2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மே.தீவுகளை வென்று இறுதியில் சிம்பாப்வே

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 25 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே புலவாயோவில் இன்று இடம்பெற்ற போட்டியில், டக்வேர்த்-லூயிஸ் முறைப்படி ஐந்து ஓட்டங்களினால் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி, தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணியின் தலைவர் கிறேமி கிறீமர், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அதன்படி, சிம்பாப்வே துடுப்பெடுத்தாடியபோது மழை குறுக்கிட்டதால், போட்டி 49 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் சிம்பாப்வே அணி எட்டு விக்கெட்டுகழையிழந்து 127 ஓட்டங்களைப் பெற்று தடுமாறியபோது, ஒன்பதாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த சிகண்டர் ராசா, டென்டாய் சிஸோரோ ஆகியோர் 91 ஓட்டங்களைப் பெற்றதாலேயே, 49 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகழையிழந்து 218 ஓட்டங்களை சிம்பாப்வே அணி பெற்றது.

துடுப்பாட்டத்தில், சிம்பாப்வே அணி சார்பாக சிகண்டர் ராசா 76(103) ஓட்டங்களையும் டென்டாய் சிஸோரோ 42(35) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில், மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக, அஷ்லி நேர்ஸ், தேவேந்திர பிஷூ ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர் இரண்டு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 27.3 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகழையிழந்து 124 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால், அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது. குறித்த ஓவர்களில் 130 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில், ஐந்து ஓட்டத்தினால் சிம்பாப்வே அணி வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ஜொனத்தன் கார்ட்டர் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், சிம்பாப்வே அணி சார்பாக, ஷோன் வில்லியம்ஸ், டென்டாய் சிஸோரோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக டென்டாய் சிஸோரோ தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .