2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

கிரிக்கெட் சபை மீது வோணர் விமர்சனம்

Editorial   / 2017 ஜூன் 09 , மு.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உப தலைவர் டேவிட் வோணர், தன்னுடைய கிரிக்கெட் சபை மீது, விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரை, தமது அணி வெல்வதை, தமது கிரிக்கெட் சபை, உண்மையில் விரும்புகிறதா என, அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணி, இத்தொடரில் விளையாடிய 2 போட்டிகளும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிராக, நாளை இடம்பெறவுள்ள போட்டியில் தோல்வியடைந்தாலோ அல்லது அந்தப் போட்டியும் மழையால் கைவிடப்பட்டாலோ, இந்தத் தொடரில் இருந்து வெளியேறும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.

இவற்றுக்கு மத்தியில், வீரர்களுக்கான ஊதியப் பிரச்சினையில், வீரர்களைச் சம்மதிக்க வைப்பதற்காக, காணொளியொன்றை, கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள வோணர், “நாங்கள் வெல்ல வேண்டுமென அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை விரும்புமாயின், அவ்வாறான காணொளிகளை, அவர்கள் வெளியிட மாட்டார்கள். இந்த வாரத்தில், முக்கியமான போட்டியொன்று எங்களுக்குக் காணப்படுகிறது. அதில் தான் எங்களது கவனம். இந்தப் போட்டிக்கும் தொடருக்கும் பின்னர், புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிக் கதைக்கலாம்” என்று தெரிவித்தார்.

நாட்டில் கிரிக்கெட்டை ஏற்பாடு செய்வதற்கு ஏற்படும் செலவுகள் எனத் தெரிவித்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கத்தால் வெளியிடப்பட்ட தகவல்களுக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தக் காணொளி, இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதோடு, வீரர்களுக்கும் மின்னஞ்சல் செய்யப்பட்டது. இந்தக் காணொளி தொடர்பாக, டுவிட்டரில் கருத்துத் தெரிவித்த வோணர், அவற்றை, “அரைவாசி உண்மைகள்” என்று வர்ணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .