2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஸ்ரீனிவாசனுக்கும் ஆதரவாலர்களுக்கும் லலித் மோடி எச்சரிக்கை

A.P.Mathan   / 2014 மே 07 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக வெற்றி பெற்றுள்ள லலித் மோடி, மிக விரைவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்குள் ஏற்பட்டுள்ள சூதாட்ட சிக்கல்களை இல்லாமல் சுத்தம் செய்வேன் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனுக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் எச்சரிக்கை வழங்கியுள்ளார். இந்திய தொலைக்காட்சி சேவையான  NDTV தொலைகாட்சிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் இந்த எச்சரிக்கையை அவர் வழங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்குள் தற்போது எல்லாமே நிர்ணயம் செய்யப்பட்டே நடைபெறுகின்றது என தெரிவித்துள்ள மோடி, தற்போது தன்னை பழி வாங்கும் நோக்கில் ஏன் ராஜஸ்தான் கிரிக்கெட் சபையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தடை செய்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ள அதேவேளை, இவை எல்லாமே ஸ்ரீனிவாசனின் வழிகாட்டலிலேயே நடைபெறுகின்றது என கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்குள் ஊழல் நிறைந்து போயுள்ளது. அவற்றை சரி செய்யவே தான் மீண்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்குள் பிரவேசித்துள்ளேன். ஸ்ரீனிவாசனினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மோசமான நிலையை தன்னால் மாற்ற முடியும் என கூறியுள்ள மோடி, தனி நபரான தனக்கு எதிராக செய்யப்படும் நிகழ்ச்சித் திட்டம் இது எனவும், தன்னை எதுவேண்டுமானும் செய்யலாம். ஏன் ராஜஸ்தான் கிரிக்கெட் சபையை பழி வாங்குகிறீர்கள் எனவும் அவர் தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

தான் தற்போதுள்ள காங்கிரஸ் அரசின் கீழ் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற காரணத்தினாலேயே இங்கிலாந்தில் வசித்து வருவதாகவும், ஆட்சி மாற்றம் வந்தால் தான் முழு நேரமாக மீண்டும் இந்தியாவுக்கு வருவேன் எனவும், ராஜஸ்தான் அரசாங்கமான பி.ஜே.பி அரசின் சட்டத்தின் அடிப்படையிலேயே தான் தேர்தலில் போட்டியிட்டு ராஜஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக வெற்றி பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ராஜஸ்தான் கிரிக்கெட் சபையின் தேர்தலில் லலித் மோடி வெற்றி பெற்றுள்ளார் என அறிவித்ததையடுத்து, தங்கள் விதிமுறைகளை மீறி ராஜஸ்தான் கிரிக்கெட் சபை நடந்துள்ளது என்ற அடிப்படையில் அவர்களை தடைசெய்வதாக இந்திய கிரிக்கெட் சபை அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்தே லலித் மோடி தன் கருத்துகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .