2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'மொழி, பண்பாட்டை இழக்கும் நிலையில் தமிழ்ச் சமூகம் காணப்படுகின்றது'

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

தமிழ்ச் சமூகமானது தனது மொழியையும் பண்பாட்டையும் இழந்துபோகும் சமூகமாக தற்போது காணப்படுவதுடன், மாற்றுமொழியையும் ஏனைய இன மக்களின் பண்பாட்டையும் பிடித்துக்கொண்டு தனது சமூகத்தின் இனத்தின் அடையாளத்தை தொலைக்கும் சமூகமாக உள்ளமை கவலையை ஏற்படுத்துவதாக மட்டக்களப்பு மாவட்டக் கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.

உலக தாய்மொழி தினம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் இன்று (28) தமிழ்மொழி, பண்பாடு,  அடையாளம் பற்றிக் கலந்துரையாடப்பட்டன.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'எங்களில் பலர் கையொப்பமிடுவது முதல் பெயர் வைப்பதுவரையில் தமிழர்களுக்கான அடையாளம் இல்லாமல் வாழ்கின்றனர். நாம் ஒவ்வொருவரும் தமிழில் கையொப்பம் இடுபவர்களாக மாறும்போது அடுத்தடுத்து எல்லாம் மாறும்.

தாய்மொழி தினம் உலகத்திலுள்ள மொழியையும் பண்பாட்டையும் கொண்டாடும் நாள், அந்தந்தச் சமூகங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாள். இந்நாளிலிருந்து எமது மொழியை மீட்டெடுப்பதற்கான நாளாக நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூண வேண்டும்.

எல்லோரும் ஆங்கிலத்தில் உரையாடுவதை விரும்புவதுடன், அதுவே நாகரிகம் எனவும் எண்ணுகின்றார்கள். ஆனால், அதை விட எமது தமிழ்மொழியில் அற்புதமான நாகரிகமும் செழுமையும் உள்ளன.

எனவே, புதிய தலைமுறையிடம் தமிழர்களின் அடையாளங்களை நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X