Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 30 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சீரி ஏ தொடரில், நேற்றுச் சனிக்கிழமை (29) இடம்பெற்ற போட்டியொன்றில், தனது முன்னாள் கழகமான நாப்போலிக்கெதிராக, ஆர்ஜென்டீனா கால்பந்தாட்ட வீரரான கொன்ஸலோ ஹியூகைன் பெற்ற கோல் காரணமாக, ஹியூகைனின் தற்போதைய கழகமான ஜுவென்டஸ் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 27 புள்ளிகளைப் பெற்றுள்ள ஜுவென்டஸ், சீரி ஏ புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்திலுள்ள றோமாவை விட ஐந்து புள்ளிகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
கடந்த பருவகாலத்தில், சீரி ஏ தொடர் சாதனையாக, நாப்போலி கழகத்துக்காக 36 கோல்களைப் பெற்ற ஹியூகைன், இத்தாலிய வீரர் பரிமாற்ற சாதனையாக, 90 மில்லியன் யூரோக்களுக்கு, ஜுவென்டஸுக்கு சென்ற நிலையில், நாப்போலி கழகத்தில் வெறுக்கப்பட்டவராக மாறியிருந்தார். ஹியூகைனின் சீருடைகள், பதாதைகள், கழுத்துக் குட்டைகளை, குப்பைக் கூடைக்குள் பொதுவெளியில் இரசிகர்கள் எறிந்தததுடன், அவரின் சீருடைகளையும் எரித்திருந்தனர். இந்நிலையில், குறித்த போட்டியில் வெற்றிக் கோலைப் பெற்றபோது, ஹியூகைன் அதைக் கொண்டாடியிருக்கவில்லை.
போட்டியின் 50ஆவது நிமிடத்தில் லியனார்டோ பொனுச்சி பெற்ற அபாரமான கோலின் மூலம் ஜுவென்டஸ் முன்னிலை பெற்றபோதும், லொறென்ஸோ இன்ஸைனியிடம் இருந்து பந்தைப் பெற்ற ஜோஸே கையக்கோன், அடுத்த ஐந்து நிமிடங்களிலேயே கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார். இவ்வாறாக, 1-1 என்றவாறு சமநிலையில் முடிவடையும் வகையில் சென்றபோது, ஹியூகைன் சமி கெதிராவிடம் வழங்கிய பந்து, மீண்டும் ஹியூகைனிடமே வந்தபோது, அதை ஹியூகைன், 70ஆவது நிமிடத்தில் கோலாக்க, அந்தக் கோலோடு, 2-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் த்ரில் வெற்றி பெற்றது. குறித்த கோல் ஆனது, இப்பருவகாலத்தில் ஹியூகைன் பெறும் ஏழாவது கோல் ஆகும். போட்டியின் இறுதி நிமிடங்களில், சமி கெதிராவிடமிருந்து பந்தைப் பெற்ற ஹியூகைன் மேலுமொரு கோல் பெறும் வாய்ப்பு இருந்தபோதும், விளாட் சிரிச்சேஸினால் அவ்வாய்ப்பு பறிபோயிருந்தது.
பந்தைப் பரிமாற்றம் செய்யும் நாப்போலியின் ஆட்டம், சிறப்பானதாக இருந்தாலும், ஹியூகைனுக்குப் பிரதியீடாக, நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸிலிருந்து ஒப்பந்தம் செய்யப்பட்ட போலந்து முன்கள வீரரான அர்கடுயிஸ் மிலிக்கே காயமடைந்தமை காரணமாக, கோல் பெறும் வாய்ப்புகளை உருவாக்கியிருக்கவில்லை. ஹியூகைன் அணியிலிருந்து சென்றது, இன்னும் பாதிப்பதாக, அவ்வணியின் முகாமையாளர் தெரிவித்திருந்தார்.
8 minute ago
11 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
55 minute ago
1 hours ago