Gopikrishna Kanagalingam / 2015 ஒக்டோபர் 25 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 5ஆவது போட்டியில் வெற்றிபெற்று, தென்னாபிரிக்க அணி அத்தொடரைக் கைப்பற்றியுள்ளது.
மும்பையில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 438 ஓட்டங்களைக் குவித்தது. ஒ.நா.ச.போட்டிகளில் பெறப்பட்ட 3ஆவது அதிகூடிய ஓட்டங்கள் இவையென்பதோடு, 2ஆவது, 3ஆவது (2 தடவைகள்) அதிகூடிய ஓட்டங்களை தென்னாபிரிக்காவே கொண்டுள்ளது.
துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக ஃபப் டு பிளெஸிஸ் 133 (காயம் காரணமாக வெளியேற்றம். 115 பந்துகள்), ஏபி.டி. வில்லியர்ஸ் 119 (61), குயின்டன் டீ கொக் 109 (87) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், மோகித் சர்மா, புவனேஷ்வர் குமார் நால்வரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதில் புவனேஷ்வர் குமார், 10 ஓவர்களில் 106 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தார்.
பதிலளித்தாடிய இந்தியா, 35.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 214 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இது, ஒ.நா.ச போட்டிகளில் இந்தியா பெற்றுக் கொண்ட 2ஆவது மிகப்பெரிய தோல்வியாகும்.
துடுப்பாட்டத்தில் அஜின்கியா ரஹானே 87 (58), ஷீகர் தவான் 60 (59) தவிர ஏனையோர் ஏமாற்றமளித்தனர்.
பந்துவீச்சில், கஜிஸ்கோ ரபடா 4, டேல் ஸ்டெய்ன் 3, இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இவ்வெற்றியுடன், இத்தொடரை 3-2 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது. இந்தியாவில் வைத்து அவ்வணி கைப்பற்றும் முதலாவது ஒ.நா.ச.போட்டித் தொடர் இதுவாகும்.
இப்போட்டியின் நாயகனாக குயின்டன் டீ கொக்கும் தொடரின் நாயகனாகவும் ஏ.பி.டி. வில்லியர்ஸும் தெரிவாகினர்.
இப்போட்டியில் வைத்து, வேகமான 6,000 ஒ.நா.ச.போட்டி ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை, தென்னாபிரிக்காவின் ஹஷிம் அம்லா படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026