Shanmugan Murugavel / 2024 மே 21 , பி.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா நைட் றைடர்ஸ் தகுதி பெற்றுள்ளது.
அஹமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான முதலாவது தகுதிகாண் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சண்றைசர்ஸின் அணித்தலைவர் பற் கமின்ஸ் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சண்றைசர்ஸ், மிற்செல் ஸ்டார்க்கின் முதலாவது ஓவரிலேயே தமது அதிரடி ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ட்ரெவிஸ் ஹெட்டை இழந்ததுடன், வைபவ் அரோராவின் அடுத்த ஓவரிலேயே மற்றைய அதிரடி ஆரம்பத் துடுப்பாட்டவீரரான அபிஷேக் ஷர்மாவையும் இழந்தது.
பின்னர் ஸ்டார்க் வீசிய இனிங்ஸின் ஐந்தாவது ஓவரின் இறுதி இரண்டு பந்துகளில் நிதிஷ் குமார் ரெட்டியையும், ஷபாஸ் அஹ்மட்டையும் பறிகொடுத்தது.
இந்நிலையில் ராகுல் ட்ரிபாதி, ஹென்றிச் கிளாசென் மூலம் இனிங்ஸைக் கட்டியெழுப்பிய சண்றைசர்ஸ், 32 (21) ஓட்டங்களுடன் வருண் சக்கரவர்த்தியிடம் கிளாசெனை இழந்தது.
பின்னர் சிறிது நேரத்தில் 55 (35) ஓட்டங்களுடன் ட்ரிபாதி ரண் அவுட்டாக, அடுத்த பந்திலேயே அபிஷேக் ஷர்மாவுக்குப் பதிலாக தாக்கம் செலுத்தும் மாற்றுவீரராகக் களமிறங்கிய சன்வீர் சிங், சுனில் நரைனிடம் வீழ்ந்தார். அடுத்த ஓவரில் அப்துல் சமத் ஹர்ஷித் ரானாவிடமும், அதற்கடுத்த ஓவரில் புன்வேஷ்வர் குமார் வருண் சக்கரவர்த்தியிடமும் வீழ்ந்தனர்.
இறுதியில் கமின்ஸ் 30 (24) ஓட்டங்களுடன் அன்ட்ரே ரஸலிடம் விழ 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களையே சண்றைசர்ஸ் பெற்றது.
பதிலுக்கு 160 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, வேகமான ஆரம்பத்தைப் பெற்ற நிலையில் 23 (14) ஓட்டங்களைப் பெற்ற ரஹ்மனுல்லாஹ் குர்பாஸை தங்கராசு நடராஜனிடமும், 21 (16) ஓட்டங்களைப் பெற்ற நரைனை கமின்ஸிடமும் இழந்தது.
எனினும் வெங்கடேஷ் ஐயரின் ஆட்டமிழக்காத 51 (28), அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயரின் ஆட்டமிழக்காத 58 (24) ஓட்டங்களுடன் 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை கொல்கத்தா அடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஸ்டார்க் தெரிவானார்.
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026