2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'முஸ்லிம் தலைவர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்க முயற்சிக்கவில்லை'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் ஒழிந்திருந்தமை சதியா? அல்லது முஸ்லிம் தலைவர்கள் விட்ட பிழையா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஏறாவூர் பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 150 கைம்பெண்களுக்கு  உலருணவுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரம் உரிமை, அபிலாஷைகள் மற்றும் அடிப்படை வசதிகள் பற்றிப் பேசுகின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன்  இலங்கைக்கு விஜயம் செய்து நான்கு தினங்கள் தங்கியிருந்து ஜனாதிபதி, பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரைச் சந்தித்தார். வடக்கில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் மீள்குடியேற்றப்படாத மக்களையும் அவதானித்தார்.
 
ஆனால், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்கவுமில்லை. சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுமில்லை. முஸ்லிம்களின் பிரச்சினைகளை யார் பேசுவது என்பது இன்று கேள்விக்குறியாகியுள்ளது.
 
வடக்கிலிருந்த ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படாமல் இன்னும் அகதிகளாக வாழ்கின்றனர். கிழக்கில் பயங்கரவாத செயல்களால் முஸ்லிம்கள் அல்லல்பட்டுள்ளனர். இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையாளரை முஸ்லிம் தலைமைகள் சந்திக்காத விடயம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களுக்குரிய நிரந்தர தீர்வை புதிய அரசியலமைப்பு மூலம் ஏற்படுத்தித்தர வேண்டுமென மனித உரிமைகள் ஆணையாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெளிவாகக் கூறியுள்ளார். பெரும்பான்மைச் சமூகம் இந்த விடயம் தொடர்பாக அவர்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், முஸ்லிம் சமூகத்தினுடைய அடிப்படைப் பிரச்சினைகள், மீள்குடியேற்றம் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற இனவாதப் பிரச்சினைகள் எதுவுமே பேசப்படவில்லை' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X