2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

இங்கிலாந்து முகாமையாளர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார் அலர்டைஸ்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 28 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் சாம் அலர்டைஸ், அப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டு 67 நாட்களின் பின்னர், பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பத்திரிகையொன்று நடத்திய புலனாய்வு நடவடிக்கையில் அவர் சிக்கியதைத் தொடர்ந்தே, பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வீரர்களை முகாமை செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் போன்று வேடமிட்டுச் சென்ற குறித்த ஊடகவியலாளர்கள் இருவரிடம், பிறீமியர் லீக்கின் பரிமாற்றச் சந்தையில், தடை செய்யப்பட்ட மூன்றாம் தரப்பு உரிமைப்படுத்தல் மூலமாக எப்படிப் பணமுழைப்பது என, சாம் அலர்டைஸ் தெரிவித்தமை, காணொளியில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அதேபோல், அலர்டைஸுக்கு முன்னர் அப்பதவியில் காணப்பட்ட றோய் ஹொட்ஜ்ஸன் மீதும் விமர்சனங்களை முன்வைத்த அவர், இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்கத்தையும் முன்வைத்திருந்தார். இவற்றுக்கு மேலதிகமாக, 400,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் பெறுமதியான ஒப்பந்தமொன்றுக்கும் அவர் சம்மதம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இங்கிலாந்து முகாமையாளர் பதவியிலிருந்து விலகுவதற்கான முடிவு, இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்கத்துக்கும் அலர்டைஸுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது.
அவரது நடத்தை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கால்பந்தாட்டச் சங்கம், அவரது நடத்தையை, "பொருத்தமற்றது" என வர்ணித்தது.

"தனது முடிவெடுத்தலில், கணிசமானளவு தவறை மேற்கொண்டதாக அவர் ஏற்றுக் கொண்டுள்ளதோடு, அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார். ஆனால், அவரது நடத்தையின் பாரதூரத் தன்மை காரணமாக, கால்பந்தாட்டச் சங்கமும் அலர்டைஸும், அவரது ஒப்பந்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடிவெடுத்துள்ளன" என்று, கால்பந்தாட்டச் சங்கம் தெரிவித்தது.

இரு தரப்பும் இணைந்து எடுத்த முடிவென்பதைக் குறிப்பிட்ட அலர்டைஸ், "ஜூலை மாதத்தில், அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்டமை, மிகப்பெரிய பெருமையாகும். இந்த முடிவு குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்" என்று தெரிவித்தார். தனது உரையாடல்களில், தான் தெரிவித்த எந்த விடயமும், கால்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதி பெறப்பட வேண்டியது என்று தெளிவாகக் கூறியிருந்தாலும், அவமானப்படுத்தும் உணர்வுகளை தான் ஏற்படுத்தியிருப்பார் என்பதை உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனது காலத்தில், ஒரேயொரு போட்டியில் மாத்திரம் அவர், முகாமையாளராகச் செயற்பட்டார். ஸ்லோவாக்கியாவுக்கெதிராக இடம்பெற்ற உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியே அதுவாகும். அப்போட்டியில் இங்கிலாந்து அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .