2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘கிழக்கு ஆளுநர், முன்னாள் ஆட்சியாளர்களுடனான ஒப்பந்தத்தில் செயற்படுகின்றாரா?’

Editorial   / 2017 நவம்பர் 16 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன், பைஷல் இஸ்மாயில், எப்.முபாரக், எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் எதேச்சாதிகரமான செயற்பாடுகள், முன்னாள் ஆட்சியாளர்களுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதென, மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மாகாணத்தின் உயரதிகாரிகள் மற்றும் செயலாளர்கள் சிலர், முறைகேடான முறையில் இடமாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

“தற்போது மாகாண அரசாங்கத்தின் முக்கிய அரச அதிகாரிகள் மற்றும் செயலாளர்கள் சிலர், எவ்வித முன்னறிவித்தலுமின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நல்லாட்சிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இவர்கள், தமது சேவையை மிக நேர்த்தியான முறையில் முன்னெடுத்து வந்தனர்.

“இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு உள்ள வேளையில், குறித்த அதிகாரிகளை திடீரென இடமாற்றியுள்ளமைக்குப் பின்னால், ஆளுநரின் சுயலாப அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் உள்ளனவா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

“ஒரு அதிகாரியை இடமாற்றம் செய்வதென்றால், குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு முன்னர் அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள், தமது ஆவணங்கள் மற்றும் ஏனைய கடமைகளை, புதியவரிடம் ஒப்படைத்துவிட்டு, புதிய இடத்தின் கடமைகளைப் பொறுப்பேற்பார்கள்,

“ஆனால் இங்கு, அலுவலக நாள் அல்லாத கடந்த 11.11.2017 சனிக்கிழமை கடிதம் தயார் செய்யப்பட்டு, திங்கட்கிழமையன்று திடீரென சிறுபான்மையின அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது, அநீதியானதும் அசாதாரணமானதுமான செயற்பாடுமாகும். இந்த திடீர் இடமாற்றங்கள், நேர்மையான அதிகாரிகளை அவமானாப்படுத்துவதாக அமைவதுடன், அவர்களை மன உளைச்சலுக்கும் ஆளாக்குகின்றது. இது அரச அதிகாரிகளின் அடிப்படையை உரிமையை மீறும் செயலாகும்,

“உள்ளூராட்சிமன்றச் செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டமை, கிழக்கின் நிர்வாகக் கட்டமைப்பை சீர்குலைப்பதற்காக, ஆளுநரார் முன்னெடுக்கப்பட்ட திட்டமாகும் என்றே கருத வேண்டியுள்ளது, அவ்வாறானால், நல்லாட்சியின் கீழுள்ள நிர்வாகக் கட்டமைப்பை, ஆளுநர் யாருடைய தேவைக்காக சீர் குலைக்கின்றார்? முன்னாள் ஆட்சியாளர்களின் ஒப்பந்ததை நிறைவேற்றி வருகின்றாரா? என்ற நியாயமான சந்தேகம் தற்போது தோன்றியுள்ளது.

“ஆகவே, ஜனாதிபதியும் பிரதமரும் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, ஆளுநரின் எதேச்சாதிகாரமான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X