2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கையை வீழ்த்திய அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2022 ஜூன் 07 , பி.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்றிரவு நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ஞ் தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில், தனுஷ்க குணதிலகவின் 26 (15) ஓட்டங்கள் மூலம் வேகமான ஆரம்பத்தைப் பெற்ற இலங்கை, அவரை ஜொஷ் ஹேசில்வூட்டிடம் பறிகொடுத்தது.

பின்னர் பதும் நிஸங்கவின் 36 (31), சரித் அஸலங்கவின் 38 (34) ஓட்டங்கள் மூலம் இனிங்ஸை நகர்த்திய இலங்கை, நிஸங்கவை மிற்செல் ஸ்டார்க்கிடம் இழந்ததைத் தொடர்ந்து, ஹேசில்வூட் வீசிய 14ஆவது ஓவரில் குசல் மென்டிஸ், பானுக ராஜபக்‌ஷ, அணித்தலைவர் தசுன் ஷானகவை இழந்து தடுமாறியது.

தொடர்ந்தும் ரன் அவுட் முறையில் அஸலங்கவும், சாமிக கருணாரத்னவும் விழ, துஷ்மந்த சமீரவும், 17 (15) ஓட்டங்களைப் பெற்ற வனிடு ஹஸரங்கவும் ஸ்டார்க்கிடம் வீழ்ந்ததோடு, மகேஷ் தீக்‌ஷனவும் கேன் றிச்சர்ட்ஸனிடம் விழ 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களையே இலங்கை பெற்றது. பந்துவீச்சில், ஹேசில்வூட் 4-0-16-4, ஸ்டார்க் 4-0-26-3, றிச்சர்ட்ஸன் 3.3-0-22-1, அஸ்தன் அகர் 4-0-25-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 129 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, டேவிட் வோணரின் ஆட்டமிழக்காத 70 (44), பின்ஞ்சின் ஆட்டமிழக்காத 61 (40) ஓட்டங்களோடு 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், மகேஷ் தீக்‌ஷன 4-0-25-0, சாமிக கருணாரத்ன 2-0-13-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக ஜொஷ் ஹேசில்வூட் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .