Princiya Dixci / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, வ.துசாந்தன்
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்தி, அவர்களுக்கு அரச நியமனம் வழங்க முன்வர வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.
மட்டக்களப்பு காந்திப்பூங்காவுக்கு முன்பாக, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும், நேற்றையதினம் இணைந்துகொண்டிருந்தனர்.
இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் கறுப்புப் பட்டியணிந்து, வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா.நடராஜா, இரா.துரைரெட்னம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானா மற்றும் மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்குக்கொண்டுசெல்லப் பட்டுள்ளதாகவும் விரைவில் நடிக்கையெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாருக் “ஏழு மாகாணங்களையும் கவனிக்கின்றதைப் போன்று இல்லாமல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அரசாங்கம் விசேடமாகக் கவனிக்க வேண்டும். காரணம், இன்று பட்டதாரிகளாக இருப்பவர்கள் அனைவரும், யுத்த காலத்திலே கல்வியைத் தொடர்ந்தவர்கள். இவர்கள் பாதிக்கப்படுவதை, எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
மேலும், பட்டதாரிகள் மேற்கொண்டு வரும் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, பல முயற்சிகளைச் செய்து வருவதாகவும் அரசாங்கத்தின் பல்வேறு மட்டத்துக்கு இதைத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இப்போராட்டத்துக்கு, கிழக்கு மாகாணத்துக்கு வெளியே கடமையாற்றும் ஆசிரியர்கள் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சென்ஜோன் அம்பியூலன்ஸ் ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago