2025 மே 15, வியாழக்கிழமை

ரூ. 5 மில்லியன் ஒதுக்கீட்டில் தகவல் தொழில்நுட்பக்கூடம் திறப்பு

Kogilavani   / 2014 மே 05 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கட்டார் அகடமியின் அனுசரணையுடன் இயங்கும் ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவன வளாகத்தில் 5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பக்கூடமும் முன்பள்ளிக் கூடமும் ஞாயிற்றுக்கிழமை (04)  திறந்துவைக்கப்பட்டது.

நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு சுமார் மூன்று மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்பக்கூடம் 2 மில்லியன் ரூபாய் செலவில் முன்பள்ளிக் கூடம் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.எம்.அன்ஸார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்டார் அகடமியின் சிரேஷ்ட பாடசாலை மாணவர் சேவை இணைப்பாளர் கேமிற்செல் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அவர்,

'கல்வி என்பது ஒருவரின் நாளாந்த வாழ்க்கைப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணும் ஒன்றல்ல. ஆங்கில மொழிப் போதனைக்கும் தொழில்நுட்பப்பயிற்சி வகுப்புக்களுக்கும் செல்வதால் அது உடனடியாக துவாரமுள்ள கூரையை அடைப்பதற்கோஇ சைக்கிள் ஒன்றைப் பெறுவதற்கோ அல்லது மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்கோ உதவாது.

கல்வி என்பது நாளாந்த தனிப்பட்ட முன்னேற்றத்தின் ஒரு நீண்ட கால முதலீடு. அதேவேளை சமூகத்தில் சிறுகச் சிறுக ஏற்படும் கல்வி மேம்பாடு ஒட்டு மொத்தமாக அந்த சமூகத்திற்கே பகிரப்படும்.

ஆரம்பமாக நாம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காக நிதியளித்தோம். பின்னர் கல்விக்கான கட்டிடங்களை கட்டுவதற்கு நிதி திரட்டினோம். கடந்த 5 வருடங்களாக கட்டார் அகடமி ஏறாவூர் சமூகத்தின் கல்வி முகவரியை உருவாக்குவதற்காகச் செயலாற்றிக் கொண்டிருக்கின்றது.

இன்று நாங்கள் பாராட்டுகின்ற இந்த சமூகம் அடுத்த சந்ததிக்கான பொதுவான அபிவிருத்திக்குரிய கௌரவிப்பாகவும் ஊக்குவிப்பாகவும் இருக்கும். இது ஏறாவூர் சமூகத்தின் ஒட்டு மொத்தமான ஒரு குறிக்கோளாக இருக்க வேண்டுமென்பதற்காகவே கட்டார் நிறுவனம் தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றது.

இந்தக் கல்வி மறுமலர்ச்சி அமைப்பினூடாக கல்வியையும் பட்டத்தையும் பெறும் நீங்கள் எதிர்கால சமூகத்தின் முன்னோடிகள் என்பதையும் நினைவிற் கொண்டு இந்த சமூகத் தளத்தை ஒரு மாற்றத்தை நோக்கி நீங்கள் இட்டுச் செல்ல வேண்டும் என்று உங்களை வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன்' என்று தெரிவித்தார்.

தொழில்நுட்பக் கல்வியில் புலமை காட்டிய மாணவர்களுக்கு நிகழ்வில் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கட்டார் அகடமியின் சிரேஷ்ட பாடசாலை மனிதநேய கல்விப் பிரிவு இணைப்பாளர் மாஹா அல்காபிஇ காலித் அல் குலைபி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


 








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .