2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'கல்வி வலயங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளன'

Niroshini   / 2017 மே 06 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

“அண்மையில் வெளியிடப்பட்டுள்ள க.பொ.த சாத பரீட்சை முடிவுகளின் படி, கிழக்கு மாகாணம் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளதோடு கல்வி வளர்ச்சியில் முன்னிலையில் இருந்த கல்வி வலயங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளன” என, இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கிழக்கு மாகாண கல்விப் பின்னடைவு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இலங்கையில் முன்னிலையில் இருந்த மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம், மிகமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, சகல மனித, பௌதீக வளங்களையும் கொண்டுள்ள மட்டக்களப்பு கல்வி வலயம் தேசிய மட்டத்தில் மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. வினைத்திறனற்ற அதிகாரிகளினால் வலயங்கள் அரசியல் மயமாக்கப்படுத்தப்பட்டு இருப்பதோடு, சேவைப் பிரமாணக் குறிப்புகளுக்கு அமைவான சேவைப் பணிகளை அதிகாரிகள் முன்னெடுக்கவில்லை.

 மேலும், வினைத்திறனற்ற கல்வி அதிகாரிகளின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக அதிபர்கள், ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்பட்டு மனித உரிமை ஆணைக்குழு, மேல் நீதிமன்றங்களினால் பல்வேறான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான வழக்குகளின் பிரதிவாதிகளான கல்வி அதிகாரிகள் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்காக கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டமையை சங்கம் வண்மையாக கண்டிக்கின்றது.

 கல்வி மேற்பார்வையை விட அடிப்படை உரிமை வழக்குகளில் கூடிய நேரத்தை கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகள் செலவிடுவதாகவும் இதற்கான கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

இதேவேளை, நடைபெறும் வலய, மாகாண மட்ட பரீட்சைகள் யாவும் தேசிய மட்ட பரீட்சையின் பண்புசார் தரத்துக்கு முரணாக காணப்படுவதை பலமுறை ஊடகங்களின் ஊடாகவும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் தெரிவித்து இருந்தும் விசாரணைகளின் அறிக்கைகள் சங்கத்துக்கு தெரியப்படுத்தவில்லை.

 மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாத பரீட்சையில் 44 மாணவர்கள் சகல பாடங்களிலும் சித்தியடையவில்லை. இதில் பெரும்பாலான பாடசாலைகள் நகரப்புற பாடசாலைகளாக காணப்படுகின்றன. மேலும் கணிதம், விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களின் பெறுபேறுகள் வீழ்ச்சி அடைந்து இருப்பதோடு க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்து.

 13ஆவது அரசியல் சீர்திருத்தத்தில் மாகாண நிருவாகத்துக்கு உட்படுத்தப்பட்ட கல்வி அமைச்சின் அதிகாரத்துக்கு உட்பட்ட மாகாணக் கல்வித் திணைக்களம், வலயங்களில் நடைபெறும் சட்டத்துக்கு முரணான அதிபர், ஆசிரியர் இடமாற்றங்கள் சட்ட விதிகளுக்கு முரணான விசாரணைகள், பழிவாங்கல்கள், அதிகார துஸ்பிரயோகங்கள், சேவைப் பிரமாணக் குறிப்புக்கு முரணான நியமனங்கள், அரசியல் தலையீடுகள் மாகாணக் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

 கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு மற்றும் மாகாணத் திணைக்களம் 03 மாகாணக் கல்விப் பணிப்பாளர்களால் நிர்வகிக்கப்பட்டும் வினைத்திறனற்ற நிர்வாகச் செயற்பாடுகளினால் பெரும்பாலான நிதி, மனித வளங்கள் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதை சங்கம் வண்மையாகக் கண்டிப்பதாக பொன்னுத்துரை உதயரூபன் அறிக்கையில் தெரிவித்து இருப்பதோடு ஊடகங்களுக்கு முன்னிலையில் மாகாணக் கல்வி அமைச்சர் பகிரங்க விவாதத்திற்கு முன்வர வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X