Shanmugan Murugavel / 2016 நவம்பர் 22 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியில், இனிப்பொன்றைப் பயன்படுத்திப் பந்தை மினுங்கச் செய்தமை தொடர்பான குற்றச்சாட்டில், தென்னாபிரிக்க அணித் தலைவர் ஃபப் டு பிளெஸி, குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். இக்குற்றம் தொடர்பாகப் போட்டித் தடையிலிருந்து தப்பிய டு பிளெஸிக்கு, அவரது போட்டி ஊதியத்தின் 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
வாயில் இனிப்பொன்றை வைத்துக் கொண்டு, பந்தை அவர் மினுக்கும் காணொளி, ஊடகங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து, அவர் மீது சர்வதேச கிரிக்கெட் சபையால் குற்றஞ்சுமத்தப்பட்டது. எனினும், குற்றச்சாட்டை அவர் ஏற்காமையால், அது தொடர்பான விசாரணை இடம்பெற்றது. தொலைக்காட்சிக் காணொளிகளைப் பார்வையிட்ட சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் றிச்சர்ட்ஸன், ஃபப் டு பிளெஸி மீது குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்திருந்தார்.
விசாரணைகளில் டேவிட் றிச்சர்ட்ஸனின் தரப்பினதும் ஃபப் டு பிளெஸியின் தரப்பினதும் மெரிலிபோன் கிரிக்கெட் கழகத்தின் கிரிக்கெட் பகுதிக்கான தலைவர் ஜோன் ஸ்டெஃபென்ஸனினமும் வாதங்களைக் கேட்ட போட்டி மத்தியஸ்தர் அன்டி பைகுறொப்ட், இந்தத் தீர்ப்பை வழங்கினார். இது தொடர்பான விசாரணையில், அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். அதைத் தொடர்ந்தே அபராதம் விதிக்கப்பட்டது. அத்தோடு, தவறான புள்ளிகளாக அவருக்கு 3 புள்ளிகள் சேர்க்கப்பட்டன. 24 மாதகாலத்தில், 4 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை அவர் அடைவாராயின், போட்டிகளிலிருந்து அவர் தடை செய்யப்படுவார். எனினும், இந்தத் தீர்ப்புக்கெதிராக, ஃபப் டு பிளெஸி மேன்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவருக்குப் போட்டித்தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி காணப்பட்ட நிலையில், அதிலிருந்து தப்பித்துக் கொண்டார். இதனால், நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ள 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவுள்ளார்.
முன்னதாக, இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பாகக் கருத்துத் தெரிவித்த தென்னாபிரிக்கப் பயிற்றுநர் றசல் டொமிங்கோ, தனது அணித்தலைவரை நியாயப்படுத்தியிருந்தார். இவ்வாறான சம்பவங்கள் தினமும் இடம்பெறுகின்றன எனத் தெரிவித்த அவர், அது தொடர்பில் எது சரி, எது பிழை என்பது தொடர்பில், கிரிக்கெட் நிர்வாகிகள் முடிவெடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டிலும் 2014ஆம் ஆண்டிலும், தென்னாபிரிக்க அணியின் வீரர்கள், பந்தைச் சேதப்படுத்தும் விடயங்கள், ஊடகங்கள் மூலமாக வெளியிடப்பட்ட நிலையில், தமது அணி மாத்திரமே இலக்குவைக்கப்படுவதாக உணர்வதாகவும் டொமிங்கோ குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் ராஜ்கோட்டில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணித் தலைவர் விராத் கோலியும், இனிப்பொன்றைப் பயன்படுத்திப் பந்தை மினுக்குவது போன்ற காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
15 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
29 minute ago