2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ஷரபோவாவின் தடைக்குறைப்பு: ஏனைய வீரர்களுக்கு எச்சரிக்கை

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 05 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடைசெய்யப்பட்ட மருந்துப் பொருளை உள்ளெடுத்ததன் காரணமாக 2 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் தடை, 9 மாதங்களால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனது உடல்நிலைமை காரணமாக, மெல்டோனியம் என்ற மருந்தை உட்கொண்டு வந்த ஷரபோவா, அந்த மருந்து தடை செய்யப்பட்ட பின்னரும், அதைப் பயன்படுத்தியதன் காரணமாக, இவ்வாண்டில் தடைக்குள்ளாக்கப்பட்டார். எனினும், குறித்த மருந்து தடை செய்யப்பட்டமை குறித்து, தனக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலைப் படிக்கவில்லை எனத் தெரிவிக்கும் ஷரபோவா, குறித்த தடை குறித்துத் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றே கருதப்பட வேண்டுமென வாதிட்டார்.

இது தொடர்பாக விளையாட்டுக்கான தீர்ப்பாய நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்த ஷரபோவா, தனது தடையையும் 9 மாதங்களால் குறைத்தார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள சர்வதேச டென்னிஸ் சம்மேளனம், மருந்துப் பொருட்கள் தடை செய்யப்படுவது குறித்து, வீரர்களுக்குத் தெளிவான முறையில் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அவ்விடயம் தொடர்பில், தொடர்ந்தும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக அறிவித்தது.

எனினும், மாற்றங்களைத் தொடர்ந்து ஏனைய வீரர்கள், தடை குறித்துத் தங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்று கூறித் தப்பிக்க முடியாது எனவும் அச்சம்மேளனம் அறிவித்துள்ளது. "தங்களுக்கு முழுமையாக அறிவிக்கப்படவில்லை என, எந்தவொரு வீரரும் தெரிவிக்க முடியாதளவுக்கு, எங்கள் தொடர்பாடல்களைக் கொண்டிருப்பதை உறுதிசெய்யவுள்ளோம்" என, அச்சம்மேளனத்தின் அறிவிப்புத் தெரிவித்தது.

ஷரபோவாவின் தடைக்குறைப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் தலைவரல் ஸ்டீவ் சிமோன், ஊக்கமருந்துச் சோதனைகளில் ஒரு வீரர் தோல்வியடையும் போது, அது எப்போதுமே சிறப்பாக அமையாது எனத் தெரிவித்ததோடு, வீரர்களுக்குத் தெளிவான தகவல்களை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

தனது தடை குறைக்கப்பட்டமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஷரபோவா, "நான் 10 ஆண்டுகளாக உள்ளெடுத்துவந்த மருந்து, தடைக்குள்ளாக்கப்பட்டமை குறித்து அறிந்திருக்காமைக்கான முழுப் பொறுப்பையும் நான், முதலிலிருந்தே ஏற்று வந்தேன். ஆனால், இவ்வாறான தடை மாற்றங்கள் குறித்து, ஏனைய சம்மேளனங்கள் எவ்வளவு சிறப்பான முறையில் அறிவிக்கின்றன என்பதையும் நான் அறிந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .