2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

பதவிக்கும், சலுகைக்கும் அப்பாற்பட்ட உரிமைமிக்க, அதிகாரமிக்க மாகாணசபையை கிழக்கில் உருவாக்க வேண்டும்:

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

பதவிக்கும், சலுகைக்கும் அப்பாற்பட்ட வகையில் உரிமைமிக்க, அதிகாரமிக்க மாகாணசபையை உருவாக்குவதற்கான வரலாற்றுக் கடமையொன்றை தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இணைந்து தந்த சந்தர்ப்பமாக இதனைப் பார்க்க வேண்டும். இதுவொரு சரித்திர முக்கியத்துவம் நிறைந்தகாலம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வெற்றி தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'தமிழ்த் தேசிய உரிமைக்காகத் தமிழ்த் தேசிய உணர்வோடு தமிழர் இருப்பை நிலை நிறுத்த வாக்களித்த தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நன்றி கூறுகின்றேன்.

வரலாற்றின் முக்கிய திருப்புமுனையாக இன்றைய தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இலங்கைத் தீவின் சிறுபான்மைச் சமூகங்களின் இருப்பை நிலைநிறுத்த வேண்டிய ஒருபொன்னான சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. அறுபது ஆண்டுகால அரசியல் உரிமைக்கான அதன் இருப்புக்கான போராட்டத்தில் இலங்கைத் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு கிடைத்ததொரு அரிய சந்தர்ப்பமாக இத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

உரிமையா? ,சலுகையா? அடிப்படை சித்தாத்தங்களில் எமது அடிவயிற்றில் கைவைக்கின்ற சலுகையை உரிமையாகக் காட்டக் கையேந்தும் அரசியல் சித்தாந்தத்திற்கும் அதன் அடிவருடித்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு சந்தர்ப்பமாக ஒருவரலாற்றுக்  கடமையாக தமிழ், முஸ்லிம் சமூகம் இத்தேர்தல் முடிவுகளைப் பார்க்க வேண்டும்.

பதவிக்கும், சலுகைக்கும் அப்பாற்பட்ட வகையில் உரிமைமிக்க, அதிகாரமிக்க மாகாணசபையை உருவாக்குவதற்கான வரலாற்றுக் கடமையொன்றை தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இணைந்து தந்த சந்தர்ப்பமாக இதனைப் பார்க்க வேண்டும். இதுவொரு சரித்திர முக்கியத்துவம் நிறைந்தகாலம்.

நாமே நமது தலைவிதியைத் தீக்மானிக்க கிடைத்த இச்சந்தர்பபத்தை முதலமைச்சர் பதவி சலுகைகள் என்பதற்குட்பட்ட வகையில் பரஸ்பரவ விட்டுக்கொடுப்பு புரிந்துணர்வுடன் கருமமாற்ற வேண்டிய இச்சந்தர்ப்பத்தை அற்ப சலுகைகளுக்கும், பதவிகளுக்கும் பங்குபோட்டு சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதை தவிர்த்து ஆரோக்கியமான நல்லாட்சிக்கான தமிழ், முஸ்லிம் மக்களது அபிலாஷைகளை, உரிமைகளை ஒன்றினைந்து நிறைவேற்றிக்கொள்கின்ற வரலாற்றுத் திருப்புமுனைமிக்க சந்தர்ப்பமாக இதனை நாம் பார்க்க வேண்டும்.

அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக அடிமைப்பட்டுக் கிடந்த எமது இனங்கள் தமது உரிமையை ஒன்றிணைந்து நிலைநாட்டக்கூடிய இந்த பொன்னான வாய்ப்பை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளுவோம்.
 
வரலாறுகள் கற்றுத்தந்த பாடங்களில் இருந்து நல்லிணக்கமுள்ள நல்லாட்சிகள், இரு சமூகங்களினதும் உரிமையைப் பாதுகாப்பதும், பேணுவதுமான நடைமுறைக்குப் பொருத்தமான யதார்த்தமிக்க, சாத்தியப்பாடான சகல விகளையும் பின்பற்றி பிணக்குகளைப் புறம்தள்ளி எமது சமூகங்களின் இருப்பை நிஇலைநிறுத்த சுமூகமான, இணக்கப்பாடான அரசியலை முன்னெடுப்போம்.

இந்தவரலாற்று கடமையை புறம்தள்ளி சின்னாபினனப்படுத்துவதன் மூலம் நாம் அனைவரும் மாபெரும் தீர்க்க தரிசனமிக்க வரலாற்றுத் தவறிற்கும், அவப்பெயரிற்கும் ஆளாவோம் எமது எதிர்கால சக்திகளை கொத்தடிமைகளாய் பிரகடனப்படுத்திய சாதனைக்கு அடித்தளமிட்டவர்களாவோம்.

எனவே இத்தேர்தல் ஒரு இலட்சிய வேள்விக்கான தேர்தல். இத்தேர்தலில் எமது தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கொள்ளையை நிலைநிறுத்த எமது தேசிய ஒருமைப்பாட்டை சர்வதேசத்திற்கும் இலங்கை அரசிற்கும் மீண்டும் ஒருமுறை தெரிவிக்க எடுத்துக்கொண்ட சந்தர்ப்பத்திற்கு கிடைத்த இந்த வெற்றியை உரியமுறையில் பயன்படுத்தி எமது தமிழ்த் தேசியத்தின் இருப்பை நிலை நிறுத்துவோம்.

இப்பணிக்காக இத்தேர்தலில் உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் என்னை உங்களில் ஒருவனாக, உங்கள் பிரிதிநிதயாக பெரும் வெற்றிபெறச் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் இத்தேர்தல் வெற்றிக்காக பரப்புரைகள் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் உங்கள் நண்பன், உங்கள் பிரதிநிதி என்ற வகையில் உரிமையுடனும், நற்புடனும் நன்றி கூறுகின்றேன்.

இங்குள்ள இனங்கள் ஒன்றுபட்டால் எங்கோ மறைவர் எங்கள் பகைவர் இந்த இலட்சிய வழியில் என்றும் நான் உங்களுடன் இருப்பேன்' என்று கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .