2025 மே 05, திங்கட்கிழமை

'றூகம், கித்துள் குளங்களை இணைப்பதனால் இம்மாவட்டம் பாரிய நன்மையடையும்'

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள றூகம் மற்றும் கித்துள் குளங்களை இணைப்பதன் மூலம் இந்த மாவட்டம் பாரிய நன்மை அடையும் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர்ப்பாசன அபிவிருத்தி தொடர்பாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கித்துள் மற்றும் றூகம் குளங்களை ஒன்றாக இணைத்து அதை அபிவிருத்தி செய்வதன் மூலம் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த விவாசயிகளும் மக்களும் பாரிய நன்மைகளை அடைவார்கள்.

இந்தக் குளங்களை இணைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு சிறந்த போதியளவான நீர்ப்பாசனம் கிடைப்பதுடன், மாவட்டத்தில் வருடாந்தம் ஏற்படும் வெள்ளப்பெருக்கை  கட்டுப்படுத்த முடியும். அத்துடன், மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இதன் மூலம் சிறந்த குடிநீரையும் வழங்க முடியும்.

இந்தக் குளங்களை இணைத்து இதை அபிவிருத்தி செய்வது என்பது நீண்டகால முயற்சியாகும். அது இப்போது தான் நமக்கு கைகூடி இருக்கின்றது.

இந்தக் குளங்களில்  தற்போது 12 எம்.சி.எம் அளவிலான கொள்ளவு தண்ணீர் உள்ளது. ஆனால், இந்த இரண்டு குளங்களையும் ஒன்றாக இணைப்பதன் மூலம் 90 எம்.சி.எம் கொள்ளளவிலான நீரை பெற்றுக்கொள்ள முடியம். இந்த நிலையில் இதை புனரமைப்பதன் மூலம் பெரும் சமுத்திரமாக மாறுவதுடன,; தற்போது 7,000 ஏக்கரில் செய்யும் விவசாயத்தை 25,000 ஏக்கரிலும் செய்யமுடியும். மேலும், அதிகளான கரும்புச் செய்கையை செய்வதுடன், இன்னும் பல பயிர்ச் செய்கைகளையும் செய்ய முடியும்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சைக் குளத்திலிருந்து வழங்கப்படும் குடிநீர் ஒரு சில பகுதிகளுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது.

இந்த இரண்டு குளங்களையும் இணைத்து அபிவிருத்தி செய்வதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இன்னும் சில பகுதிகளுக்கு குடிநீரை வழங்க முடியும்' என்றார்.

இந்தக் கூட்டத்தில்; மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் ஐவன் டி சில்வா, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் இ.மோனராஜா,  கமநல அபிவிருத்தித்  திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X