2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: டொட்டென்ஹாமைத் தோற்கடித்தது செல்சி

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 27 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் பிறீமியர் தொடரில், நேற்று முன்தினம் சனிக்கிழமை (26) இடம்பெற்ற போட்டியொன்றில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணியைத் தோற்கடித்த செல்சி, இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் தான் இழந்த முதலிடத்தை மீளவும் பெற்றுக் கொண்டது.

டொட்டென்ஹாமுடனான போட்டியில் ஒரு கோல் பின்தங்கியிருந்த செல்சி, 2-1 என்ற கோல் கணக்கில் வென்று, இப்பருவ காலத்தில் டொட்டென்ஹாமுக்கு முதலாவது பிறீமியர் லீக் தோல்வியை வழங்கியுள்ளது.

போட்டியின் 11ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியன் எரிக்சனின் மூலம் கோலொன்றினைப் பெற்ற டொட்டென்ஹாம் முதற்பாதியின் இறுதிக் கணங்கள் வரை போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. முதற்பாதியின் இறுதி நிமிடத்தில் அபாரமாக கோலொன்றைப் பெற்ற செல்சியின் பெட்ரோ, கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

பின்னர், இரண்டாவது பாதி ஆரம்பித்து ஆறாவது நிமிடத்தில் செல்சியின் விக்டர் மோஸஸ் பெற்ற கோல், செல்சிக்கு வெற்றிக் கோலாக அமைய 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது. இது பிறீமியர் லீக்கில், செல்சியின் ஏழாவது தொடர்ச்சியான வெற்றியாகும். மறுபக்கம், செல்சியின் ஸ்டம்போர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் வெற்றி பெறாத போட்டிகளின் எண்ணிக்கையை 30 ஆக டொட்டென்ஹாம் அதிகரித்துக் கொண்டது. இறுதியாக, 1990ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமே வென்றிருந்தது.

லிவர்பூல், 2-0 என்ற கோல்கணக்கில் சந்தர்லேண்ட்டைத் தோற்கடித்து, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் 30 புள்ளிகளைப் பெற்று முதலிடத்துக்குச் சென்றபோதும், பின்னர் இடம்பெற்ற டொட்டென்ஹாமுடனான போட்டியில் செல்சி வென்றதால், இரண்டாமிடத்துக்கு கீழிறங்கியது.

மன்செஸ்டர் சிற்றி, ஒரு கோல் பின்தங்கியிருந்து பின்னர், 2-1 என்ற கோல் கணக்கில் பேர்ண்லியைத் தோற்கடித்தது. சிற்றி சார்பாக பெறப்பட்ட இரண்டு கோல்களையும் சேர்ஜியோ அக்ரோ பெற்றார்.

இதேவேளை, லெய்செஸ்டர் சிற்றி, மிடில்ஸ்பேர்க் அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .