Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 18 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், லிவர்பூல், மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையில், லிவர்பூலின் அன்ஃபீல்ட் மைதானத்தில், இலங்கை நேரப்படி, இன்று செவ்வாய்க்கிழமை (18) அதிகாலையில் இடம்பெற்ற போட்டி, சமநிலையில் முடிவடைந்தது.
இப்போட்டியில் லிவர்பூல் வெற்றி பெற்றால், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலுள்ள மன்செஸ்டர் சிற்றியுடன் சமமான புள்ளிகளைப் பெறலாம் என்ற நிலையில், யுனைட்டெட்டின் பயிற்சியாளரான ஜொஸ் மொரினியோவின் வழமையான பாணியான, ஒழுங்கமைக்கப்பட்ட தடுப்பாட்டத்தை யுனைட்டெட் அணி வெளிப்படுத்த போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
எனினும், போட்டியின் இரண்டாவது பாதியில், லிவர்பூலின் எம்ரே கான், பிலிப்பே கூட்டின்யோ ஆகியோரின் கோல் பெறும் வாய்ப்புகளை, யுனைட்டெட்டின் கோல் காப்பாளரான டேவிட் டி கியா, அபாரமாகத் தடுத்தமையினாலேயே, லிவர்பூலுக்கு, கோலெதுவும் பெற முடியாமல் போனது.
இரண்டாவது பாதியிலேயே, யுனைட்டெட்டுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்திருந்தது. தனித்து நின்ற, யுனைட்டெட்டின் ஸல்டான் இப்ராஹிமோவிக்கு, போல் பொக்பா வழங்கிய பந்தை, கோல் கம்பத்துக்கு வெளியே ஸல்டான் அடித்திருந்தார். ஆக, யுனைட்டெட்டும் கோலைப் பெறாத நிலையில், 0-0 என்ற ரீதியில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.
இப்போட்டியில், 35 சதவீதமே, யுனைட்டெட், பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 2003-04ஆம் பருவ காலத்திலிருந்தே, தரவுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அன்றிலிருந்து, பிறீமியர் லீக் போட்டியொன்றில், மிகக் குறைவான சதவீதத்தில், யுனைட்டெட், பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தமை, இதுவே முதற்தடவையாகும்.
யுனைட்டெட்டின், இப்போட்டிக்கான ஆட்டப் பாணியின் நடுநிலை நாயகமாகத் திகழ்ந்த அன்டர் ஹெரேரா, லிவர்பூலின் முன்கள வீரர்களான, கூட்டின்யோ, ரொபேர்ட்டோ பெர்மிங்கோவை நகர விடாமல் செய்திருந்தார்.
இதேவேளை, இப்போட்டிக்கு மத்தியஸ்தராக, மன்செஸ்டரைத் தளமாகக் கொண்ட அந்தோணி டெய்லர் நியமிக்கப்பட்ட நிலையில், அழுத்தங்களை எதிர்கொண்டிருந்தபோதும், அவர் சிறப்பாகச் செயற்பட்டிருந்தார்.
யுனைட்டெட், தனது அடுத்த பிறீமியர் லீக் போட்டியில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (23), 2014/15 பருவகால சம்பியன்களான செல்சியை எதிர்கொள்கிறது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago