2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

விம்பிள்டன்: கேர்பர், ஜோக்கோவிச், பெடரர் வெற்றி

Editorial   / 2017 ஜூலை 06 , மு.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆம் நாள் போட்டிகள், பெருமளவு அதிர்ச்சிகளை வழங்காத போட்டிகளாக அமைந்தன. பெண்களில் முதல்நிலை வீராங்கனை அங்கெலிக் கேர்பர், ஆண்களில் 2ஆம், 3ஆம் நிலை வீரர்களான நொவக் ஜோக்கோவிச், ரொஜர் பெடரர் ஆகியோர், அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.

ஐ.அமெரிக்காவின் இரினா ஃபல்கோனியை எதிர்கொண்ட ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்குத் தகதிபெற்றார்.

3ஆம் நிலை வீராங்கனையான கரோலின் பிளிஸ்கோவா, ரஷ்யாவின் எவ்ஜெனியா ரொடினாவை எதிர்கொண்டு, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் போட்டிகளில், 2ஆம் நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், ஸ்லோவாக்கியாவின் மார்ட்டின் கிளிஸானை எதிர்கொண்டார். அதில், 6-3, 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஜோக்கோவிச் முன்னிலை வகித்த போது, போட்டியிலிருந்து மார்ட்டின் விலகினார்.

அதேபோல், 3ஆம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், உக்ரைனின் அலெக்ஸான்டர் டொல்கோபொலோவை எதிர்கொண்டு, 6-3, 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தபோது, அலெக்ஸான்டரும் போட்டியிலிருந்து விலகினார். இதனால், முன்னணி வீரர்கள் இருவர், தங்களது முதலாவது சுற்றுப் போட்டிகளை முடிக்காமலேயே, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.

ஏனையோரில், பெண்களின் 5ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி, 7ஆம் நிலை வீராங்கனையான ஸ்வெட்லானா குஸ்னெட்ஸோவா, 9ஆம் நிலை வீராங்கனையான அக்னியஸ்கா ரட்வன்ஸ்கா, 12ஆம் நிலை வீராங்கனையான கிறிஸ்டினா மல்டெனோவிச், 14ஆம் நிலை வீராங்கனையான கார்பைன் முகுருஸா ஆகியோரும், அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.

ஆண்களில், 6ஆம் நிலை வீரரான மிலோஸ் றாவோனிஸ், 8ஆம் நிலை வீரரான டொமினிக் தியெம், 10ஆம் நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவெரெவ் ஆகியோரும், அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .