2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

'சமய ரீதியாகவே முஸ்லிம்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர்'

Thipaan   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

'முஸ்லிம்களுடைய  அரசியல், கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை எல்லாவற்றுக்கும் அடையாளமே அவர்கள் பின்பற்றுகின்ற மர்க்கம்தான். அவர்கள் சார்திருக்கின்ற மொழி அல்ல என்பதையும், உலகில், முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் எந்த மொழியைப் பேசினாலும் சமய ரீதியாகவே அடையாளப்படுத்தப்படுகின்றனர் என்பதையும், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிந்திருக்க வேண்டும்' என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகறூப் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கடந்த வாரம், மட்டக்களப்புக்கு விஜயம் செய்து, அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர், முஸ்லிம் சமூகம் அரசியலுக்காக சமயத்தைப் பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தார். அதனைக் கண்டித்ததே இந்த அறிக்கையினை விடுகிறேன்.

முஸ்லிம்கள் என்பவர்கள், இறைவன் ஒருவன், வணக்கத்துக்குரியவன் அவனைத் தவிற வேறு யாரும் இல்லை என்ற கோட்பாட்டோடு வாழ்கின்றவர்கள். இதுவே அவர்களுடைய வாழ்க்கையும் மர்க்கமமமாகும்.

ஆனால், ஏனைய சமூகங்கள் மொழி ரீதியாகவே அடையாளப்படுத்தப்படுகின்றன என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது, தெற்கில் இருந்த சிங்கள கிறிஸ்தவர்கள், வடக்கில் இருந்த தமிழ் மொழி பேசுகின்ற கிறிஸ்தவர்களைத் தாக்கினார்கள், காயப்படுத்தினார்கள், உடமைகளைச் சேதப்படுத்தினார்கள். இது, அவர்கள் சமயரீதியாக அடையாளப்படுத்தப்படவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன், 40 வருடங்களுக்கு மேல் நீதித் துறையில் சேவையாற்றிய ஒருவர். அவர், முதலமைச்சராக இருக்கின்ற வட மாகாணத்திலேயே, ஓரிரு மணித்தியால அவகாசத்தில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் உடுத்த உடையோடு வெளியேற்றப்பட்டனர்.

பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை இழந்து, 25 வருடங்களுக்கு மேலாக அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் அந்த மக்களுக்கு, முதலமைச்சர் என்ற வகையிலாவது இது வரைக்கும் எந்தவோர் உத்தரவாதத்தையும் அவர் வழங்கவில்லை.

அப்படிப்பட்ட, முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மதிக்கத் தெரியாத ஒருவருக்கு, முஸ்லிம் சமூகம் அரசியலுக்காக சமயத்தைப் பயன்படுத்துகிறது என்று சொல்லுவதற்கு என்ன அருகதையிருக்கிறது.

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் எந்த மூலையில் வாழ்ந்தாலும் சரி, அவர்கள் தமிழ் மொழியைத்தான் பேசுகிறார்கள் என்பதையிட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பெருமைப்பட வேண்டும். மாறாக எங்களுடைய சமயத்தையும் அரசியலையும் அவரும் கொச்சைப்படுத்த வேண்டாம். தமிழ்க் கூட்டமைப்பும் கொச்சைப்படுத்தக் கூடாது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X