசிரியர்களை ஏனைய மாவட்டங்களுக்கு நியமித்தால் கல்வி வளர்ச்சியில் பின்தள்ளப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தை எவ்வாறு முன்னேற்றுவது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் கேள்வியெழுப்பினார்.

கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர்களுக்கான பற்றாக்குறைப் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண சபையின் 64ஆவது அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது,  2016ஆம் ஆண்டு தேசிய கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியாகிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரையும் கிழக்கு மாகாணத்திலேயே ஆசிரியர் பணியில் நியமிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி அவசரப் பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் முன்வைத்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'இந்த வருடம் கல்வியியல் கல்லூரிகளிலிருந்து  வெளியாகிய ஆசிரியர்களில் 192 ஆசிரியர்கள் மாத்திரமே கிழக்கு மாகாணத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்; தமிழ்மொழி மூலமான ஆசிரியர்கள் 122 பேரும் சிங்களமொழி மூலமான ஆசிரியர்கள் 70 பேரும் அடங்குகின்றனர்' என்றார்.

'திருகோணமலை கல்வி வலயத்தில் ஆரம்பக்கல்விப் பிரிவுக்கு 90 ஆசிரியர்கள்  பற்றாக்குறையாகவுள்ளனர். மேலும், இக்கல்வி வலயத்தில் விஞ்ஞானப் பாடத்துக்கு 6 ஆசிரியர்களும்  கணித பாடத்துக்கு 31 ஆசிரியர்களும் ஆங்கிலப் பாடத்துக்கு 11 ஆசிரியர்களும் தேவையாகவுள்ளனர்.

இவ்வாறு எமது மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்ற இவ்வேளையில், எமது மாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்கள் வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் 288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டபோதும், ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருந்துவந்தது.  

இந்த வருடம் 192 ஆசிரியர்கள் இம்மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த 192 பேரும் எவ்வகையில்  போதும்?

இம்மாகாணத்தில் உருவாகும் ஆசிரியர்களை வெளி மாகாணங்களில் நியமித்தால், இங்கு எவ்வாறு ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்?' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X