2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

மட்ரிட்களின் மோதல்: அத்லெட்டிகோவைத் தோற்கடித்தது றியல்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 20 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகா தொடரில், இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலையில் இடம்பெற்ற மட்ரிட் நகர அணிகளின் மோதலில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஹட்-ட்ரிக்கோடு, அத்லெட்டிகோவை, 3-0 என்ற கோல் கணக்கில் றியல் தோற்கடித்தது. 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர், லா லிகா போட்டியொன்றில், தனது மட்ரிட் நகர வைரிகளான அத்லெட்டிகோவை றியல் தோற்கடிப்பது, இதுவே முதற்தடவையாகும்.

இப்போட்டியில், றியல் மட்ரிட் சார்பாக பெறப்பட்ட மூன்று கோல்களையும் கிறிஸ்டியானோ ரொனால்டோவே பெற்றார். போட்டியின் 23ஆவது நிமிடத்தில் கிடைக்கப் பெற்ற “பிறீ கிக்” மூலம் தனது முதலாவது கோலை ரொனால்டோ பெற்றார். இதில், ரொனால்டோ அடித்த “பிறீ கிக்” ஆனது அத்லெட்டிகோ மட்ரிட் அணியின் தடுப்புச் சுவர் அமைத்தவர்களில் பட்டே சென்றது. ரொனால்டோ பெற்ற இக்கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் முதற்பாதியின் முடிவில் றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது.

எவ்வாறெனினும், போட்டியின் 12ஆவது நிமிடத்தில், ரொனால்டோ பலமாக தலையால் முட்டிய பந்தொன்றை, அத்லெட்டிகோ மட்ரிட் அணியின் கோல் காப்பாளர் ஜன் ஒப்ளக் மயிரிழையில் தடுத்திருந்தார். இல்லாவிட்டிருந்தால், முதற்பாதியின் முடிவிலேயே, 2-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் முன்னிலை பெற்றிருக்கும்.

இருந்தபோதும், போட்டியின் இரண்டாவது பாதியில் பந்துடன் கோல் கம்பத்தை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ வீழ்த்தப்பட, கிடைக்கப் பெற்ற பெனால்டியை, போட்டியின் 71ஆவது நிமிடத்தில் அவர் கோலாக்கினார். பின்னர், போட்டியின் 77ஆவது நிமிடத்தில், கரித் பேலிடமிருந்து பந்தைப் பெற்ற ரொனால்டோ, தனது ஹட்-ட்ரிக்கை பூர்த்தி செய்தார். இப்போட்டியில் பெறப்பட்ட கோல்களுடன் சேர்த்து, இப்பருவகால லா லிகா தொடரில் எட்டுக் கோல்களைப் பெற்றுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ, லா லிகாவின் இப்பருவகாலத்தில், அதிக கோல்கள் பெற்றவர்கள் பட்டியலில், பார்சிலோனாவின் லியனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ் ஆகியோருடன் முதலிடத்தைப் பகிர்கிறார்.

பார்சிலோனா, மலாகா அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. உடல்நலக்குறைவு காரணமாக, இப்போட்டியில் மெஸ்ஸி பங்கேற்கவில்லை என்பதோடு, இடைநிறுத்தம் காரணமாக, லூயிஸ் சுவாரஸும் இப்போட்டியில் பங்கேற்றிக்கவில்லை.

இதேவேளை, இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்து, மேலதிக நேரத்தில் பெறப்பட்ட கோலோடு, 3-2 என்ற கோல் கணக்கில் டெபோர்ட்டிவா லா கொரனா அணியை செவில்லா தோற்கடித்தாது.

இப்போட்டிகளின் முடிவில், 30 புள்ளிகளைப் பெற்றுள்ள றியல் மட்ரிட், லா லிகா புள்ளிகள் தரவரிசையில் முதலிடம் வகிப்பதுடன், 26 புள்ளிகளைப் பெற்றுள்ள பார்சிலோனா இரண்டாமிடத்திலும் 24 புள்ளிகளைப் பெற்ற செவில்லா மூன்றாமிடத்திலும் உள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .