2026 மே 04, திங்கட்கிழமை

ஏறாவூர் 4ஆம் குறிச்சி, பூச்சிக்கூடு 16ஆம் கிராமங்களில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள பணிப்பு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 22 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் மீள்குடியேற்றப்படாது உள்ள ஏறாவூர் 4ஆம் குறிச்சி மற்றும் போரதீவுப்பற்றின் பூச்சிக்கூடு 16ஆம் கிராமம் பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு மீள்குடியேற்ற அமைச்சர் குணரெட்ன வீரக்கோன், அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பொன். செல்வராசா தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் மீள்குடியேற்ற அதிகாரசபையின் ஆயுட்காலத்தை மேலும் 3 வருடங்களுக்கு நீடிப்பது தொடர்பில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற விசேட மீள்குடியேற்ற அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு பணித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மீள்குடியேற்ற அமைச்சர் குணரெட்ன வீரக்கோன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சின் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் தான் உரையாற்றியமை தொடர்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவிக்கையில்,

'மீள்குடியேற்ற அதிகாரசபையினை மேலும் 3 வருடங்களுக்கு நீடிப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருவதானது இன்னும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூரணப்படுத்தப்படவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. அதன் நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையே அது எடுத்துக்காட்டுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் இரண்டு இடங்களில் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. ஏறாவூர் நான்காம், ஐந்தாம் குறிச்சிப்பகுதிகளில் இருந்து 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. அங்கிருந்து 125 குடும்பங்கள்; இடம்பெயர்ந்த நிலையில் இன்னும் அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. இதனை இங்கிருக்கும் பிரதி அமைச்சரும் அறிவார்.
அவர்கள் குடியேற்றப்படாததற்கு காரணம் அப்பகுதியில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அங்கிருந்து பொலிஸார் படிப்படியாக விலகினாலும் கூட அங்கிருந்த வீடுகள் முற்றாக உடைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. இவர்கள் உடனடியாக குடியேற முடியாத நிலையே காணப்படுகின்றது. இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டத்திலும் தான் பல தடவைகள் கூறியுள்ளதாகவும் கூறினார்;.

அதன் காரணமாக அவர்களை தற்காலிகமாக குடியிருப்புகளை அமைத்து குடியேற்ற நடவடிக்கை எடுப்பதென்றால் அதற்கு பணம் தேவையென தெரிவித்து அது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளருக்கும் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.  ஆனால் எதுவித நடவடிக்கையும் இல்லை.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சின் செயலாளர் அவ்வாறான கடிதம் எதுவும் தனக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவித்தாகவும் இதற்கு பதிலளித்த தான், அரசாங்க அதிபர் அவருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதிகள் என்னிடம் உள்ளன. அதனை வேண்டுமானால்  தருவதாகவும் கூறினேன்.
அதனை ஏற்றுக்கொண்ட செயலாளர் கடிதத்தின் பிரதியை தருமாறு தன்னிடம் கோரினார்.

இதேபோன்று போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 16ஆம் கொலணி மற்றும் பூச்சிக்கூடு ஆகிய பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இதுவரையில் குடியேற்றப்படவில்லை. அந்த கிராமங்களுக்கு அருகில் விசேட அதிரடிப்படையினரின் முகாம்கள் இருந்தததன் காரணமாக அது துப்புரவுசெய்யப்பட்ட பகுதியென அரசினால் அடையாளப்படுத்தப்பட்டு அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்த மக்களாக கொள்ளப்படவில்லை.
எனினும் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மண்டூர் பகுதிகளில் வசித்துவந்த நிலையில் அவர்களின் வீடுகள் அனைத்தும் உடைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்று காட்டில் கம்பு, தடிகளை வெட்டி தற்காலிக கொட்டகைகள் அமைத்து வசித்துவந்தனர்.

அவர்களுக்கு அரசினால் மீள்குடியேற்றம் தொடர்பில் எதுவித உதவிகளும் இதுவரையில் எதுவும் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் பிரஸ்தாபித்துள்ளேன். இந்த மக்கள் கவனிக்கப்படாத சமூகமாகவே உள்ளனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் சில தற்காலிக கொட்டகை உதவிகளை வழங்கிய நிலையில் அண்மையில் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக அவை தூக்கியெறியப்பட்டுள்ளன. அது தொடர்பில் தான் நேரில் சென்று பார்வையிட்டதாகக் கூறினார்.

அவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அண்மையில் தகரங்கள் வழங்கிவைக்கப்பட்டன. மீள்குடியேற்ற பிரதியமைச்சர் அதனை வழங்கிவைத்தார். எனவே இந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இதனை கருத்தில் கொண்டு மீள்குடியேற்ற அதிகாரசபையின் காலத்தை நீடிப்பதற்கு தான் சம்மதம் தெரிவித்துகொள்வதாகக் கூறினேன்.

இதற்கு பதிலளித்த மீள்குடியேற்ற அமைச்சர் குணரெட்ன வீரக்கோன், நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த இரு விடயங்கள் தொடர்பிலும் நன்கு அலசி ஆராய்ந்து நடவடிக்கையெடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார். மட்டக்களப்புக்கு சென்று மாவட்ட செயலகத்தில் அது தொடர்பில் கலந்துரையாடி மீள்குடியேற்றம் செய்யப்படாத மக்களுக்கு தேவையான வீட்டு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறும் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .