Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கண்டத்தில் இடம்பெற்ற முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகளின் டெரன் பிராவோ வழங்கிய கடுமையான போட்டிக்கு மத்தியிலும், பாகிஸ்தான் அணிக்கு 54 ஓட்டங்களால் வெற்றி கிடைத்தது.
கடந்த வியாழக்கிழமை (13) ஆரம்பித்த இப்போட்டி, இலங்கை நேரப்படி இன்று அதிகாலை (18) நிறைவடைந்தது.
346 ஓட்டங்கள் வெற்றியிலக்காகக் காணப்பட்ட நிலையில், 2 விக்கெட்டுகளை இழந்து 96 ஓட்டங்களுடன் இறுதி நாளில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, அந்நாளுக்குரிய முதலாவது பந்திலேயே, சிரேஷ்ட வீரரான மார்லன் சாமுவேல்ஸை இழந்தது. தொடர்ந்து, 4ஆவது விக்கெட்டாக, பிளக்வூட் ஆட்டமிழக்க, 4 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களுடன் அவ்வணி தடுமாறியது.
தேநீர் இடைவேளைக்குப் பின்பு, போட்டி மீள ஆரம்பமானபோது, 5ஆவது, 6ஆவது விக்கெட்டுகளை 3 பந்துகள் இடைவெளியில் இழந்த அவ்வணி, 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களுடன் தடுமாறியது. இதனால், அவ்வணி இலகுவாகத் தோற்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெரன் பிராவோவும் அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டரும், 7ஆவது விக்கெட்டுக்காகப் பொறுமையாக விளையாடினர். இருவரும், 23.4 ஓவர்கள் இணைந்து விளையாடி, 69 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். 7ஆவது விக்கெட்டாக பிராவோ ஆட்டமிழந்த பின்னர், ஹோல்டர் போராடிய போதிலும், 12 ஓவர்கள் மிகுதியாக இருக்க, இப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி கிடைத்தது.
துடுப்பாட்டத்தில் டெரன் பிராவோ 116, லியோன் ஜோன்ஸன் 47, ஜேஸன் ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 40, றொஸ்டன் சேஸ் 35 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மொஹமட் ஆமிர் 3 விக்கெட்டுகளையும் யாசீர் ஷா, அறிமுக வீரர் மொஹமட் நவாஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக, இப்போட்டியின் முதலாவது இனிங்ஸில் முச்சதம் பெற்ற அஸார் அலி தெரிவானார்.
ஸ்கோர் விவரம்...
பாகிஸ்தான்: 579/3 (துடுப்பாட்டம்: அஸார் அலி ஆட்டமிழக்காமல் 302, சமி அஸ்லம் 90, பாபர் அஸாம் 69, அசத் ஷபீக் 67. பந்துவீச்சு: தேவேந்திர பிஷூ 2 விக்.)
மே.தீவுகள்: 357/10 (துடுப்பாட்டம்: டெரன் பிராவோ 87, மார்லன் சாமுவேல்ஸ் 76, ஜேர்மைன் பிளக்வூட் 37. பந்துவீச்சு: யாசீர் ஷா 5, வஹாப் றியாஸ் 2, மொஹமட் நவாஸ் 2 விக்.)
பாகிஸ்தான்: 123/10 (துடுப்பாட்டம்: சமி அஸ்லாம் 44, பாபர் அஸாம் 21. பந்துவீச்சு: தேவேந்திர பிஷூ 8 விக்.)
மே.தீவுகள்: 289/10 (டெரன் பிராவோ 116, லியோன் ஜோன்ஸன் 47, ஜேஸன் ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 40, றொஸ்டன் சேஸ் 35. பந்துவீச்சு: மொஹமட் ஆமிர் 3, மொஹமட் நவாஸ் 2, யாசீர் ஷா 2 விக்.)
4 minute ago
13 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
27 minute ago